வேலூர் மக்களவை தொகுதியில் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கு ரத்து செய்யப்பட்ட தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.
சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த ஏ.சி சண்முகம் பின்னர் பின்னடைவை சந்தித்தார். அதைதொடர்ந்து, திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், திமுகவின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் (திமுக+) – 4,85,340 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அதிமுக+) – 4,77,119 வாக்குகள்
(வித்தியாசம் – 8,141 வாக்குகள்)
நாம் தமிழர் – 26,995 வாக்குகள்
நோட்டா – 9,417 வாக்குகள்
வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வேட்பாளர் அதிக வாக்குக்களைப் பெற்றுள்ளார். திமுகவின் வெற்றியை உறுதி செய்தது வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி. திமுகவின் வெற்றி உறுதியானதையடுத்து, திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.