இன்று செஞ்சியில் வாரச் சந்தை.

ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, கோழிகள், கோழிக் குஞ்சுகள், கருவாட்டுச் சந்தை, காய்கறிகள், மளிகை சாமான்கள், விவசாய கருவிகள், விதைகள், நாற்றுகள், துணிமணிகள், சர்பத், கூழ், திண் பண்டங்கள், சாணை பிடிப்பது, என கிட்டத்தட்ட சுற்றுவட்டம் சேர்ந்த ஒரு நூறு கிராமங்களுக்கான வெள்ளிக்கிழமை வர்த்தக மையம் இந்த சந்தை.

ஆடு மாடுகள் விற்பனை காலை 9 மணிக்கு முடிந்தாலும், அவற்றை வாங்க வந்தவர்கள், விற்க வந்தவர்கள், அவற்றை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டுநர்கள் அவர்களின் உதவியாளர்கள், கூழ் விற்பவர்கள், பிரியாணிக் கடைகள், ஒரு நாள் சிற்றுண்டிக் கடைகள், இன்ன பிற கடைகள் வைத்தவர்கள், அவர்களுக்கு உதவ வந்தவர்கள் என ஒவ்வொரு வெள்ளியிலும் கூட்டம் இரவு 10 மணி வரையிலும் திரிந்துகிடக்கும்.

மாட்டுக்கு பல் பிடித்துப் பார்ப்பது, ஆட்டுக்கு சப்பையை பிடித்துப் பார்ப்பது, துண்டு போட்டுத் தரகு செய்வது, காய்கறிகள், பண்டங்கள், அரிவால்கள், கலப்பைகள் என சந்தையில் விற்கப்படும் அனைத்தும் ஒருமுறை பிடித்துப்பார்த்து, தடவிப் பார்த்து, சுவைத்துப் பார்த்து வாங்குவதும் அல்லது தவிர்ப்பதும் நடக்கும்.

குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி மறைவுக்கு ஒதுங்கும் பெண்டீரும், புது சிநேகிதருடன் விளையாடும் குழந்தைகளும் நிறைந்தது சந்தை. அங்கு, ஆடு, மாடு விற்ற பணத்தில் முட்டக் குடித்துவிட்டு கட்டி உருளும் ஆண்களும், பாம்பை கீரியோடு மோதவிட்டால் போதும் கிளம்பிடலாமென்று மோடிவித்தை கூட்டத்தில் காத்திருக்கும் பள்ளிச் செல்லும் விடலைகளும் நிறைந்திருப்பது சகஜமானது . மாநிலத்தின், நாட்டின் பல பகுதிகளிலும் வார சந்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கோடிகள் கொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் மைதானத்திற்கு காசு கொழுத்து தானே சென்று ஒரேயிடத்தில் மாட்டிக்கொள்ளும் பெருமக்கள் இல்லை இந்தச் சந்தைகளின் மக்கள்.

கொரனா பற்றி சந்தைக்கு வந்த ஆயா ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“ம்க்கும் பா, டிவில சொன்னான்.  அதின்னமோ ஏழூரு தேசத்திலும் பரவுதாமே. அப்பலாம் காலரா வரும், ஊரே அல்லோலப் படும், பூசாரியும் ஊராரும் மாரியாத்தாக்கிட்ட உத்தரவு கேட்டு காத்து கெடக்கச் சொல்லோ, யாரவது ஆம்பள மேல மெர்லு வந்து ஆத்தா நல்ல வாக்கு சொல்லுவா., அத்தோட மெர்லு வந்தவன் தீவட்டிய எடுத்துக்குனு, அந்தக் காலராவ, உட்டேனா பாருனு வெரட்டு வெரட்டுனு வெரட்டி ஓடுவான், ஊர்ல ஆம்பளைங்க, வெடலப் பசங்க எல்லாம் திபு திபுனு அவம் பின்னாலயே ஓட, ஊர் பெரியாளுங்களும் பின்னாலயே நடந்தும்போயி எல்லைக்கு அந்தாண்ட அந்த பீடைய வெரட்டி விட்டுட்டு சாங்கியம் பண்ணிட்டு வந்துடுவாங்க. இப்பலாம் யாருக்கு மெர்லு வருது, மாரியாத்தாக் கீராளோ என்னமோ” …

என்றொரு பெருங்கதையை பதிலாகச் சொல்லிக்கொண்டே போனார்.

இப்படி எளிய மக்களும் அவர்தம் வாழ்வுச் சூழலும் நிறைந்த தேசத்தில், மாபெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் கொரனா வைரஸ் தடுப்புக்காக மிகச் சாதாரண எத்தனம் கூட இல்லாத நிலையில், வெறுமனே பசப்புவேலைகள் காட்டுவதும் மீடியாக்களுக்குப் பேட்டிக் கொடுப்பதும், எதிர் கட்சிகளோடு சரத்துப் போடுவதும் அல்லது நோய் பாதித்தவர்களை மறைத்துக் காட்டுவதுமான மட்டமான அரசுகளின் எந்திரம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால் இத்தகைய அரசுகள் ஒரு திடீர் நிகழ்வல்ல என்பது வேறு கதை.

