அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறியுள்ள உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய (மசூதிஅமைக்கப்பட்டுள்ள) நிலத்தில் மசூதியை அகற்றி இடித்துவிட்டு அங்கு ராமர் கோயிலை எழுப்ப ஆணையிட்டுள்ளது. இந்த ஆலய நிர்மாணத்துக்கு மூன்று மாத காலக்கெடுவை விதித்து அதற்கு பொறுப்பாக ஒரு இந்து அறங்காவலர் குழுவை அமைக்கவும் அதுஅரசுக்கு ஆணையிட்டுள்ளது. மற்றொரு பக்கம் இடிக்கப்பட்ட மசூதிக்கு ஈடாக 5 ஏக்கர் நிலமொன்றில் மற்றொரு மசூதியை கட்டுவதற்கு வக்ப் அமைப்புக்கு நீதிமன்றம் அளித்துள்ளது. ஆனால், திருமாவளவன் குறிப்பிடுவதைப் போல, இந்த மசூதியை ஒன்று மையஅரசோ மாநிலஅரசோ கட்டலாம் எனச் சொல்லும் நீதிமன்றம் இதன் மூலம் கட்டுமானப்பணி தொடர்ந்து தள்ளிப்போடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. அதோடு, ராமர் கோயிலுக்கு தந்துள்ளதைப் போல காலக்கெடுவை ஏன் மசூதி கட்டுவதற்கும் நீதிமன்றம் விதிக்கவில்லை எனும் கேள்வி முக்கியமானது. இன்னொரு பிரச்சனை எந்த அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது. இதைப் பற்றி பேசும்போது பல கேள்விகள், சிக்கல்கள் எழுகின்றன.
1) ஒருவழக்கில் போதுமான ஆதாரம் இல்லாதபட்சத்தில் நிலைமையை இருக்கிறபடி தொடர அனுமதிப்பதே நீதிமன்றமரபு. (ஒருவர் குற்றம் சாட்டப்பட்டாலும் அவர் மீது ஆதாரம் இல்லையென்றால் அவர் விடுவிக்கப்படுவார்.) எப்போதுமே நம்பிக்கை, மக்களின் செண்டிமண்ட், சமூகங்கள் இடையிலான நல்லுறவு ஆகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக்கூடாது. தலித்துகளை உயர்சாதியினர் சிலர் கொன்றுவிட்ட ஒரு வழக்கு இருக்கிறதெனக்கொள்வோம். வாக்காளர்களில் பெரும்பான்மையினர் உயர்சாதியினர். அவர்கள் வழக்கில் தம் ஆட்கள் விடுவிக்கப்படுவதையே விரும்புவர். நீதிமன்றமும் இப்போது பெரும்பான்மையை ஆதரிக்க, அதன் மூலம் சமூக அமைதியை நிலைநிறுத்த முயன்றால், சட்டம் செத்துவிடும். கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலைப்பாட்டை அயோத்தி வழக்கிலும் நீதிமன்றம் எடுத்துள்ளது.
2) நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கலாமா? அதுவும் புராணக்கதைகளை ஆதாரமாகக்கொண்டு தீர்ப்பளிக்கலாமா? கூடாது. இவ்வழக்கில் புராணப் பிரதிகளில் ராமர் பிறந்த இடம் அயோத்தி என சொல்லப்படுகிறது; இதுவே மக்களின் நம்பிக்கை என தீர்ப்பின் இணைப்பில் நீதிபதிகள் கூறி உள்ளார்கள். இப்படி ஒரு அபத்தமான கூற்று வேறு எந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் கூறப்பட்டு நான் கண்டதில்லை. நாளை பல ஆபத்தான சமூகப் போக்குகள் தோன்ற, ஒரு வேளை வழக்குகளில் பிற்போக்கான தீர்ப்புகள் வழங்கப்பட இது வழி வகுக்கலாம்; முன்னுதாரணமாகலாம். ஒரு உதாரணத்திற்கு ராமாயணத்தில் சீதையின் கற்பு குறித்து ஊர் மக்கள் கேள்வி எழுப்பும் போது ராமர் அவளை தீக்குள் புகுந்து வெளிப்பட்டு தன்னை நிரூபிக்கக் கேட்கிறார். நாளை இந்த நடைமுறையை ஒரு குறிப்பிட்ட சமுதாயம் நடைமுறைப்படுத்தினால் அதை நாம் இதே போல ராமாயணத்தின் அடிப்படையில், ஒரு நம்பிக்கை எனும் பட்சத்தில், நியாயப்படுத்தலாமா? மகாபாரதப் போர் ஏன் நடக்கிறது? பாண்டவர்களின் மனைவியை கௌரவர்கள் அவமதித்ததால். இது புராணக்கதை. இதை இந்தியா முழுக்க