பிற்போக்குத்தனங்களையும் ஆதிக்கங்களையும் எதிர்ப்பவர்கள்மீது வன்முறையை எறிவது மதவாதிகளின் செயலாகிவருகிறது. இந்தமுறை அத்தகைய வன்முறை கும்பலுக்கு இலக்காகி இருப்பவர் பேராசிரியர் டாக்டர்.ராம் புன்யானி. சங் பரிவாரின் ஃபாசிசம், இந்திய ஜனநாயகம், தீவிர வலதுசாரி இந்துத்துவமும் அதன் விளைவுகளும் அம்பேத்கரும் இந்துத்துவ அரசியலும், இந்திய ஜனநாயகத்தில் முஸ்லிம்கள், ஜாதிகளும் மதவாதமும் என்று இந்தியப் பன்மைத்துவத்தை, ஜனநாயகத்தை, மறக்கடிக்கப்படும் அதன் வரலாற்றைத் தொடர்ச்சியாகத் தனது புத்தகங்கள் மற்றும் உரைகள் மூலமாகப் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் எழுத்தாளர்  ராம் புன்யானி.

உயிரி மருத்துவப் பொறியியல் துறையில் மும்பை ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் இவர், அடிப்படைவாத சக்திகளின் அரசியல் குறித்து பணியில் இருந்தபோதே தொடர்ச்சியாகப் பேசிவந்தார். புன்யானி முழு நேரமும் இந்தப் பணியைத் தொடரவேண்டி 27 வருடங்களாகத்தான் செய்துவந்த பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வும் பெற்றார். மத நல்லிணக்கத்திற்காகத் தொடர்ந்து பேசி வரும் இவருக்கு 2006-இல் தேசிய ஒருமைபாட்டிற்கான இந்திரா காந்தி விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு தொலைபேசி மூலமாக இரண்டு மிரட்டல் அழைப்புகள் வந்தன. ‘இந்துத்துவத்திற்கு எதிரான அவரின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் அல்லது அதற்கான விளைவுகளை அவர் எதிர்கொள்ள நேரிடும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ராம் புன்யானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மும்பை கமிஷனருக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதமும் எழுதியிருக்கிறார். கடந்த மார்ச் மாதம் ராம் புன்யானி விண்ணப்பித்தேயிராத பாஸ்போர்ட் குறித்து விசாரிக்க வந்திருப்பதாக சொல்லி அவரின் வீட்டிற்கு மூன்று பேர் வருகை தந்திருக்கிறார்கள். பேராசிரியர் அந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு, மிரட்டல் அழைப்புகளுக்கும் அந்த மூன்று பேருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஊடகங்களிடம் தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களால் குடும்பத்தார் தனது பாதுகாப்பைக் குறித்து மிகவும் பயப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவரின் இந்தப் புகாரைத் தொடர்ந்து எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் அவருக்கு உரிய பாதுகாப்பைக் கொடுக்கக்கோரி குரல் கொடுத்திருக்கிறார்கள்.  கோவிந்த் பன்சாரே,  கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கெளரி லங்கேஷ் வரிசையில் இவரின் பெயரும் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் அக்கறையுமாக உள்ளது.

எதிர்பார்க்க முடியாத, அச்சமூட்டும் அளவில் வலதுசாரி பிற்போக்குவாதங்கள் வலுப்பெற்று வளரும் இன்றைய சூழலில் மதவாத வெறுப்பரசியலுக்கு எதிரான குரல்கள், எழுத்துகள் பாதுகாக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன. இந்து வெறுப்பரசியலுக்கு எதிராக எழுதுகிறார், பேசுகிறார் என்ற காரணத்திற்காகவே இன்னொரு உயிரும் பறிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அனைவரின் பயமும்.