பல பில்லியன் டாலர் நிறுவனமான பெப்சிகோ, தனது தயாரிப்பான லேய்ஸ் சிப்ஸை உருவாக்கப் பயன்படும் உருளைக்கிழங்குகளை அதன் உரிமங்களை மீறிப் பயிரிட்டதற்காக நான்கு குஜராத்தி விவசாயிகளை தலா 1.05 கோடி ரூபாய் பணம் செலுத்துமாறு வழக்கு தொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிடுமாறு விவசாயிகள் குழுக்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
விவசாயக் குழுக்கள் தாங்கள் எந்த வித பயிர்களை விதைப்பதையும் விற்பதையும் சட்டம் அனுமதிக்கிறது என சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் உரிமம் பெறப்பட்ட விதைகளைத் தவிர மற்ற எல்லா விதைகளையும் விற்கலாம் எனச் சட்டம் கூறுகிறது என்றனர். பெப்சியின் இந்த வழக்கு, மற்ற பயிர்களை விதைக்கத் தடை வரலாம் என்பதற்கு ஒரு முன்னோடியாக அமையும் என் அச்சம் தெரிவித்தனர்.
தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்கும் ஆணையத்தை (PPV & FRA) தங்களுக்கு சார்பாக வாதாடுமாறும், இதற்கான வழக்கு செலவுகளைத் தேசிய மரபணு நிதி மூலம் ஏற்றுக்கொள்ளுமாறு விவசாயிகள் வேண்டினார்.
இது தொடர்பான விளக்கத்திற்காக பெப்ஸிகோவின் இந்தியா தொடர்பு அதிகாரியைக் கேட்டபோது அவர் “ வழக்கு நிலுவையில் இருப்பதால் கருத்து கூற இயலாது எனத் தெரிவித்துவிட்டார்.
(PPV & FRA) இன் பதிவாளரும், காய்கறி பயிர்களுக்கு அதிகாரம் உள்ளவருமான டி.கே.நாகரத்னா, “இது ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நாங்கள் இதை விசாரிக்கிறோம். நீதிமன்ற உத்தரவின்படி நாங்கள் இதில் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.
இந்த விவசாயிகள் 2018 இல் உள்ளூரில் கிடைத்த உருளைக்கிழங்கு விதைகளைக் கொண்டு மூன்று நான்கு ஏக்கரில் சிறிய அளவில் பயிரிட்டனர். என்று விவசாயக் குழுக்கள் PPV&FRA வுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் பெப்சிகோ நிறுவனம் தனியார் துப்பறியும் நிபுணர்களை வியாபாரிகள் போல அனுப்பி அவர்கள் விவசாயிகளிடம் இருந்து உருளைக்கிழங்குகளை வாங்குவதை ரகசியமாகப் படம் எடுத்தும், விவசாயிகளின் நிலத்திலிருந்து உருளைக்கிழங்கு மாதிரிகளை உண்மையான காரணத்தை கூறாமல் அவர்களை ஏமாற்றி வாங்கிச் சென்று அதன் பிறகு அவர்கள் மேல் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதே போல மூன்று மாவட்டங்களில் ஒன்பது விவசாயிகளின் மீது 2018 இல் இருந்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் என்றும் அந்த கடிதத்தில் உள்ளது.
ஏப்ரல் ஒன்பதாம் தேதி அகமதாபாத் நீதிமன்றம் விவசாயிகள் பயிரிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார். தற்போதுள்ள சரக்குகளின் இருப்புகளையும், மாதிரிகளையும் சேகரித்து அரசு ஆய்வகத்திற்கு அனுப்ப நீதிமன்றம் ஒரு ஆணையரை நியமித்திருக்கிறது. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 26 அன்று விசாரணைக்கு வருகிறது.
தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் 2001 இல் உள்ள பிரிவு 64 வலியுறுத்தி அதன் உரிமைகள் மீறப்படுவதை பெப்சிகோ சுட்டிக்காட்டுகிறது. ஆனால் விவசாயிகள் அதே சட்டத்திலுள்ள பிரிவு 39 ஐ வலியுறுத்துகின்றனர். அதில் விவசாயிகளுக்கு ஒரு விதையை சேமிக்க, பயன்படுத்த, விதைக்க, மறு விதை செய்ய, பரிமாற்றம் செய்ய, தனது பண்ணையில் உற்பத்தி செய்த விதைகளைப் பங்குபோட அல்லது விற்க உரிமை உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இதில் உரிமம் பெற்ற விதைகளைக் கூட பயிரிடலாம் ஆனால் அதை வியாபார நோக்கில் விற்கக்கூடாது என்று அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என விவசாய அமைப்புகள் கூறுகின்றன.
இந்த வழக்கு பிற்காலத்தில் மற்ற பயிர்களை விளைவிக்கத் தடை வரும் சூழலை உருவாக்குகிறது. உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டதற்குப் பிறகு இது போன்ற ஒரு வழக்கு நடப்பது முதன்முறையாகும். இதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் இதில் தவறாக முடிவெடுத்தால் அது விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் அவர்கள் வாழ்வாதாரமே அழியக்கூடிய அபாயம் இதிலுள்ளது.
பண பலமும் அரசியல் செல்வாக்கும் கொண்ட பெரு நிறுவனங்கள் சட்டத்தை வளைக்கக் கூடிய ஆபத்து நிலவுகிறது. விவசாயிகளின் நலன் மீது அக்கறை இல்லாத அரசு இருக்கும் இந்த சூழலில் எந்த ஒரு ஆதரவும் இல்லாத விவசாயிகள் கடும் விரக்தியிலும் மன அழுத்தத்திலும் தனக்கு நீதி கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர். இது அவர்களுடைய போராட்டம் மட்டுமல்ல. ஒரு எளிய விவசாயியைச் சர்வவல்லமை கொண்ட பெரு நிறுவனம் அடக்குவதை நாம் எதிர்க்காவிட்டால், அதில் கடுமையாகப் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாமே.