அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண இயலவில்லை என மத்தியஸ்தம் குழு அறிக்கை அளித்துள்ளதால், அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து மற்றும் இஸ்லாம் அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அதை தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்பட்டு இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் என இந்துக்கள் கூறிவரும் நிலையில், அங்கு ராமர் கோயில் கட்ட இந்துத்துவ வாதிகள் முயற்சி செய்துவருகின்றனர்.
இதையடுத்து அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்குகளில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாகப் பிரித்து ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி பிரச்சினையில் சமரசம் பேச மூன்று பேர் கொண்ட மத்தியஸ்தம் குழுவை அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூன்று பேரும் கடந்த 5 மாதங்களாக இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது மத்தியஸ்தம் குழு.
அந்த அறிக்கையில், அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை எனவும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்தியஸ்தர்களின் சமரச முயற்சியின் தோல்வியைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.