மோடி தனக்கு முந்தைய பிரமர்களிடம் இருந்து நிறைய விதங்களில் வித்தியாசமானவர் – குறிப்பாக நேர விசயத்தில். மற்ற பிரதமர்கள் கட்சி, அரசியல், நிர்வாகம் என அம்மாஞ்சியாய் இருந்தால் மோடி ஊடகங்களில் தன்னுடைய் பிம்பம் எப்படி இருக்கிறது, மக்கள் மனங்களில் தன்னைப் பற்றியே சிந்தனையே சதா இருக்க வேண்டும் என யோசித்து அதன்படி மட்டுமே தன் அரசியல், நிர்வாகம், பேச்சு, நடை, உடை, பாவனைகளை வடிவமைப்பவர். நம் வரலாற்றில் அவரளவுக்கு டி.வி, சமூகவலைதளங்களுக்காக வாழும் மற்றொரு பிரதமர் இல்லை. நாம் என்னவாக இருக்கிறோம் என்பதல்ல, என்னவாகத் “தெரிகிறோம்” என்பதே ஆட்சியில் முக்கியம் என அவரளவுக்குப் புரிந்து கொண்ட மற்றொரு பிரதமர் இல்லை.

ஒரு ஆட்சியை உண்மையில் பிரதமரோ, மந்திரிகளோ அல்ல அதிகாரிகளும அவர்களுக்குக் கீழுள்ளோரும் தான் நிர்வாகிக்கிறார்கள். பிரதமரின் பணி இவர்களுக்கு பொதுவான ஒரு வரைபடத்தை அளிப்பது; நெருக்கடியின் போது ஒரு திசையை காட்டுவது. மக்களுக்கு இந்த நடவடிக்கைகளுக்கான லட்சியத்தை, விழுமியத்தை, அர்த்தத்தை உண்டாகி அளிப்பது; அதை அவர்கள் நம்பும்படியாய் சித்தரிப்பது. ஒன்றை நிகழ்த்துவது அதிகாரிகளின் வேலை எனில், அது நிகழ்வதாய் மக்களுக்குக் காட்டி நம்ப வைப்பது, அதை மகத்தானதாய் அவர்களைப் புல்லரிக்க வைப்பது ஒரு தலைவனின், பிரதமரின் வேலை.

இந்த துல்லியமான வித்தியாசத்தை மன்மோகன் சிங் புரிந்துகொள்ள வில்லை. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த சில மக்கள் நலத்திட்டங்களை மோடி அரசு புதிய பெயரிட்டு பொட்டலங்கட்டி ஜிகினா ஒட்டி அலங்கரித்து அளிப்பதை மட்டுமே மோடி செய்திருக்கிறார் என மன்மோகன் சிங் அடிக்கடி புகார் சொல்வதுண்டு. அது ஓரளவுக்கு உண்மையே. ஆனால் ஒரு திட்டத்தை அழகாக கவர்ச்சிகரமாய் முன்வைப்பது மட்டுமல்ல, அதை காட்சிபூர்வமாய் நிகழ்த்தி அதில் மக்கள் தாமும் பங்கேற்பமாய் நம்ப வைக்கவும் மோடிக்குத் தெரியும். மன்மோகன் சிங்கின் அமைச்சரவை இந்த விசயங்களில் ஒரு பெரிய பூஜ்யம். அவர்கள் ஆட்சி என்றால் நிர்வாகம் என தவறாகப் புரிந்து கொண்டிருந்தார்கள்.

ஆம் ஆட்சி என்றால் நிர்வாகமே, ஆனால் கடந்த பத்தாண்டுகளில் நிர்வாகம் என்பது பின்னுக்கு போய் விட்டது. இன்று எல்லாமே காட்சிதானே ஒழிய அதன் உள்ளுறைந்த உண்மை அல்ல. நிர்வாகத்தை அரசு எந்திரம் செய்ய பிரதமரின் வேலை அதை வைத்து வித்தை காட்டுவது மட்டுமே. இன்றைய பின்னமைப்பியல் அரசியல் உலகில் ஒன்று ‘அதுவாக’ இருப்பதனால் அல்ல அதுவாகத் ‘தோன்றுவதனாலே’ முக்கியத்துவமும் உண்மைத்தன்மையும் பெறுகிறது. மோடி அதனால் தான் எல்லா விசயங்களிலும் தோற்றத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்.

