பெண்கள் வெளிப்படையாக பேசுவதற்குக்கூட தடைவிதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒரு பூ பூத்தது. அந்த பூவின் கனவு சிறந்த மருத்துவராக வேண்டும் என்று. கல்வி ஒன்றே நம் மக்களின் அடிமை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியுமென்று அந்த பூவிற்கு அப்போதே தெரிந்திருந்தது. ‘நீங்கள் பேசுவதற்கே தடைவித்திக்கப்பட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு கல்வியா?’ ஆம்! அந்தப் பகுதியில் அப்படித்தான் பெண்களை முழுவதுமாக ஒடுக்கி வைத்திருந்தார்கள்.
எத்தனைநாள்தான் இந்த பிற்போக்குத்தனங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அப்படியே இவர்களை எதிர்த்தால் என்ன கொலைதானே செய்துவிடுவார்கள். இந்த பயமுறுத்தலெல்லாம் என்னுடைய எதிர்காலத்தை ஒன்றும் செய்துவிடாது. நான் கல்வி கற்பேன், கடுமையாக தடைவிதிக்கப்பட்ட, துப்பாக்கிகளினால் மூலைமுடுக்குகளெங்கும் பயமுறுத்தும் தீவிரவாதிகளை எதிர்த்து கல்வி கற்பேன், இதுதான் என்னுடைய முடிவு, இதை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என அந்த சோளப்பூ முழுமையான தன்னை மனரீதியாக தயார்படுத்திக்கொண்டது. அந்த சோளப்பூவிற்கு மலாலா என்ற இன்னொரு பெயரும் இருந்தது. அந்த பூ பூமியில் ஜனித்த நாள்தான் இன்று.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகள் பெண்கள் கல்வி கற்க தடை விதித்திருந்தனர். கல்வி கற்க மட்டுமா? இன்னும் எத்தனைஎத்தனை தடைகள் அவர்கள், பெண்கள்மீது செலுத்தினார்கள். மக்களின் அடிப்படை உரிமைகளை, மனித உரிமை மீறல்களை பறித்துக்கொண்டிருந்த அந்தப் பகுதியில் மலாலா பிறந்தது இயற்கை தாயின் கனிந்த குணம்தான் காரணம். 12வயது சிறுமிக்கு அத்தனை விதிமீறல்களையும் கண்டு கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. பிபிசி உருது இணையதள வலைப்பூக்களில் தலிபான் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர்கள் படும் இன்னல்களை தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார். தன் தந்தையின் வழிகாட்டுதல் படி மலாலாவின் கவனம் முழுக்க பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து தங்கள் சூழ்நிலை இங்கு எப்படி இருக்கிறது என உலகம் மக்கள் அனைவருக்கும் தெரியும்படி எழுதிவந்தார். அந்த வலைப்பூ தளத்தில் குல்மக்காய் அதாவது பஸ்து மொழியில் சோளப்பூ என்ற புனைப்பெயரில் எழுதி நாளடைவில் மலாலா என்ற நிஜப்பெயரிலே எழுதினார்.
‘சிலர் பேய்களை பார்த்துப் பயப்படுவார்கள், சிலர் சிலந்திகளைப் பார்த்து பயப்படுவார்கள். ஆனால் நாங்கள் இங்கு மனிதர்களை பார்த்து பயந்து வாழ்கிறோம், இவர்கள் காட்டுமிராண்டிகள்’ என அம்மக்களின் வாழ்க்கையில் உறைந்துபோயிருந்த உணர்வுகள் அத்தனையும் எழுத்தாக மாற்றி உலகத்தின் கவனம் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகளை நோக்கி திரும்பச் செய்தார்.
தொடர்ந்து அந்த சிறுமியின் செயல்பாடுகளை கவனித்துவந்த அந்த தலிபான் தீவிரவாதிகள் எப்படியாவது அவளைக் கொலைசெய்ய திட்டம் தீட்டினர். அக்டோபர் 9 2012ஆம் ஆண்டு வழக்கம்போல பள்ளி முடிந்து திரும்பிய மலாலாமீது குண்டுமழை பொழிந்தனர். அவ்வளவு சீக்கிரம் இயற்கைதாயின் மகளை அழித்துவிடமுடியுமா என்ன? பின்பு சிகிச்சை மூலம் மீண்ட மலாலாமீது பல உலக தலைவர்களின் கவனம் விழுந்தது.
மலாலாவுக்காக உலகம் முழுவதும் பலர் ஆதரவுக்கரங்கள் நீட்ட ஆரம்பித்தன. மலாலா தனது 11 வயதில் பாகிஸ்தானின்ன் மிக உயர்ந்த விருதான ‘சிதாரே ந் சுஜாத்’ எனும் தைரியமான பெண் என்ற விருதை அரசு அளித்து பாராட்டியது. நாளுக்குநாள் பல கொலைமிரட்டல்கள் அதிகரித்துவந்த நிலையில் தனது சமூக சேவையை மலாலா ஒருபோதும் நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருந்தார்.
அஞ்சாத இந்த சிறுமியின் செயல்பாடுகளை கண்டு உலகமெங்கும் உள்ள அனைத்து செயல்பாட்டாளர்களும் வியக்க ஆரம்பித்தனர். பல விருதுகள் மலாலாவை நோக்கி வந்தது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றவர் மலாலா மட்டுமே ஆவார். மலாலாவின் பிறந்த நாளான ஜூலை 12ஆம் தேதியை மலாலா தினமாக 2014ஆம் ஆண்டு, ஐநா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கடுமையான கட்டுபாட்டில் பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் மலாலாவின் செயல்பாடுகள் தொடரவேண்டும், அவர் இன்னும் இருளில் தவிக்கும் பெண்களின் நிலையை உலகறிய செய்ய வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் மலாலா யூசப்சையி.