அரசியல் கட்சியினரின் கொடியை வாகனங்களில் கட்டி கொள்வதற்கோ, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வதற்கோ, மோட்டர் வாகன சட்டபடி எவ்வித அனுமதியும் இல்லையென உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது போக்குவரத்துத்துறை.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடிகளைக் கட்டிக்கொண்டு, தங்களது தலைவர்களின் படங்களை வைத்துக்கொண்டு செல்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இதற்குத் தடை விதித்தாலே 50 சதவீத குற்றங்கள் குறைந்துவிடும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வது ஆகியவற்றிற்கு மோட்டார் வாகன சட்டபடி அனுமதி உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் இதுகுறித்து உள்துறை செயலர் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக போக்குவரத் துறை சார்பில் பதில்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது, தங்களின் தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வது, பதவிகளைப் பெரிதாக எழுதிக் கொள்வது ஆகியவற்றிற்கு, மோட்டர் வாகன சட்டபடி எவ்வித அனுமதியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
கடந்த முறை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், கட்சி கொடி மற்றும் தலைவர் படம் போன்றவை வைப்பது மக்களையும், போலீசாரையும் மிரட்டும் வகையில் உள்ளதாகக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற செயல்களைத் தவிர்த்தாலே நாட்டில் 50 சதவீத குற்றங்கள் குறையும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.