சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேருக்கும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் இன்று (மே 29) சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக ஒரு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுகவும், 9 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியது.
சட்டமன்றத்தில் திமுகவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 101ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அதிமுக தன்னுடைய ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேரும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (மே 28) பதவியேற்பு செய்துகொண்டனர்.
இதைதொடர்ந்து, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேரும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் சபாநாயகர் தனபால் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் உட்பட அதிமுக உறுப்பினர்கள் பலம் 114 ஆக இருந்தது. இந்நிலையில் இப்போது 123 எம்.எல்.ஏக்கள் அதிமுக வசம் உள்ளன. 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் ஒரே பெண் எம்.எல்.ஏவாக நிலக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற ஜி. தேன்மொழி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்றுக் கொண்ட எம்எல்ஏக்கள்;
பரமக்குடி – என்.சதன் பிரபாகரன்
சோளிங்கர் – ஜி சம்ப்த்
சூலூர் – கந்தசாமி
விளாத்திகுளம் – பி சின்னப்பன்
சாத்தூர் – எம்.எஸ்.ஆர் ராஜவர்மன்
அரூர் – வி.சம்பத் குமார்
நிலக்கோட்டை – ஜி.தேன்மொழி
மானாமதுரை – எஸ்.நாகராஜன்
பாப்பிரெட்டிபட்டி – ஏ.கோவிந்தசாமி