கொரோனா வைரஸ் பரவலுக்கு முஸ்லிம்களே காரணம் என்ற பொய்யான பிரச்சாரத்தின் மூலம் ஒரூ சமூகமே தாக்குதலுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாகிறது.
தில்லியிலிருந்து ஹன்னா எல்லிஸ்-பீட்டர்ஸென்,
கொல்கத்தாவிலிருந்து ஷேக் அஸிஸுர் ரஹ்மான்
மெஹ்பூப் அலியைத் தாக்கியவர்கள் சற்றும் இரக்கம் காட்டவில்லை. வட மேற்கு தில்லியின் ஹரேவலி கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை அந்த நபரை வயல் வெளிக்குத் தரதரவென இழுத்துச் சென்று தாக்கினார்கள். குச்சி, செருப்பு என கையில் கிடைத்ததை வைத்தெல்லாம் அடித்ததில் மெஹ்பூப் அலிக்கு மூக்கு வாயெல்லாம் ரத்தம். ஒரு மதக் கூட்டத்திலிருந்து அலி அப்போதுதான் திரும்பி வந்திருந்தார். நாடெங்கும் உள்ள இந்துக்களுக்கு கொரோனா வைரஸை பரப்பும் சூழ்ச்சித் திட்டம் இது என்று அந்த இந்து கும்பல் நம்பியது. “கொரோனா ஜிகாத்” தொடுப்பதற்கு முன்பு அந்த மத நம்பிக்கை கொண்ட முஸ்லிம் நபருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என அந்த கும்பல் நம்பியது.
இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. ஆனால் ஏப்ரல் 5ஆம் தேதி அந்த முஸ்லிம் நபரைத் தாக்கியதன் வீடியோ ஆதாரம் தெளிவாகக் காட்டுகிறது. அந்த நபர் ஒரு குற்றவாளி என தாக்கிய அந்த கும்பல் உறுதியாக நம்பியது. “இந்த சதித் திட்டத்திற்குப் பின்னால் இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று சொல்லு” என்று அவரைப் போட்டு அடிக்கிறார்கள். தாக்கிய பிறகு அந்த முஸ்லிம் நபரை அருகிலுள்ள ஒரு இந்து கோவிலுக்கு அழைத்துச் சென்று, இந்துவாக மாறும்படி கட்டாயப்படுத்தி, அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்க முடியும் என மிரட்டியிருக்கிறார்கள்.
தாக்குதல் நடந்து ஐந்து நாட்களான பிறகும் மெஹ்பூப் அலியின் குடும்பம் அந்த பயத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை. கொரோனா பரப்ப வந்ததாக குற்றம்சாட்டினால் பயம் வராதா… “நாங்கள் போலீஸில் புகார் செய்தால் இந்துக்கள் எங்களை இந்த கிராமத்தில் வசிக்க விட மாட்டார்கள்” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர். ஒரு சில வாரங்களுக்கு முன்பு போபாலில் நடந்த ஒரு முஸ்லிம் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்தப் பின்னணியில், நோய் அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும்கூட “கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தின்” பேரில் அவர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் தனிமைப்படுத்தும் வார்டில் வைக்கப்பட்டிருந்தார் என்று போலீஸார் உறுதி செய்கிறார்கள்.
இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தினர் எவ்வாறு பேய், பிசாசு, பூதம் போல சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதற்கான சாட்சிதான் இந்த சம்பவம். பெரும்பான்மை இந்து மக்கள் மீது கொரோனா வைரஸை ஏவிவிடும் காரியத்தைச் செய்கிறாகள் என்று முஸ்லிம் சமூகத்தினர் மீது அடிப்படை ஆதாரமற்ற தீய நோக்கம் கொண்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சிறுபான்மையினர் எத்தனை தாக்குதலைத்தான் எதிர்கொள்வார்கள். சில வாரங்களுக்கு முன்புதான் தில்லியில் இந்து கும்பல்கள் முஸ்லிம்களை குறி வைத்துத் தாக்கியது. இப்போது நாடெங்கும் தங்கள் வர்த்தகங்கள் மீதான புறக்கணிப்பை முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். உணவுப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்களுக்கு “கொரோனா வைரஸ் பயங்கரவாதிகள்” என்று பட்டம் சூட்டப்படுகிறது. உணவின் மீது துப்புவது, தண்ணீர் வினியோகத்தில் கொரோனா கிருமியைப் பரப்புவது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் அவர்கள் ஆளாகிறார்கள். தில்லி, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சில இடங்களில் முஸ்லிம்கள் நுழையக்கூடாது என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
தெற்கு தில்லியின் நிஸாமாபாதில் மார்ச் மத்தியில் நடந்த இஸ்லாமிய மதப் பிரச்சார அமைப்பான தப்லீகி ஜமாத்தின் கூட்டம்தான் கொரோனா வைரஸ் பரவக் காரணம் என்று காவல் துறையும் அரசாங்கம் குற்றம்சாட்டத் துவங்கியதில் ஆரம்பித்தது இத்தனை பிரச்சனையும். தில்லி அரசின் அனுமதியுடன் நடந்த அந்த மாநாட்டில் 8,000 பேர் கலந்துகொண்டார்கள். அதில் நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பலர் தங்களை அறியாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள தங்கள் ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்பிச் செல்லும் போது அதை எடுத்துச் சென்றிருக்கலாம் என்பதும் வெளிப்படையாகத் தெரியும் உண்மை.
அந்த அமைப்பின் கூட்டத்தோடு தொடர்புடைய நாடு முழுவதுமுள்ள எல்லோரையும் சுற்றி வளைக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இது வரை 15 மாநிலங்களில் 27,000 தப்லீகி ஜமாத் உறுப்பினர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு (க்வாரன்டைன்) இருக்கிறார்கள். அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் 10,000 ரூபாய் தரப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை விளம்பரம் செய்தது.
கோவிட்-19க்கான இந்திய அறிவியல் அறிஞர்களின் எதிர்வினை என்ற அமைப்பு கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு தப்லீகி ஜமாத் கூட்டமே பிரதான காரணம் என்ற “யூகங்கள் சரி என்பதற்கு இருக்கிற தரவுகளின்படி எந்த ஆதாரமும் இல்லை” என அந்த அமைப்பு கூறியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரிசோதனை மிக மிகக் குறைவான அளவிலேயே நடத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிவியல் அறிஞர்கள், அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டோரிடையே மிக மிக அதிகமான விகிதத்தில் தப்லீகி ஜமாத் உறுப்பினர்கள் அரசின் உத்தரவின்படி சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறார்கள். இத்தகைய பாகுபாடு அடிப்படையிலான பரிசோதனையின் முடிவுகள் திருகலான முடிவுகளையே வழங்கும் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய கேள்விகள் இருந்தாலும்கூட இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா அரசின் உறுப்பினர்கள் இந்த வாய்ப்பை மிக வேகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இது ஒரு இஸ்லாமிய சூழ்ச்சி என்றும் “கொரோனா பயங்கரவாதம்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
“தாலிபான்கள் போன்ற” குற்றம் செய்தவர்கள் என்று தப்லீகி ஜமாத் பற்றி மூத்த பி.ஜே.பி தலைவர்கள் விமர்சித்தார்கள். “கொரோனா நோயாளிகள் என்ற பெயரில் வரும் மனித வெடிகுண்டு” என்று அவர்களைக் குறிப்பிட்டார்கள். தனது வெறுப்புப் பேச்சுக்களால் புகழ் பெற்ற பி.ஜே.பி தலைவர் கபில் மிஸ்ரா ட்வீட் செய்தார்: “தப்லீகி ஜமாத்காரர்கள் டாக்டர்கள் மீதும் சுகாதார ஊழியர்கள் மீதும் துப்பத் துவங்கியிருக்கிறார்கள். அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவச் செய்வது, கொல்வது அவர்களின் திட்டம் என தெளிவாகத் தெரிகிறது.”
இத்தகைய புரளிகள் பொய் என உடனடியாக நிரூபிக்கப்பட்டாலும் தப்லீகி ஜமாத் உறுப்பினர்கள் க்வாரன்டைனுக்கு செல்ல மறுக்கிறார்கள், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களைத் தாக்குகிறார்கள், இந்துக்கள் மீது மூத்திர பாட்டில் வீசுகிறார்கள் என்ற செய்திகள் பரவத் தொடங்கின.
