முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் திட்டமில்லை என அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவியிலிருந்தவர் மணிகண்டன். நேற்றிரவு (ஆகஸ்ட் 7) தமிழக அமைச்சரவையில் மணிகண்டனை விடுவித்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். முதல்வர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
அரசு கேபிள் தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்ததற்காக மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தொழில்நுட்பத்துறையை கூடுதல் பொறுப்பாக ஏற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட மணிகண்டன் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு என்றும் நீக்கத்திற்கான காரணமும் தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அமைச்சர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.