சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காகத் தமிழகக் காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு தனிக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் டி.ஜி.பி. ரவி தலைமையில் இந்தப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் காவல் நிலையங்களுக்கென பிங்க நிற ரோந்து வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.அதில் அம்மா பேட்ரோல் என எழுதப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்களும் எழுதப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் இந்த ரோந்து வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை அடுத்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் காவல் நிலையங்களுக்கு பிங்க் ரோந்து வாகனம் வழங்கப்படவுள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்துகிறது. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் தமிழகம் முழுவதும் விரைவில் விரிவுபடுத்த வேண்டுமென மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.