கொலை முயற்சி புகாரின் பேரில் அதிமுக எம்எல்ஏ சத்யா மீதும் அவரது கணவன் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக மார்ச் 4ஆம் தேதி, துரைப்பாடியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற, என் மீதும், எனது நண்பர் மணிகண்டன் மீதும், எம்எல்ஏ சத்யா மற்றும் அவருடைய கணவர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் புகார் மனு மீது, நான்கு வாரக் காலத்திற்குள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி.