ந்தியா வேலையின்மை தகவலை மறைக்கலாம் ஆனால் உண்மையை அல்ல”

பொருளாதார நிபுணர் கௌசிக் பாசு கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் வேலையின்மை பற்றி கவலை தெரிவித்தார். நரேந்திர மோடி அரசாங்கம் பெரிய நிறுவனங்கள் மீது “அளவுக்கு மீறிய கவனம் செலுத்தி” சிறிய நிறுவனங்களை புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

தனியார் அமைப்புகள் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் மறைமுக ஆதாரங்களை நம்பியே ஆய்வாளர்கள் தற்போது இருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அரசு அதிகாரப்பூர்வமான தகவல்களை மறைக்கிறது என்று பாசு, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அது “இந்தியா வேலையின்மை தகவலை மறைக்கலாம் ஆனால் உண்மையை அல்ல” என்ற தலைப்பில் வெளியானது.

கௌசிக் பாசு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் ஆவார். 2009 முதல் 2012 வரை இந்திய அரசாங்கத்திற்குத் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார்.

பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கை, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ஒரு வருடம் கழிந்து 2017-18 இல் இந்தியாவில் வேலையின்மை கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு 6.1% அதிகரித்திருப்பதாக வந்த அறிக்கையை இந்திய அரசு மறைப்பதாகச் சொன்னது. தேசிய புள்ளிவிவர ஆணையத்தைச் சேர்ந்த இரு சுயாதீன உறுப்பினர்கள் இந்த அறிக்கையைத் தயார் செய்தார்கள். அரசு இந்த அறிக்கையை வெளியிடாததால் அதை எதிர்த்து அவர்கள் இருவரும் இந்த வாரம் தனது பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.


இந்தியாவில் இதுபோன்ற “தகவல் இருட்டடிப்பு” என்பது வழக்கமில்லாதது ஏனெனில் புள்ளியியல் தரவு சேகரிப்பில் உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு பலருக்கு முன்னோடியாக உள்ளதெனக் கடந்த காலத்தில் பாராட்டப்பட்டது என்று பாசு கூறியுள்ளார். அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத நிலையில், தனியார் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆபத்தானவை, என்றார். அவர் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் மற்றும் அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களை இவ்வாறு மேற்கோளிட்டுள்ளார்.

இந்த விளைவுகள் எல்லாம் ஏதோ விபத்து அல்ல, இவை பாஜக அரசின் 500 மற்றும் 1000 ரூபாய்க்குத் தடை மற்றும் ஜி‌எஸ்‌டி எனும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நடவடிக்கை காரணமாக நடந்தது. “மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையானது, குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியை மையமாக வைத்தும், சிறிய நிறுவனங்கள், வர்த்தகர்கள், விவசாயத் துறை மற்றும் பெரும்பாலான தொழிலாளர்களை அலட்சியப்படுத்தியும் இருக்கிறது. அதனுடைய முடிவுகளே இப்போது காண்பிக்கப்படுகின்றன என்றார்.

மேலும் பாசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகத் தவறான முடிவு என்றும் ஜி‌எஸ்‌டி அறிமுகம் ஒரு சரியான திசையில் செல்வதற்கான முடிவுதான் ஆனால் மோசமாகச் செயல்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

கல்வியை முடித்து கனவுகளோடு வெளிவரும் இளைஞர்களின் கனவை அரசின் இம்மாதிரியான மோசமான முடிவுகள் எந்த அளவிற்கு நொறுக்குகின்றன என்பதை இந்த பாஜக அரசின் ஆட்சியில் நேரடியாகவே பார்த்தோம். அந்த முடிவுகளின் தோல்வியை மறைக்க உலக அரங்கில் நாம் அவமானப்படும் அளவுக்குக்கூட செல்வார்கள் என்பதுதான் இன்னும் அச்சமூட்டும் விஷயம்.