அவர் அறிமுகப்படுத்திய ஒரு திட்டம் நிறைவேறியதும் (உஜ்ஜாலா) அவரது கட்சித்தொண்டர்கள் வீடுவீடாய் சென்று பலனடைந்த மக்களிடம் போய் சிலிண்டருடன் போட்டோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் பரப்புகிறார்கள். தன்னைப் பற்றி, தனது ஆட்சியின் சாதனைகளைப் பற்றி சினிமா எடுப்பவர்களை மோடி ஊக்கப்படுத்துகிறார். 24*7 தன்னுடைய புகழை ஊடகங்கள் முழங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். இது அகங்காரமோ சுயபிரேமையோ அல்ல. இதுவே அவர் குஜராத் முதல்வராக இருந்ததில் இருந்து இன்று இந்திய இரண்டாம் முறையாக பிரதமராக இருக்கும் போது வரை இது மட்டுமே அவருக்குத் தெரிந்த ஒரே வெற்றி பார்முலா. சொல்லப் போனால் தன்னையறியாதே அவர் இந்த பின்நவீன காலத்தின் அரசியல் பார்முலாவை புரிந்து கொண்டு பின்பற்றி வருகிறார்.

2008லேயே மோடி சமூகவலைதள கணக்குகளைத் தொடங்கி அங்கு கம்புசுற்ற ஆரம்பித்து விட்டார். ஆனால் மன்மோகன் சிங்கை விடுங்கள் ராகுல் காந்தி கூட மிக சமீபமாகத் தான் சமூகவலைதளங்களை அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார். காங்கிரசில் உள்ள பிற பெருந்தலைகளை, பழம்பெருச்சாளிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். பாஜக தனது சமூகவலைதள் பிரச்சாரத்துக்கும் ஊடக பிரச்சாரத்துக்கும் சில நூறு கோடிகளை அள்ளி எறியும் என்றால் காங்கிரஸ் கட்சியோ தன் சமூகவலைதள செல்லுக்கு அதில் நூறில் ஒரு பங்கைத் தான் செலவிடும். முதலில் அதற்குப் பொறுப்பேற்றவர் தீபிந்தர் ஹூடா எனும் இளம் எம்பி. அவர் தனக்கு ஏற்பட்ட சிரமங்களைச் சொல்லும் போது எப்படி பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களிடம் ட்வீட்களை பதிவேற்றும்முன்பு ப்ரிண்ட் அவுட் எடுத்து ஒப்புதல் பெறும் கொடுமையெல்லாம் நிகழ்ந்தது என்கிறார். இவர் ஒப்புதல் வாங்கும் முன் அந்த ட்வீட் மதிப்பை இழந்து விடும். நவீன ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன, அவற்றின் தாளலயங்கள் என்ன, எவ்வளவு வேகமாய் தீவிரமாய் அவை தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வல்லவை, தகவல்களே இன்றைய மக்களின் உலகம் என்பதெல்லாம் தெரியாமலே காங்கிரஸ் நீண்ட காலம் இருந்து விட்டிருக்கிறது. 2017இல் திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் சமூகவலைதள செல்லுக்குப் பொறுப்பேற்ற பிறகு தான் ட்விட்டர் உலகில் காங்கிரஸ் வலுவாக காலடி எடுத்து வைத்து பாஜகவுக்கு சற்றேனும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் அவரையும் காங்கிரஸின் உள்வட்டம் விரைவில் துரத்தி விட்டது. காங்கிரஸ் இன்னமும் நவீனத்திலேயே வயதான டினோசராக மாட்டிக்கொண்டிருக்கிறதென்றால் பாஜக மோடியின் துணையுடன் பின்நவீன உலகில் அவெஞ்சர்ஸ் பட சூப்பர்ஹீரோக்களைப் போல பறந்து பறந்து விளையாடுகிறது.

டிமானிடைசேஷன் அறிவிப்பை மோடி எப்படி இரவில் செய்து மக்களை தவிக்கவிட்டார் என நினைவிருக்கும். அப்போது முதல் இப்போது வரை இரவில் அறிவிப்புகள் செய்கிற பழக்கத்தை அவர் விடவில்லை. சரி மோடி ஏன் ‘வெள்ளைச்சாமி’ ஆனார்? இந்த கேள்விக்கான விடையை நாம் மேற்சொன்ன பின்னணியில் வைத்தே பார்க்க வேண்டும்.

“2019 – How Modi Won India” எனும் நூலில் ராஜ்தீப் சர்தேசாய் இதைப் பற்றி பேசும் போது ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பை செய்கிறார் – மன்மோகன் சிங்கின் அரசு தன் அறிவிப்புகளை எந்த நாளிலும் வெளியிடும். ஆனால் மோடி வார இறுதியில் தான் வெளியிடுவார். மன்மோகன் சிங்கின் அரசு காலையிலே அறிவிப்பை வெளியிடும். ஆனால் மோடியோ எப்போதும் இரவில் தான் “பாடத்” தொடங்குவார். இப்படி செய்வதால் மோடிக்கு என்ன அனுகூலம்?

