2014 தேர்தலில் பாஜக வெற்றிபெற பெரிதும் உதவிய பிரதான பிரச்சார ஆயுதமானது, இன்று சில ஆய்வுகளின் முடிவில் செயலிழந்துள்ளது.
1952 இல் இருந்து இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த 4,807 பேரின் வாழ்க்கை விவரங்களை ஆய்வுசெய்ததில் கடந்த 20 ஆண்டுகளில் பாஜக சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு இணையாக ‘அரசியல் பரம்பரை’இல் இருந்து வந்தவர்கள் ஆவர்.
1999 இல் இருந்து காங்கிரஸ் சார்பாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 36 எம்.பி-க்கள் அரசியல் பரம்பரையைச் சார்ந்தவர்கள். இதில் பாஜக-வும் அதிக தூரத்தில் இல்லை அவர்களின் சார்பாக 31 பேர். பாராளுமன்றத்தின் காங்கிரஸ் உறுப்பினர்களில் 8% பேர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாரிசாகவோ அல்லது அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர்களாகவோ இருக்கின்றனர். அதேபோல பாஜகவில் 6% பேர்.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசியலில் நேரு-காந்தியின் குடும்பம் நீண்ட காலமாக கோலோச்சியது. இது காங்கிரஸைப் பரம்பரை அரசியல் கட்சியாக அடையாளப்படுத்தியது. ஆனால் இந்தநிலை எல்லா கட்சியிடமும் உள்ளது என ‘இந்தியா ஸ்பெண்ட்’ பத்திரிக்கை, ஹாவார்ட் பல்கலைக்கழகம் மற்றும் மேன்ஹெய்ம் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரிவிக்கிறது.
“இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது எல்லாக் கட்சிகளிடமும் உள்ளது. இதை நீங்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை மட்டும் கொண்டு கண்டுபிடிக்கமுடியாது.” என்று இந்த ஆய்வை ‘இந்தியா ஸ்பெண்ட்’ காக மேற்கொண்டவர்களில் ஒருவரான சித்தார்த்தா ஜார்ஜ் எனும் ஆராய்ச்சி மாணவர் கூறுகிறார். மேலும் அவர் பாஜகவில் காங்கிரஸைவிட இளைய தலைமுறை தலைவர்கள் அதிகமாக உள்ளனர்” என்றார்.
அரசியல் வம்சங்களைப் பற்றிய இந்த ஆய்வு, மக்களவையில் உள்ள ஒரு அரசியல்வாதியின் தந்தை, தாய் அல்லது கணவர் மனைவி யாரேனும் அவர்களுக்கு முன்னதாக மக்களவை உறுப்பினர்களாக உள்ளார்களா என்பதை மட்டும் ஆராய்கிறது. இதில் மற்ற குடும்ப உறவுகளை கணக்கில் கொள்ளவில்லை. மேலும் ஒரு எம்பி-க்கு மாநிலங்களவையிலோ அல்லது ராஜ்ய சபையிலோ வாரிசுகள் உள்ளனவா என்றும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. எனவே இந்த புள்ளிவிவரங்கள், இந்திய அரசியலில் ராஜ வம்சங்களின் உண்மையான தாக்கத்தைக் குறைத்தே காட்டுகின்றன. இருந்தாலும் ஒரு மக்களவை உறுப்பினரின் மகன், மகள், கணவன் அல்லது மனைவி எனும் உறவுகளின் மூலமே 75% அரசியல் வம்ச உறவுகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். என்று ஜார்ஜ் தெரிவித்தார்.
சிறிய மற்றும் மாநில கட்சிகளில், அதிகாரம் முக்கிய குடும்பங்களில் கைகளில் உள்ளது. உண்மையில் சமீப காலங்களில் இங்குதான் வாரிசு அரசியல் தீவிரமடைந்துள்ளது. 2009 இல் ஜம்மு & காஷ்மீர் தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தேடுக்கப்பட்ட 3 எம்பிகளில் இருவர் அரசியல் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் (ஃபரூக் அப்துல்லா மற்றும் மிர்ஸா மெஹ்புப் பேகம்), இது வம்ச அரசியலில் 67% ஆகும். இந்தியாவில் வேறெந்த கட்சியிலும் இந்த விகித அளவு இல்லை. அதே காலத்தில் ராஷ்டிரிய லோக் தால் கட்சியில் 40% பேரும் சிரோமணி அகாளி தள கட்சியில் 25% பேரும் வம்ச அரசியல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
வம்ச அரசியலில் பாஜகவும் காங்கிரஸும்
“காந்தி குடும்பத்தினர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் மட்டுமே அக்கட்சிக்கு ‘அரசியல் குடும்பம்’ என்றும் குற்றச்சாட்டுள்ளது. ஆனால் கட்சி முழுவதும் அந்த நிலை இல்லை” என்று லண்டனிலுள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் கல்வி நிறுவனத்தைச் சார்ந்த அர்ஜுன் சாவ்லா எனும் வெளியுறவுக் கொள்கை சிந்தனையாளர் கூறுகிறார். “இப்போது வேண்டுமானால் பாஜக, வம்ச அரசியலுக்கு எதிராகப் பேசலாம் ஏனெனில் அவர்கள் அதை சாமர்தியாமாக மறைக்கிறார்கள். மேலும் பாஜகவில் தலைமைப் பொறுப்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாகக் கொடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல் இது போன்ற வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள பாஜக-வின் பொதுத் தொடர்பு பிரிவு தகுந்த வாதங்களோடு தயாராக உள்ளது”
தற்போது வம்ச அரசியல் தேசமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் பேசுபொருளாகியுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா, 55 ஆண்டுக் கால காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சிக்கும் 55 மாத மோடியின் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றிப் பேசுகிறார். கடந்த வாரம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி, காங்கிரஸின் வம்ச அரசியல்தான் அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் பாஜகதான் இந்தியாவிலுள்ள பெரிய கட்சிகளில் வம்ச அரசியல் இல்லாத கட்சி என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால் அவர் தனது கட்சியிலும் மற்றும் அதிகாரத்தில் மூத்த மட்டத்திலும் வம்ச அரசியல் பின்னணியுள்ளவர்களை மறைத்தார். உதாரணமாக அமைச்சரவையில் உள்ள மந்திரிகளான மேனகா காந்தி மற்றும் பியுஷ் கோயால் ஆகியோர்.
“2014 தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற “குடும்ப அரசியலுக்கு” எதிரான கோஷத்தை இந்த தேர்தலிலும் பயன்படுத்தப்போகிறார்கள். இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு ஏனெனில் அவர்களின் இந்த பிரசாரம் மக்களிடையே காங்கிரசுக்கு எதிரான கோபத்தைக் கிளறியது. இப்போது பாஜக தாங்கள் ஆட்சியிலிருந்தபோது செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதை விட இந்த யுக்தி கை கொடுக்குமென நம்புகிறது. இதற்காக அவர்கள் தங்கள் பழைய கோஷங்களான “நாட்டுக்காகச் செயல்படுகிறவர்களுக்கும் கடைசி பெயராக குடும்ப பெயரைப் போட்டுக்கொள்கிறவர்களுக்கும்” போன்றவற்றை தூசு தட்டுகிறார்கள். இது சாமர்த்தியமான, மக்களைத் தூண்டக்கூடிய திட்டம்” என்று ஆய்வாளர் அர்ஜுன் சாவ்லா கூறுகிறார்.
வம்ச அரசியலின் போக்குகள்
2009 ஆம் ஆண்டில் அமைந்த 15 வது மக்களவைதான் இருப்பதிலேயே அதிக வம்ச அரசியல் கொண்டதாக இருந்தது. அதில் 53 எம்பிக்கள் குடும்ப அரசியல் பின்னணியுள்ளவர்கள். அது மொத்த அவையில் 9.5% ஆகும். இந்த விகிதம் 2014 ஆம் ஆண்டு 8.6% ஆகக் குறைந்தது. ஆனால் பலவருட தகவல்களைப் பார்க்கும்போது குடும்பப் பின்னணியுள்ளவர்கள் பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. 1994 இல் இருந்து 2014 வரை அது இரு மடங்காகியுள்ளது.
“அரசியலில் அதிகரிக்கும் இந்த போக்கானது, மக்கள் தங்கள் முன்னோர்கள் என்ன தொழிலில் ஈடுபட்டார்களோ அடுத்து வரும் தலைமுறைகளும் அதே பாதையைத் தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆயினும்கூட, அரசியல் அதிகாரத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே கோலோச்சுவது கவலையாக உள்ளது.” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் கூறினார்.
“அரசியல் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் மோசமான அல்லது அசாதாரணமானவை அல்ல, ஆனால் இந்த போக்கு நமது அரசியல் பிரதிநிதிகளை குடிமக்களிடமிருந்து அகற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள், சட்டங்களை தங்களுக்குச் சாதகமாக வளைக்கின்றனர். இது எந்த ஒரு ஜனநாயகத்திற்கும் ஆபத்தானது.” என்று தில்லியிலுள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ராகுல் வர்மா கூறுகிறார்.
சமீபத்தில் 2019 தேர்தலையொட்டி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், அரசியல்வாதிகள் சாதாரண மக்களின் நலனில் உண்மையாக அக்கறை கொண்டவர்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் 58% மக்கள் இங்கு எதுவும் மாறவில்லை என்றனர்.
அமெரிக்கா, ஜப்பான், பிலிபைன்ஸ், இந்தோனேசியா என உலகில் பல நாடுகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆகவே இந்தியாவும் இங்கு விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப்போனால் உலகமெங்கும் வம்ச அரசியலே மேலோங்கி இருக்கிறது. மருத்துவம், சட்டம் போன்ற உயர்ந்த துறைகளை விட ஒரு அரசியல்வாதியின் மகனுக்கு 110 மடங்கு தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் என 2018 இல் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
“சுதந்திரம் கிடைத்துக் கொஞ்சக் காலமே ஆனதால் இது போன்ற வம்ச அரசியல் எதிர்பார்க்கக்கூடியது தான். ஒரு குறிப்பிட்ட குடும்பங்களில் கையில் அதிகாரம் இருப்பது இன்னும் கூட தொடரும். 100 ஆண்டுகளில் கிட்டதட்ட 20-25 தேர்தலை ஒரு நாடு சந்தித்த பிறகு வேண்டுமானால் இந்த நிலை மாறலாம். உதாரணமாக அமெரிக்காவில் நடந்தது போல. மேலும் இனி வரும் காலங்களில் இந்த வம்ச அரசியல் படிப்படியாகக் குறையலாம்” என்றும் வர்மா கணிக்கிறார்.
தேர்தல் காலத்தில் முக்கியமான அரசியல் குடும்பங்களான அப்துல்லாக்கள், பதால்கள் மற்றும் பட்நாயக்குகளைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது, அரசியலில் நீண்ட காலமாக உள்ள குடும்பங்கள் தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது தங்களின் செல்வத்தைப் பல மடங்கு பெருக்கிக்கொள்ளும் திறமை கொண்டவர்களாக இருப்பதே ஆகும்.
இன்று தேர்தலில் போட்டியிடுவது என்பது மிகுந்த செலவு வைக்கும் ஒரு சங்கதி. 2014 தேர்தலில் பெரிய வேட்பாளர்கள் 1 கோடி ரூபாயிலிருந்து 16 கோடி வரை செலவு செய்தார்கள். இது தேர்தல் ஆணையம் விதித்த சட்ட வரம்பிலிருந்து 50 மடங்கு அதிகம். ஒரு வேட்பாளர் தேர்தலில் சீட்டு வாங்குவதற்குச் செலவு செய்வதையும், அரசியல் குடும்ப பின்னணி கொண்டவராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருந்தால் கட்சிகளுக்கு அவர் ஒரு வெற்றி வேட்பாளராகத் தெரிகிறார்.
“மக்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 1957 இல் 42 ஆக இருந்து 2014 இல் மூன்று என கிட்டதட்ட காணாமல் போகும் அளவுக்குக் குறைந்தது. இது மிரள வைக்கும் தேர்தல் செலவுகளால் சுயேச்சை வேட்பாளர்கள் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதின் அறிகுறியே ஆகும். இந்த காரணங்களால் தான் இந்தியாவில் குடும்ப அரசியலைச் சேர்ந்தவர்கள் அதிகரிக்கின்றனர் என்றும் இப்படித்தான் இங்கு ஜனநாயகம் செயல்படுகிறது” என்றும் LSE ஐடியாசைச் சேர்ந்த ஆய்வாளர் சாவ்லா கூறுகிறார்.
