இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியும், அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் நேற்று (மே 30) பதவியேற்றுக்கொண்டனர்.
2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. இதில், 303 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையாக அபார வெற்றி பெற்றது. இதனால் இரண்டாவது முறையாகப் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றார் நரேந்திர மோடி. இந்நிலையில் நேற்று (மே 30) மாலை 7 மணிக்கு இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார் மோடி. இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைதொடர்ந்து, மோடியுடன் இணைந்து அமைச்சரவையில் இடம்பெறுபவர்களும் நேற்று (மே 30) பதவியேற்றனர்.
சுமார் 6000 விருந்தினர்கள் கலந்து கொண்ட, இவ்விழா டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜக அமைச்சரவையில் யார்? யார்? இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் இருந்த நிலையில், இந்த அமைச்சரவையில், அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அல்லது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி தொகுதியின் எம்.பியுமான ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கிடைக்கும் என்று அதிமுக வட்டாரங்களிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் பல்வேறு புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட
கூட்டணிகளுக்கும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
கேபினட் அமைச்சர்கள் 25 பேரின் பெயர் பட்டியல்:
1. நரேந்திர மோடி
2. ராஜ்நாத் சிங்
3. அமித் ஷா
4. நிதின் கட்கரி
5. சதானந்த கவுடா
6. நிர்மலா சீதாராமன்
7. ராம்விலாஸ் பஸ்வான்
8. நரேந்திரசிங் தோமர்
9. ரவிசங்கர் பிரசாத்
10. ஹர்சிம்ரத் பாதல் (அகாலி தளம்)
11. தாவர்சந்த் கெலோட்
12. ஜெய்சங்கர் (முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர்)
13. ரமேஷ் பொக்ரியால்
14. அர்ஜூன் முன்டா
15. ஸ்மிரிதி இரானி
16. ஹர்ஷவர்தன்
17. பிரகாஷ் ஜவடேகர்
18. பியூஷ் கோயல்
19. தர்மேந்திர பிரதான்
20. முக்தார் அப்பாஸ் நக்வி
21. பிரகலாத் ஜோஷி
22. மகேந்திரநாத் பாண்டே
23. அரவிந்த் சாவந்த்
24. கிரிராஜ் சிங்
25. கஜேந்திர சிங் ஷெகாவத்
முன்னதாக, 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றபோது, அந்த அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லியும், வெளியுறவுத் துறை அமைச்சராக சுஸ்மா சுவராஜும் பதவிவகித்தனர்.
ஆனால், இந்த முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த சுஷ்மா சுவராஜிற்கு இந்த அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபால், நிதியமைச்சர் பதவி வகித்த அருண் ஜெட்லியும் தமக்கு பதவி வேண்டாம் என்று மோடிக்கு கடிதம் எழுதியிருந்ததால் அவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.