குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்டமாகக் கேரளா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) நடைபெற்றது.
மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையம் ஒன்றில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்ப்பட்ட மோதலில், வாக்களிப்பதற்காக நின்றிருந்த ஒருவர் கொல்லப்பட்டார். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், டோம்கால் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பெட்ரோல் குண்டுகளை வீசியதில், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 11.22 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்:
அசாம்- 72.49%
கேரளா- 67.68%
பீகார்- 54.91%
கோவா- 68.37%
குஜராத்- 56.27%
ஜம்மு காஷ்மிர்- 11.22%
கர்நாடகா- 60.75%
மஹாராஷ்டிரா- 52.53%
ஒடிசா- 54.18%
திரிபுரா- 69.09%
உத்தரபிரதேசம்- 53.78%
மேற்குவங்கம்- 74.57%
சத்தீஸ்கர்-59.16%
தாத்ரா நாகர் ஹாவேலி- 56.81%
டாமன்-டையூ- 64.82%