உத்திர பிரதேசத்தில் வம்ச அரசியல்
இந்தியாவின் பெரிய மாநிலமும் மிக வறுமையான மாநிலமுமான உத்திர பிரதேசத்தில் தான் வம்ச அரசியல் மிக அதிகம். 1952 இல் இருந்து மக்களவைக்கு 52 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாகப் பீகாரில் 27 பேரும் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 10 பேரும் ஆவர்.
உத்திர பிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு தலைமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பாஜக தான் இங்கு குடும்ப அரசியலில் முன்னணியில் உள்ளது. கணக்கிட்டதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 51 பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். காங்கிரசில் 15 பேர். அதிலும் முந்தைய பிரிவான காங்கிரஸ்(ஐ) இல் ஆறு பேர், மற்றும் தற்போதைய காங்கிரசில் ஒன்பது பேர். இது தவிர பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நான்கு பேர்.
பீகார் மாநிலத்தில் குடும்ப அரசியல் பின்னணி கொண்ட 12 பேர் காங்கிரஸ் சார்பாக அந்த மாநில ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அடுத்து பாஜக-வில் நான்கு பேரும் ஜனதா கட்சியிலிருந்து மூன்று பேரும் உள்ளனர். தேசிய கட்சிகளில் மட்டுமல்லாது பிராந்திய கட்சிகளிலிருந்தும் அரசியல் குடும்பத்திலிருந்து வந்துள்ளனர். மேற்கு வங்காளத்தின் பிராந்திய கட்சியான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் மூன்று பேரும் பஞ்சாபில் சிரோமணி அகாலி தளத்தில் நான்கு பேரும் வந்தவர்கள்.
“ஏன் ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கே சில மாநிலங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என ஆராய்ந்ததில் அதற்கு ஜாதி அரசியலே காரணம் என்று அறியப்படுகிறது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அரசியல் குடும்பங்களோ அல்லது பொருளாதார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கோ மட்டுமே அந்த மாநில மக்கள் மீண்டும் மீண்டும் வாக்களிக்கின்றனர். இதில் இட ஒதுக்கீடு சார்ந்த கொள்கைகள் காரணமாக உள்ளன” என்று சாவ்லா கூறுகிறார்.
மேலும் அவர் “உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் ஜாதி அரசியலுக்கும் வம்ச அரசியலுக்கும் அதிகப்படியான தொடர்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு தலைவர் தேர்தேடுக்கப்படுவதும் அதன் பிறகு அந்த தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அவரின் அரசியல் வாரிசாகத் தொடர்வதை நீங்கள் அடிக்கடி கவனித்திருக்கலாம்” என்று கூறுகிறார்.
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த முலயாம் சிங் யாதவ் 1992 இல் சமாஜ்வாடி கட்சியைத் தொடங்கினார். இன்று அவரது மகன் அகிலாஷ் யாதவ் அம்மாநிலத்தின் முதல்வராக உள்ளார். இது சாதி அரசியல் எப்படி ஒரு குடும்பத்தையே சார்ந்துள்ளது என்பதற்கு ஓர் உதாரணம். வரும் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட ஜாதவ் மற்றும் யாதவ் இன மக்களின் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
“பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தில் ஜாதி அரசியலுக்கும் வம்ச அரசியலுக்கும் அதிகப்படியான தொடர்பு உள்ளது. ஆனால் கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களில் தலித்துகளும், ஆதிவாசிகளும் மற்ற உயர் சாதிகளோடு ஒப்பிடுகையில் வம்ச அரசியலை உருவாக்குவதில் பின் தங்கியே உள்ளனர்.” என நியூயார்க்கைச் சேர்ந்த கங்கன் சந்திரன் எனும் பேராசிரியர் தனது “ஜனநாயக அரசியல் வம்சங்கள்” நூலில் குறிப்பிடுகிறார்.
2014 இல் 27.23% சதவீத எம்பி-க்கள் உயர் சாதி வம்ச அரசியலிலிருந்து வந்தவர்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதியில் 8.4% பேரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எம்பி க்கள் 16.67% ஆக இருந்தனர்.
நாடு முழுவதும் ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் இந்த வம்ச அரசியல் சூழல் நிலவினாலும் சில மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் அவ்வாறு இல்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில். விதிவிலக்காகக் கோவாவின் அமைச்சரவையில் உள்ள பாஜகவைச் சேர்ந்த விஸ்வஜித் ரானே அம்மாநில முன்னாள் முதல்வர் பிரதாப் சிங்கின் புதல்வர் ஆவார். அதே போல வடகிழக்கு மாநிலங்களில் அசாமில் மட்டும் குடும்ப அரசியல் பின்னணியுள்ள தலைவர்கள் உள்ளனர்.
நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அரசியல் வம்சங்கள்
1952 இல் இருந்து நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அரசியல் வம்ச பிரதிநிதி யாரெனில் சோம்நாத் சட்டர்ஜி ஆவார். பத்து முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதில் ஒன்பது முறை மார்சிச கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாகவும் ஒரு முறை அவையின் பேச்சாளராகவும். அவரது தந்தை என்.சி. சட்டர்ஜி மேற்கு வங்கத்தில் பர்ட்வன் தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் கடைசி முறை அவர் பொறுப்பில் இருக்கும்போது அவர் இறந்ததால் வீசிய அனுதாப அலையில் அவரது மகன் சோம்நாத் சட்டர்ஜி வெற்றிபெற்றார்.
நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அரசியல் வம்ச கட்சியாகக் காங்கிரஸ் உள்ளது பத்து மக்களவையில் மூன்று முறை. பாஜக இரண்டு முறையும் சிறிய கட்சிகளான ராஷ்டிரிய லோக் தல் மற்றும் பாரதீய நவஷக்தி கட்சியும் தலா ஒரு முறையும் இருந்திருக்கின்றன.
40% அரசியல் வம்ச பிரதிநிதிகள், தங்களின் தந்தை தாய் மற்றும் தங்கள் கணவன் மனைவி இதற்கு முன் வெற்றிபெற்ற தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்திற்கு அடுத்தடுத்து வரும் தலைமுறைகளின் சராசரி காலம் கிட்டதட்ட 40-50 வருடங்கள் ஆகும் அதாவது பத்து முறையாக மக்களவை உறுப்பினர்களாகத் தொடர்கிறார்கள்.
ஒரே தொகுதியில் நீண்ட காலம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களே அதிகாரத்தில் இருப்பது அத்தொகுதிக்கு ஆபத்தா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. முதல் தலைமுறை தலைவர்கள் அங்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர்கள் அங்குப் பல நல்ல செயல்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறை தலைவர்களாலே அங்கு முன்னேற்றம் தடைப்படுகிறது.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருந்த அதே தொகுதியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி தடை செய்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது கட்சியில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை என்று உறுதியாக இருக்கிறார்.
“இது சரியானது என்று சொல்லமுடியாது. ஜனநாயகத்தில் ‘தடை’ என்பது கெட்ட வார்த்தை. இது நீங்கள் ஒருவரை அவர் குற்றம் செய்வதற்கு முன்பே தண்டிப்பது போன்றது. ஆனால் நீங்கள் உங்கள் அரசியல் செயல்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருந்தீர்களேயானால் அதிகம் பேர் இதில் ஈடுபடுவதும் தகுதி அடிப்படையில் மற்றவர்களைக் களைவதற்கும் ஏதுவாக இருக்கும்.” என்று வர்மா கூறுகிறார்.
மேலும் அவர் “தேர்தல் நிதி பிரச்சார சட்டங்களில் அதிக சீர்திருத்தங்கள் வேண்டும் என்றும் பணபலம் மிக்க, அரசியல் குடும்ப பின்னணியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகப் பரிந்துரைகளை இன்னும் பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டும். இதை எல்லா கட்சிகளும் செயல்படுத்தவேண்டும், ஏனெனில் இப்பகுதிகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தால்தான் அனைவருக்குமான ஒரு திறந்த அரசியல் சூழலை உருவாக்க முடியும்” என்று வர்மா கூறினார்.
தங்கள் கட்சி வம்ச அரசியலுக்கு எதிரானது என்று பாஜக இதுவரை சாமர்த்தியமாக மறைத்து வந்தது. ஆனால் இத்தனை அறிஞர்கள் ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில் காங்கிரசுக்கு எதிரான அதன் குடும்ப அரசியல் பிரச்சாரம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது புதிரே.