2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சையது பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராகத் தற்போது செயல்பட்டு வந்த ஹபீஸை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தீவிரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளது.

ஹபீஸ் சையது 2008 மும்பை தாக்குதலில் (26/11 Attack) லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்னிலையில் செயல்பட்டு தாக்குதலை அரங்கேற்றினார். அமெரிக்கா இவரை உலகளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது மட்டுமல்லாமல் அவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 10 மில்லியன் டாலர் சன்மானத் தொகையாக அறிவித்தது. மேலும் அத்தாக்குதலின் 10ஆம் ஆண்டு நினைவினை ஒட்டி ஹஃபீஸை கைது செய்யுமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. அப்போது மேலும் 5 மில்லியன் டாலர் சன்மானத் தொகையையும் அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக தஞ்சமடைந்து சுதந்திரமாக உலவிவந்த ஹபீஸ் சையதை கைது செய்யுமாறு உலகளவிலான அழுத்தத்தால் இம்மாத தொடக்கத்தில் அவர்மீது வழக்குப் பதிவு செய்து தேடத் தொடங்கியது பாக். அரசு.

பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாபீஸ் சையது லாஹூரிலிருந்து குஜ்ரன்வாலாவிலுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் ஆஜராகச் சென்ற வழியில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு ஹஃபீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டு 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பஞ்சாப் நீதிமன்றம் அவர்களது சிறைவாசத்தை நீட்டிக்க மறுத்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இன்னும் சில தினங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்காக பாக். பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது.