உத்திரபிரதேச காவல்துறை யோகிஆதித்தயாநாத்தின் அடியாட்களைபோல செயல்படுகிறது என்ற விமர்சனங்கள் சமீப காலத்தில் ஓங்கி ஒலித்து வருகின்றன. அதற்கான காட்சிகளும்தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரமும் மனித உரிமை மீறல்களும் பெருமளவில் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக உத்திரபிரதேசம் மாறிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக ஊடகவியலாளர்கள் கடுமையாக வேட்டையாடப்பட்டுகொண்டிருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாக 3 பத்திரிக்கையாளர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளது காவல் துறை.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஒருவருடத்திற்கு முன்பு தான் வீடியோ கால் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தன்னோடுவாழ விருப்பமா என்று கேட்டதாகவும் அந்த வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். இந்த வீடியோ காட்சியை டெல்லியைச் சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள கனோஜின் வீட்டிலிருந்து, அவரை லக்னோவுக்கு அழைத்துச் சென்ற உத்தரப் பிரதேச போலீசார் அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரையும் உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், யோகி ஆதித்யநாத் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தைப் பரப்பியதாக கோராக்பூரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களில் மட்டும் 4 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 500இன் கீழ் அவதூறு கருத்துக்களை பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 (மோசடி/ நேர்மையற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கனோஜியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் 500ஆவது பிரிவின் கீழ் அவதூறு கருத்துகளை பரப்புவது என்பது குற்றமாகும். இதில், காவல் துறை நேரடியாகச் செயல்படமுடியாது. சட்ட ரீதியிலான அணுகுமுறை மூலமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த பிரச்சனையை அணுகியிருக்கலாம். ஆனால், அவரது பதவியை வைத்துக் காவல் துறையை அவர் விருப்பபடி செயல்படவைக்கிறார் என உத்தரப் பிரதேச சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66இன் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதும் அபத்தமானது எனக் கூறுகின்றனர்.
மனித உரிமை போராளிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பாஜக ஆட்சியில் சுதந்திரமும், பாதுகாப்பும் இல்லை என்பது சமீபகாலமாக நடந்து வரும் நிகழ்வுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.