காலையில் நீங்கள் அறிவிப்புகளை வெளியிடும் போது மதியமே நிருபர்கள் எதிர்க்கட்சியினரிடம் இருந்து அதற்கு எதிர்வினைகளைப் பெற முடியும். இரவில் எட்டு மணிக்கு செய்தி அலைவரிசைகளில் பிரைம் டைம் விவாதங்கள் நடக்கும். அதற்கு சற்று முன்போ பின்போ தன் அறிவிப்பு உரையை நிகழ்த்தும் மோடி செய்தி ஊடகங்களை மொத்தமாக அதிர்ச்சிக்குள்ளாக்கி தாக்குதல் தொடுக்கும் யுத்தமுறையை பின்பற்றுவதாக சர்தேசாய் சொல்கிறார் (நள்ளிரவில் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத திசையில் இருந்து எதிரிப்படை ஒரு நாட்டைத் தாக்கும் தந்திரம்). ஒரு சேனல் அன்று பொருளாதாரப் பிரச்சனை ஒன்றைப் பற்றியோ சமூக அரசியல் சிக்கலை பற்றியோ விவாதக் களம் ஒன்றை பிரைம் டைமுக்காக தயார் பண்ணியிருப்பார்கள்; அதில் பேசுவதற்கு நிபுணர்களும் வந்திருப்பார்கள். அப்போது தான் ‘வெள்ளைச்சாமி’ பாடப்போவதாய் செய்தி வரும். இப்போது எல்லா செய்தி அலைவரிகளும் திடுக்கிடும், குழம்பும், என்ன செய்வதெனத் தெரியாமல் பரிதவிக்கும். வேறுவழியின்றி அவரது உரையை இந்த அலைவரிசைகள் நேரடி ஒளிபரப்பு செய்யும். எதிர்பாராத் தாக்குதல் என்பதால் சமூகவலைதளஙக்ள், வானொலி, குறுஞ்செய்தி என தகவல் வேகவேகமாய் நாடுமுழுக்கப் பரவும். மோடியின் அறிவிப்பை எப்படி எதிர்கொள்வது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றெல்லாம் யோசிக்க செய்தியாளர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் நேரமிருக்காது. மக்களுக்கும் அதைப் புரிந்து கொள்ள அவகாசம் இருக்காது. அவர்கள் அவரது கருத்துக்களை பயத்திலும் குழப்பத்தில் அப்படியே எடுத்துக் கொள்வார்கள். ஒட்டுமொத்த தேசத்தின் பகுத்தறிவையும் மோடி இப்படி ஸ்தம்பிக்க செய்து விடுவார்.

அது மட்டுமல்ல, அவர் பேசி முடித்ததும் இரவு 9 மணிக்கு மேல் அவசர அவசரமாக விவாதங்களை செய்தியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டி வரும்; இதில் பேசுகிற ஏற்கனவே குழம்பியிருக்கிற நிபுணர்களுக்கும் பிதற்றுவதைத் தவிர வேறு வழியிருக்காது. மோடியின் சமயோஜிதத்தின் முன் உலகமே மண்டியிட்டு விட்ட ஒரு பிம்பம் தோன்றும். வார இறுதி பிரைம் டைம் விவாதங்கள் என இரு நாட்களும் தொடர்ந்து திங்கட்கிழமையும் மோடியின் அறிவிப்பைப் பற்றியே மொத்த தேசமும் பேசிக்கொண்டிருக்கும். இது வேறெப்போது அவர் அறிவிப்பை செய்தாலும் நடக்குமா சொல்லுங்கள்?

இப்போது கொரோனா குறித்த தனது மூன்றாவது அறிவிப்பை மோடி எப்போது செய்வார் என தேசமே காத்துக்கிடக்கிறது. இன்னும் சில வாரங்கள் ஊரடங்கை நீடிப்பார் என நமக்கெல்லாம் தெரியும். ஆனாலும் மோடியின் எதிர்பாராமை என ஒன்று இருக்கிறதே – அவர் இந்த முறை நிச்சயமாய் கற்பனைக்கு அப்பாலான எதாவதொன்றை சொல்லுவார் என ஒவ்வொருவரும் நினைக்கிறோம். அதனாலே அவர் எதைச் சொன்னாலும் ஏதோ உலகக்கோப்பை இறுதியாட்டத்தின் இறுதி ஓவரைப் பார்க்கிற உணர்வு நமக்கு இருக்கும்.