இந்துக்கள் நம்பி ஏற்கிறார்கள். இதே போல ஒருவர் தன் மனைவியை அவமதித்தவரைக் கொன்றுவிட்டு மகாபாரத அடிப்படையில் தன் செயல் குற்றமில்லை எனச் சொன்னால் அதை நீதிமன்றம் ஏற்குமா? தீண்டாமை நமது சட்டப்படி ஒரு குற்றம். ஆனால் புராணக் கதைகளின் தீண்டாமை குற்றமல்ல. கர்ணன் ஒரு பிராமணன் அல்ல எனத் தெரியவரும் போது அவனது குருவான பரசுராமன் அவரை சாபமிட்டு வெளியேற்றுகிறார். பின்னர் கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் எனத் தெரியவரும் போது அர்ஜுனன் அவனுடன் போட்டியிட மறுக்கிறான். அன்றைய சமூகத்தில் ஒருவர் தன் சாதி எல்லையைக் கடந்து கல்வி கற்கவோ போட்டியிடவோ அனுமதி இல்லை. இதை நமது மரபு, நம்பிக்கை எனக்கோரும் ஒரு ஆசிரியர் இன்று தன் மாணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கக்கூடாது எனச் சொல்லி வகுப்பில் இருந்து மாணவரை வெளியேற்றினால் என்னவாகும்?
தன்சகமாணவருடன்இதேபோலசாதிஅடிப்படையில்தேர்வுஎழுதமுடியாதுஎனஒருமேல்சாதிமாணவர்பிரச்சனைசெய்தால்என்னவாகும்? அடிப்படை உரிமையா நம்பிகையா என வரும்போது நீதிமன்றத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? இந்தியாவில்எல்லாருக்கும்தம்மதத்தைபின்பற்றஉரிமைஉண்டுஎனஅரசியலமைப்புகூறுகிறது. சுமார் ஐந்து நூற்றாண்டுகளாக அயோத்தியில் பாபர் மசூதியில் அப்படியாக இஸ்லாமியர் வழிபட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் தம்மதத்தை பின்பற்றும் இந்த உரிமையைத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே இந்துத்துவ அமைப்பினர் எதிர்த்து வருகிறார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து இந்த உரிமையை பாதுகாத்தும், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஆட்சியாளர்கள் மற்றும் நீதி அமைப்புகள் இந்த உரிமையை தொடர்ந்து மறுத்தும் வந்துள்ளன. எதிர்காலத்தில், “சமூகஅமைதியை” காப்பாற்றும் பொருட்டும், மரபான நம்பிக்கைகளின் அடிப்படையிலும் சாதி அமைப்பை, வர்ணாசிரமத்தை நமது நீதிமன்றங்கள் ஆதரித்து தீர்ப்பளிக்காது எனக் கூறமுடியுமா?
3) பாபர் மசூதி பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என சொல்லப்பட்டாலும் அது இந்துக்கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அகழ்வாராய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவை இந்தவழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. இதன்படி அந்த மசூதிக்குக் கீழே உள்ள கட்டிட அமைப்பின் மீதங்கள் அங்கு முன்னர் இஸ்லாமிய மதவழிபாட்டுத் தளங்கள் இருக்கவில்லை என அகழ்வாராய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால் இது ஒன்றும் புதுச்செய்தி அல்ல. பாபர் அந்த மசூதியை கட்டும் முன் அங்கு வேறு மசூதிகள் இருந்ததென யாரும் கோரவில்லை. அது வரலாறும் அல்ல. அதேநேரம் இந்துக்கோயில் இருந்ததற்கான ஆதாரத்தையும் அகழ்வாராய்வு அறிக்கை தரவில்லை. நியாயமாக அங்கு இதற்கு முன் இந்துக்கோயில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்பதே இவ்வழக்கில் அங்கு மசூதி கட்டுவதற்கான முகாந்திரத்தை அளிக்கிறது. ஆனால் நீதிமன்றம் (திருமாவளவன் சொல்வதைப் போல) இதை வசதியாக தவிர்த்துவிட்டு ஒருதலைபட்சமாக, ஆதாரத்தை தனக்கேற்றபடி வளைத்து பயன்படுத்தி உள்ளது.
4) ராமர் அயோத்தியில் அந்த குறிப்பிட்ட நிலத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த வரலாற்று அகழ்வாராய்வு ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் அதற்குப் பதிலாக புராணக்கதைகளை ஆதாரமாக கருதி உள்ளது. இது இரண்டு விதங்களில் பிரச்சனையாகிறது. இந்தியாவில் ராமர் மட்டும் அல்ல நூற்றுக்கணக்கான வேறு பல கடவுள் அவதாரங்களும் அவர்களுக்காக‘பிறப்பிடங்களும்’ உண்டு. நாளை இதை வைத்து யாருக்கு சொந்தமான நிலத்தையும், வழிபாட்டுத் தலத்தையும் மத அமைப்புகள் உரிமை கோர முடியும். (ஏன் ராவணனைத் தோற்கடித்து ராமர் வென்றெடுத்த இலங்கை மட்டும் ஏன் இந்தியாவுக்கு சொந்தமாகக் கூடாது?)
5) அடுத்து ராமர் ஒரு மனிதராக அயோத்தியில் பிறந்தார் என்றால் அவர் கடவுள் அல்ல மனிதர் என பொருள் வரும். ராமாயணத்தில் ராமர் ஒரு அவதாரம், ஆனால் அவர் மனிதர் அல்ல. விஷ்ணு / சிவனைப் போல தெய்வமும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்டவர். அதனாலே அவரால் வில்லேந்தி கானகத்துக்கு சென்று பெரும் ராட்சதர்களைக் கொல்ல முடிகிறது. சமுத்திரத்துக்குக் குறுக்காக பெரும்பாலம் அமைக்க முடிகிறது. அந்த பாலம் ராம் எனும் பெயர் எழுதப்பட்ட கற்கள் பரஸ்பரம் ஒட்டிக்கொள்ள மந்திரம் போலத் தோன்றுகிறது. இதே காரணத்தால் தான் ராவணனால் புஷ்பக விமானம் ஓட்ட முடிகிறது. அதாவது ராமர் மனிதர் அல்ல என்பதே இந்த அதிசயங்களை, மாந்திரிக நிகழ்வுகளை சாத்தியமாக்குகிறது. இப்போது ராமர் அயோத்தியில் பிறந்தார் என உச்சநீதிமன்றம் சொல்வது உண்மையானால் ராட்சதர்களும் புஷ்பகவிமானமும் உண்மை என ஆகிவிடும். சீதை தீக்குளித்ததும் ராவணனுக்கு பத்துதலை என்பதும் உண்மையாகிவிடும். இவை கதையோ கற்பனையோ அல்ல உண்மைக் கதைகள் என ஆகிவிடும். இப்போது இந்த புனைவுகளை வரலாற்று நூலின் பகுதியாக்கி பள்ளியில் குழந்தைகளுக்கு பழங்கால இந்திய வரலாறு என கற்பிக்கலாமா? உச்சநீதிமன்றம் இதை ஏற்குமா?
6) ஒருபக்கம், மூடநம்பிக்கையை வரலாறாக்குகிறது என்றால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இன்னொரு பக்கம் இந்து நம்பிக்கைக்கே விரோதமானது ஆகிறது – ராமர் ஒரு மனிதர், அவர் நிஜமாகவே வாழ்ந்தார் எனும் போது அவர் தெய்வம் இல்லை, சாய்பாபா, ஶ்ரீஶ்ரீ போல வழிபாட்டுக்குரிய தெய்வீக மனிதர் என ஆகிறது. அதாவது ஶ்ரீஶ்ரீயும் சத்குருவும் ராமரும் ஒரே போன்றவர்கள் என ஆகிறது (ஶ்ரீஶ்ரீ, சத்குருவைப் போன்றே ராமருக்கும் பிறப்பிடம், முகவரி எல்லாம் இருக்கிறது எனும் போது). இதை ஒரு நாட்டார் நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளத் தக்கதே; ஆனால் வைதீக மதம் இதை எப்படி ஏற்க முடியும்? வைதீக இந்து மதத்தில் தெய்வம் தெய்வம் தான், மனிதன் மனிதன் தான். இருவரும் ஒன்றாக முடியாது. உ.தா., கிருஷ்ணருக்கு ஆயிரம் கோபிகையர், மனைவியர் என்பது புராண நம்பிக்கை. லீலை என்பது நிஜமான மனித லீலை அல்ல. ராமரைப் போல கிருஷ்ணனரும் நிஜம் என ஆகிவிட்டால் அவர் ஒரு ஆபாசமான மனிதர் என பொருள் வந்துவிடும். ராமரோ பஞ்சபாண்டவர்களோ தந்தைப் பெயர் அறியாதவர்கள் (சோதனைக் குழாய் குழந்தைகள்) என ஆகிவிடும். அதாவது, நான் இதைக் கூறவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு இப்படி இந்துமனத்தை மறைமுகமாக புண்படுத்தும் பார்வையைக் கொண்டிருக்கிறது. இப்படி தெய்வத்தை மனிதர் என உச்சநீதிமன்றம் கோருவது நாத்திகப் பார்வையாகிறது. கிறித்துவர்கள் ஒருபோதும் கர்த்தர் ஒரு வரலாற்று மனிதர் என ஏற்கமாட்டார்கள். ராமரையோ உச்சநீதிமன்றம் வரலாற்று மனிதராக்கி இந்துக்களை (அவர்களது) அடிக்க அதை ஏன் இந்துத்துவர்கள் ஆதரிக்கிறார்கள்? இந்துத்துவர்கள் இந்துமதத்துக்கு எதிரானவர்கள் என்பதை இது நிரூபிக்கிறதா?
7) இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் வழக்கு இது எனும் பட்சத்தில் இதற்கு ஒரு அறுதியான முடிவை நீதிமன்றம் தந்துள்ளது நல்லதே என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் இது இத்தகைய சர்ச்சைகளுக்கான முடிவாக இருக்கும் என நாம் உறுதியாகக் கூறமுடியாது. 1980இல் இந்திராகாந்தி ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவ அலையை வலுவாக்க விரும்பிய ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடங்களுடன் தொடர்புடைய மசூதிகளைக் குறிவைத்து சர்ச்சைகளை உண்டு பண்ணி, அந்த இடங்களை இந்துக்களுக்காக மீட்க ஒரு இயக்கம் ஆரம்பிக்க முடிவெடுத்தது. இதற்காக காசி, மதுரா, அயோத்தி ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளை இலக்காக்க அது முடிவெடுத்தது. ஏப்ரல் 7-8 ஆகிய தேதிகளில் தில்லி விக்யான் பவனில் நடந்த இந்துத்துவ மாநாட்டில் வரலாற்றுப் பின்னணியையும் மக்கள் ஆதரவையும் கணக்கில் கொண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி தேர்வானது. இதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது அயோத்தி என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் இலக்குபட்டியலில் உள்ள பல பெயர்களில் ஒரு பெயர் மட்டும்தான் என்பது. நாளை இந்துத்துவ அரசியல் தொய்வடையும்போது வேறு மசூதிகள் மற்றும் சிறுபான்மை வழிபாட்டுத்தலங்களை ஆர்.எஸ்.எஸ் எடுத்துக்கொண்டு‘ரதயாத்திரைகளை’ ஆரம்பிக்கலாம்.இந்த தீர்ப்பை ஒரு நீண்டகால பிரச்சனையின் முடிவு என பெருமூச்சுவிட்டு ஏற்காமல் இது ஒரு பெரும் பிரச்சனையின் துவக்கப்புள்ளியாகப் பார்ப்பதே தர்க்கபூர்வமானதாக இருக்கும்.
இத்தீர்ப்பு வெளியான நவம்பர் 9 என்பது மதசார்பற்ற தேசம் என கோரிக்கொள்ளும் இந்தநாட்டின் வரலாற்றில், அம்பேத்கர் எனும் மாமனிதரின் கனவான அரசியலைப்பு சட்டத்தின் வரலாற்றில், ஒரு கறுப்பு தினமாகவே நம் எதிர்கால சந்ததியினரால் அனுசரிக்கப்படும். அந்தளவுக்கு நமது நாட்டின் மத ஒற்றுமைக்கு பாதகமான நாள் இது. சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பின் மீதுள்ள நம்பிக்கைக்கு உலைவைத்த நாள் இது. இறை நம்பிக்கையையும், பகுத்தறிவையும் ஒரே சமயம் அவமானம் நேர்ந்த கறுப்பு தினம் இது.