அகில பாரதிய ஹிந்து மகாசபா, பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளை (கடந்த செவ்வாய்க் கிழமை) ஒட்டி, பகவத் கீதையுடன் ஒரு கத்தியை வழங்கியுள்ளது.
இதைக்குறித்து ஹிந்து மகாசபாவின் செய்தித் தொடர்பாளர் அசோக் பாண்டே சாவர்க்கரின் கனவை நிறைவேற்றுவதுதான் எங்கள் நோக்கம் என்று கூறியிருக்கிறார். சாவர்க்கர் தனது லட்சியமாகக் கூறியது ‘ராஜ்நிதி கா ஹிந்துகரன் ஹிந்து கா சனிகிகரன்’ அதாவது அரசியலில் இந்துத்துவத்தைப் புகுத்துவது, ஹிந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து ஓரணி ஆக்குவது’ இதைக் குறிப்பிட்டு பேசிய அவர், முதல் நோக்கத்தை மோடியின் தலைமையிலான அரசு நிறைவேற்றி விட்டதாகவும், இரண்டாவதை நிறைவேற்றவே தாங்கள் பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹிந்து மகாசபாவின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே மகாத்மா காந்தியின் கொடும்பாவியை நோக்கி குறிபார்க்கும் கைத்துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு சர்ச்சையானது நினைவிருக்கலாம், தற்போது இளம் பிள்ளைகளுக்குக் கத்திகளை வழங்கும் இந்த நிகழ்வினைக் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். யாரிடம், எப்போது கத்தியைப் பிரயோகிக்க வேண்டும் என்று மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் பகவத் கீதையுடன் கத்திகளைக் கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஏனென்றால், ஹிந்துக்கள் தங்களையும் தங்கள் நாட்டையும் காப்பற்றிக்கொள்ள ஆயுதங்கள் பிரயோகிக்கக் கற்க வேண்டும், ஆயுதப்படையாக ஹிந்துக்கள் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பதுதான் சாவர்க்கரின் ஆசை என்றும் கூறினார்.
மேலும் பத்திரிகையாளர்களிடம் ‘இளைஞர்களுக்குக் கத்திகளை வழங்குவதன் நோக்கம் அவர்களைத் தன்னளவில் ஒரு சுதந்திரமான, தைரியமான குடிமகனாக(ளாக) உணர வைப்பதுதான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இப்படி அதிகரித்திருக்கும் சூழலில் தங்களது குடும்ப உறுப்பினர்களை, தங்கைகளைப் பாதுகாக்க இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அவசியம்’ என்று கூறியிருக்கிறார்.