தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் மத்திய அரசின் இந்தி திணிப்பு வெறி தமிழகத்தில் எதிரொலித்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் உள்ள வார்த்தைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்துவந்த நிலையில் தற்போது ஹிந்தி மொழியிலும் வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பயோமெட்ரிக் கருவி எப்படி செயல்படும்:
2019-20 கல்வியாண்டின் தொடக்கமான கடந்த ஜீன் மாதம் முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது. அதற்காக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் தகவல்கள் ஈ.எம்.எஸ்.ஐ எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. ஆசிரியர்களின் ஆதார் எண்ணும் இதனோடு இணைக்கப்பட்டிருக்கும். ஆசிரியர்கள் பள்ளிக்கு உள்ளே வரும் நேரம், வெளியேறும் நேரம் உள்ளிட்டவற்றை அவர்களது விரல் ரேகைப் பதிவு மூலம் இந்த இயந்திரம் பதிவுசெய்யும். எனவே தினமும் காலையில் பள்ளிக்குள் நுழைகையிலும் மாலை வெளியேறும்போதும் ஆசிரியர்கள் தங்கள் விரல் ரேகையை பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
திடீரென திணிக்கப்பட்டுள்ள இந்தி:
ஏற்கனவே ஆசிரியர்களின் வருகைப் பதிவுகள் சார்ந்த அறிவிப்புகள் ஆங்கிலத்திலேயே இடம்பெற்றிருந்தன. பொதுவாக பயோமெட்ரிக் இயந்திரங்களில் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் இயந்திரங்களில் தமிழே இல்லாத நிலையில் திடீரென எவ்வித அறிவிப்புமின்றி ஆங்கிலத்தோடு தற்போது இந்தியும் புகுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.