ஒரு தகவலைக் கசிய விடுவது, அதை வைத்து மக்களிடையே எதிர்பார்ப்பை உண்டுபண்ணுவது, என்னவாகுமோ என பதற்றத்துடன் நெஞ்சிடிக்க இருக்க வைப்பது, எதிர்பார்ப்பை முறியடித்து மற்றொன்றை சொல்லுவது என மோடி பயன்படுத்துவது கிட்டத்தட்ட விளம்பரத் துறையிலும் கார்ப்பரேட் மார்க்க்கெட்டிங்கிலும் பயன்படுத்தப்படும் யுத்திகள் தாம். உ.தா., “புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா?” ஞாபகம் இருக்கிறதா? நகரமெங்கும் விளம்பரத் தட்டிகள் இக்கேள்வியை எழுப்பின பின் பலரும் அதன் மர்மத்தை பற்றி யோசித்தபடி இருந்தனர். அப்படி யோசிக்க வைத்ததனாலே அந்த விளம்பரம் வெற்றி பெற்றது. ஒரு சினிமா வெளியாகும் முன்பான சில மாதங்களிலும் இத்தகைய விளம்பர வியூகங்கள் பயன்படுத்தப்படும். ஆனாலும் மோடி இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் மார்க்கெட்டிங் வித்தகர்.

அவர் டீமானிடைசேஷன் அறிவிப்பை செய்த இரவு நினைவிருக்கும். அன்று நேரலையாக டிவியில் அவரது பேச்சைக் கேட்டவர்களுக்கும் முதல் 20, 30 நிமிடங்கள் அவர் ஏதோ பொருளாதாரம், கறுப்புப்பணம் என சம்மந்தமில்லாமல் பேசுவதாகத் தோன்றியது. ஆனால் எதையோ சொல்லப் போகிறார் எனும் திகிலும் இருந்தது. சட்டென அவர் 500, 1000 ரூ நோட்டுகள் இனி செல்லாது என்ற போது நமக்கு ஏற்பட்ட உணர்வை எந்த மர்ம சினிமாவின் கிளைமேக்ஸ் திருப்பமும் ஈடுசெய்ய முடியாது.

மோடி தன் அதிகாரத்தை இப்படி அதிர்ச்சி யுக்திகள் மூலம் ஜனங்களின் மனங்களிலும் உடல்களிலும் உணரச் செய்பவர். அவரை நீங்கள் மறந்து ஒரு நாள் கூட வாழ முடியாது என்னும் அளவுக்கு.

ஆனால் இந்த பதற்றத்தையும் அவர் தொடர்ந்து தந்து மக்களை அலுப்படைய செய்ய மாட்டார். ஒரு திரைக்கதையாசிரியரைப் போல ஒவ்வொரு மாதமும் ஒரு திருப்பத்தை திட்டமிடுகிறார். திரைக்கதையின் அடிப்படை விதிகளில் ஒன்று ஒரு காட்சியில் மகிழ்ச்சியும் உற்சாகமும் என்றால், அதற்கு அடுத்த காட்சி கண்ணீரும், நம்பிக்கையும் என உணர்வுநிலை மாற வேண்டும், அடுத்து சிரிப்பு, அடுத்து கோபம் என மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது. மோடி இந்த திரைக்கதையை மிக பிரம்மாண்டமான அளவில் தேசம் முழுக்க படமாக எடுக்கிறார். நாம் ஒவ்வொருவரும் அதில் பாத்திரம். அவரது ஒரு அறிவிப்பு கொண்டாட்டமானது, என்றால் மற்றொன்று அதிர்ச்சியாக இருக்கும், அதை அடுத்து டிமானிடைசேஷன், சமூக விலக்கம் போல வதையான அனுபவம், அதை அடுத்து நம்மை சற்று ஆறுதல் கொள்ள வைக்கும் ஒன்று, அப்பாடா என இருக்கும் போது புல்வாமா தாக்குதல் போல ஒரு ஆக்‌ஷன் டிராமா, அதை அடுத்து இரங்கல், ஆற்றாமை, அழுகை டிராமா, அதை அடுத்து தேசபக்தி டிராமா, அதை அடுத்து பழிவாங்கும் டிராமா, வெறித்தன தேசிய டிராமா … இப்படி போய்க்கொண்டே இருக்கும்.

மோடி இப்படித் தான் வெள்ளைச்சாமி 2.0 ஆனார். அதென்ன 2.0? அவர் பாடும் போது ஊரே உஷாராகும். ஆனால் இவர் பாடும் போது தேசம் முழுக்க எழுந்து நின்று அவருடம் பாடும்.