நாட்டில் நிலவும் வேலையின்மை மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே மோடி, “இந்தியா விண்ணில் உள்ள சாட்டிலைட்டை சுட்டு வீழ்த்தி உலக அரங்கில் முக்கியமானதொரு விண்வெளி சக்தியாக உருவெடுத்ததாகக் கூறினார்.” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலாஷ் யாதவ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜியும் ராகுல் காந்தியும் “இது நமது விஞ்ஞானிகளின் சாதனை… இதை மோடி தன்னுடையதாக பெருமைப்பட்டுக்கொள்கிறார். இது அவருடைய மற்றுமொரு நாடகம்” என்று குற்றம்சாட்டினார்.
தன்னுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் ‘இது தெளிவான தேர்தல் விதிமுறை மீறல்’ என்று புகார் கொடுக்கப்போவதாக கூறினார். இன்றைய அறிவிப்பு தேர்தல் நேரத்தில் மக்களைத் திசைதிருப்பும் காரியமாகவும் அதே நேரம் தங்கள் கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடும் விதமாகவும் இருக்கிறது என்றார்.
இந்த நேரத்தில் இந்த சோதனையைச் செய்யவேண்டிய அவசியம் இல்லை, இது பாஜக எனும் மூழ்கும் படகிலிருப்போருக்குத் தேவையான ஆக்ஸிஜன். மேலும் அவர் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி என்பது பல வருடச் செயல்பாடு. மோடி வழக்கம்போல எல்லா வெற்றிக்கும் அவர் மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறார். ஆனால் இந்தப் பாராட்டும் புகழும் உண்மையாகச் சென்று சேரவேண்டியது நமது விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும்தான். அவர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள். அவர்கள்மீதான மதிப்பு மேலும் மேலும் உயர்கிறது. இதை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய DRDO விஞ்ஞானிகளுக்கும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு)இன் சாதனையை எண்ணித்தான் இந்தத் தருணத்தில் மிகப் பெருமையாக உணர்வதாகத் தெரிவித்தார். அவர் மேலும் “நமது பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்தைத் தெரிவிப்பதாகச் சொன்னார்.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதம் (ASAT) என்ற ஏவுகணை, குறைந்த புவி சுற்றுப்பாதையில் செயல்படும் செயற்கைக்கோளை இன்று சுட்டு வீழ்த்தியது. இதன்மூலம் உலக அரங்கில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்குப் பிறகு இந்தியா நான்காவதாக இந்தப் பட்டியலில் இணைவதாக மோடி தெரிவித்தார்.
காங்கிரஸின் மற்ற தலைவர்களான அகமது படேல் மற்றும் ரண்டீப் சிங் சுர்ஜேவலா விஞ்ஞானிகளையும் அரசு ஏஜென்சிகளையும் பாராட்டுவதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மம்தா பானர்ஜியின் கருத்துக்களையே எதிரொலித்தனர். (ASAT) திட்டத்தைத் தங்களுடைய காங்கிரஸ் அரசுதான் ஆரம்பித்தது என்றும் அது பலன் தரும் நேரத்தில் மோடி அதைத் தன்னுடைய சாதனையைப்போல பெருமைப்பட்டுக் கொள்கிறார் என்ற பட்டேல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
இந்த மிஷன் சக்தி எனும் நடவடிக்கை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய (ASAT) கொண்டு வெறும் மூன்று நிமிடங்களில் நிறைவுபெற்றதாக மோடி தெரிவித்தார். இந்த சாதனை இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக உன்னதமானது இதற்குக் காரணமான DRDO மற்றும் அனைத்து துறையைச் சார்ந்த விஞ்ஞானிகளை பாராட்டுவதாக தெரிவித்தார்.
ஒரு பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டதற்கு உண்மையான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்த விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் வழக்கம்போல பின்னுக்குத் தள்ளிவிட்டு அரசியல்வாதிகள் அதை தங்களுடைய வெற்றிபோலக் கொண்டாடுவதை மக்கள் என்றுமே ஆதரித்ததில்லை.