ராதாபுரம் தேர்தல் வழக்கில் அதிமுகவின் இன்பதுரை மனுவை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் அப்பாவு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இன்பதுரையும் திமுக வேட்பாளராக அப்பாவும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். 203 தபால் வாக்குகள் செல்லாது என கூறப்பட்டு எண்ணப்படவே இல்லை என்றும், கடைசி மூன்று சுற்றுகளான 19, 20, 21 ஆகிய சுற்றுகள் எண்ணப்பட்டபோது வாக்கு எண்ணும் இடத்திலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதாகவும் அந்த மனுவில் அப்பாவு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அதேசமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் ராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்று நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில், அப்பாவு தரப்பில் இன்று(அக்டோபர் 14) கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். மேலும், வழக்கு பட்டியலிட்ட பிறகே விசாரணைக்கு ஏற்கப்படுமெனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.