13 வருடங்களுக்கு மேலாகக் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணியப்பன் என்ற 85 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதால் அவருக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதின் முறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செயல்விளக்கம் அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராம இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர், கூலித் தொழிலாளி கண்ணியப்பன் (வயது 85). இவரின் மனைவி கண்ணியம்மாள் 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது, கண்ணியப்பனுடன் அவரின் ஒரே மகள் கருப்பாயி (வயது 55) உடன் வசித்து வருகிறார். இவரும் இவரின் ஒட்டுமொத்த குடும்பமும் வீரம்பாக்கம் புதூர் கிராமத்தில் 13 வருடங்களுக்கும் மேலாக மரம் வெட்டும் வேலை செய்து கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொத்தடிமைகளிலிருந்து மீட்கப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் மருதாடு கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் யாரும் இதுவரை வாழ்நாளில் எந்த ஒரு தேர்தலிலும் வாக்களித்தது இல்லாததை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதன்மூலம் கண்ணியப்பனும் அவர் குடும்பமும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் நேற்று, கண்ணியப்பன் வீட்டுக்கு நேரில் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பதைச் செயல்விளக்கம் அளித்தார். மேலும், மருதாடு கிராம இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 23 குடும்பங்களைச் சேர்ந்த வாக்காளர்களிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாங்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் இயந்திரம் குறித்தும் செயல்விளக்கம் அளித்தார். இதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் கண்ணியப்பன் மற்றும அவரது குடும்பத்தினர் முதல் முறையாக நாளை (18-ம் தேதி) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ” திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 85 வயது முதியவரான கண்ணியப்பனும் அவரின் குடும்பமும் தற்போது முதல் முறையாக அவர்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளார்கள். இதனை முன்னிட்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பதற்கு வாக்காளர் பட்டியலில் வந்தவாசி வட்டத்தில் 7 நபர்களும், போளுர் வட்டத்தில் 10 நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து கண்ணியப்பன் கூறுகையில், ”85 வயதில் முதல் முறையாக ஓட்டு போடப் போகிறேன். என்னுடன் என் குடும்பமும் ஓட்டு போட உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஓட்டு போட ஏற்பாடுகள் செய்துகொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி” என்றார். இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இதுநாள் வரை வாக்களித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.