இதில் சாவு எண்ணிக்கையை மிரட்டும் தொனியில் படிப்பது, திகில் பிண்ணனி இசையோடு கொரனா கதையைப் படிப்பதுமான தொலைக்காட்சி அரட்டைகள் மேலும் பதற்றம் கொள்ளவே செய்கின்றன.

இன்னொரு பக்கம், இந்தநோய்ப் பரவலின் உலகளாவிய பொருளாதார தாக்கம் என்பது லட்ச லட்சம் கோடிகளைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. சொந்தப் பொருளாதாரத்தை கார்பொரேட்களிடம் ஒப்புகொடுத்த பல நாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி உள்ளிட்ட எல்லா செயல்பாடுகளையும் நிறுத்திவருவதும் செய்தியாக இருக்கிறது.

இதன் முதல் பின் விளைவாக வேலை இழப்புகள் ஏற்படலாம். அடுத்து தினசரித் தேவைகள் மீதான விலையேற்றம் கொடும் விஷமாய் இந்த வைரஸ் போன்றே கண்ணுக்கேத் தெரியாமல் ஏறலாம். அது குறித்த முன்னேற்பாடுகள் குறித்து, தடுப்பது குறித்து, உலக நாடுகளும் கூட சிந்திக்கின்றனவா தெரியவில்லை. எனில் சிலைக்கு மாஸ்க் கட்டும் நம் இந்தியாவின்  நிலைமை இன்னும் வேதனைக்குறியது.

ஏனெனில், கச்சா எண்ணெய் விலை பலமடங்கு குறைந்தபோதும், இங்கு டெல்லியைய்த் தவிர வேறெங்கும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த விலைவீழ்ச்சியின் மூலம் நாளொன்றுக்கு பல ஆயிரம் கோடிகள் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பார்க்கும்போதும் அதன் பலனை மக்களுக்கும் வழங்குவதில் யாரும் முனைப்புக் காட்டுவதாக தெரியவில்லை.

இதுவே இப்படி என்றால் நோய் பரவல் காரணமாக எதிர்நோக்கியிருக்கும் வேலையின்மை உள்ளிட்ட அபாயகரமான பொருளாதார அழுத்தத்தைச் சமாளிக்க மக்கள் பலிகடா ஆக்கப் படுவதற்கான சூழல் உறுதியாவதாகவும் சந்தேகம் வருகிறது.

ஒருவேளை, உலக நாடுகளை உதாரணம் சொல்லி, பல மடங்கு விலையேற்றம் தவிர்க்க முடியாததாக  மக்களை ஏற்க வைத்தாலும் நிலைமை சமநிலையை அடையும்போது அந்த விலையேற்றம் திரும்பப் பெறப்படுமா, மூடிய நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுமா, இல்லையென்றால் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அவைகள் தாங்கள் வாங்கிய கடன்களை சுருட்டிக்கொள்ள முனையுமா, அல்லது நஷ்ட கணக்கு காண்பித்து ஏமாற்றுமா, அல்லது அக் கடன்கள் அடைக்கப்படுமா என்பதற்கும், பறிபோன வேலைவாய்ப்புகளும் வாழ்வுச் சூழலும் மக்களுக்குத் திரும்புமா, என்பதற்கும் எந்தவித உறுதியுமில்லை.

இவையாவும் யூகங்கள் என்றாலும் சாத்தியக் கூறுகள் கொண்டவை என்கிற நிலையில், அரசுகள் இதுபற்றிய நிபுணத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதோடு, சோர்ந்து போவதிலிருந்தும் பீதியிலிருந்தும் மக்களை காக்கும் விதமாய் நம்பிக்கை ஏற்படுத்தவேண்டும்.

அந்நோய் பரவல் பற்றிய நியாயமான  பகிர்வது. மக்களுக்கு நம்பிக்கை அளிப்பது. அவர்களின் அன்றாடங்களுக்கான மாற்று வழிகளை பரிதுரைத்து அவர்களை முடங்கிவிடாமல் செய்வது போன்ற செயல்களே இப்போதைய தேவை.

ஏனென்றால் பரிந்துரைக்கப்படும் நோய் தடுப்பு முறைகள் நியாயமானவை என்றாலும் தும்முவதிலிருந்து ஒரு மீட்டர் தள்ளிக்கொள்ளுதல், மணிக்கொரு முறை கை கழுவுதல், அது இது எல்லாம் மேலே சொல்லப்பட்ட வாரச் சந்தை வாழ்வாதாரத்தில் சாத்தியமற்ற விஷயங்களாகவே போகும்.