“Coronajihad,” “CoronaTerrorism” “CoronaBombsTablighi” போன்ற ஹேஷ்டேகுகள் இந்தியாவில் டிரென்ட் ஆக ஆரம்பித்தன. தப்லீகி ஜமாத் உறுப்பினர்களால்தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது என மையநீரோட்ட ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன.
இந்த மாநாடு நடத்தியதின் மூலம் தப்லீகி ஜமாத் அமைப்பிற்கு தொலைநோக்கு இல்லை என தெரிகிறது என தெரிவிக்கும் தில்லி சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் டாக்டர் ஜஃப்ருல்-இஸ்லாம் கான், “இது போல அரசு, அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் மீறல்கள் டஜன்களுக்கு மேல் இருக்கின்றன” என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
அவர் மேலும் சொல்கிறார்: “ஆனால் முழு இலக்கும் முஸ்லிம்கள் மீதுதான் திருப்பப்படுகிறது. நாடெங்கும் புதிது புதிதாக முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. முஸ்லிம்களை சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக்குவது பற்றிய பேச்சுக்களைக் கேட்க முடிகிறது. இந்துத்துவா குழுக்கள் மட்டுமல்ல, பல்வேறு பகுதிகளில் காவல் துறையினரும் முஸ்லிம்களை துன்புறுத்தும் செய்திகள் வருகின்றன.”
தப்லீகி ஜமாத் உறுப்பினர்களை பயங்கரவாதிகள் என்று கூறிய பி.ஜே.பி எம்.பி அனந்த் குமார் ஹெக்டே சார்ந்த கர்நாடக மாநிலத்தில் மிக அதிகமான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. முஸ்லிம் காய்கறி வியாபாரிகளை தங்கள் பகுதியில் அனுமதிக்க வேண்டாம் என்று அதற்குப் பிறகு ஒரு வாட்ஸப் ஆடியோ பரவியது. உணவுப் பொருட்கள் மூலம் அவர்கள் கொரோனா வைரஸ் பரப்புவதாக அதில் கூறப்பட்டது.
கர்நாடகாவின் மராதாஹல்லி, தசரதஹல்லி மாவட்டங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கச் சென்ற சாயேத் தாப்ரேஸ் என்ற (23) என்ற நபரும் அவரது தாய் ஜரீன் தாஜும் (39) தாக்கப்பட்டார்கள். அவர்கள் உணவு வினியோகிப்பதைத் தடுத்த உள்ளூர் பி.ஜே.பி உறுப்பினர்கள் வன்முறையில் இறங்கினார்கள்.
“அந்த பி.ஜே.பியினர் கூட்டத்தில் 20 பேர் இருந்திருப்பார்கள். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். எங்களைப் பார்த்து கத்த ஆரம்பித்தார்கள். “எங்களுக்கு ரேஷன் கொடுக்க நீங்கள் யார். முஸ்லிம்கள் என்பதால் நீங்கள் பயங்கரவாதிகள், நோயைப் பரப்ப வந்திருக்கிறீர்கள்.” என்று கத்தினார்கள். “ரேஷன் பொருட்களில் எச்சில் துப்பி கொடுக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். வைரஸ் கிருமியை பரப்புவதற்காக தப்லீகி ஜமாதிலிருந்து வந்தவர்கள் நீங்கள்” என்று எங்களை நோக்கி ஆவேசமாகப் பேசினார்கள்” என்கிறார் தப்ரேஸ். இரண்டு நாள் கழித்து 25 பி.ஜே.பி உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வந்து அவரையும் அவரது தாயையும் பிற தன்னார்வலர்களையும் கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்கள். இது நடந்தது ஏப்ரல் 4-6க்கு இடையில். அதன் பிறகு போலீஸ் இரண்டு பேரைக் கைது செய்திருக்கிறார்கள்.
இது தனி சம்பவம் அல்ல. ரேஷன் பொருள் வினியோகித்த தங்களது தன்னார்வலர்கள் மீது பல டஜன் முறை தாக்குதல் நடந்ததாகவும் போலீஸும்கூட தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடுகிறார் ஸ்வராஜ் அபியான் என்ற என்.ஜி.ஓவைச் சேர்ந்த மனோகர் இளவரதி.
சில பகுதிகளில் முஸ்லிம்கள் நுழையக்கூடாது என்று இந்த வாரம் மங்களூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. “கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கும் வரை எங்கள் பகுதிக்குகள் எந்த முஸ்லிமும் நுழைய முடியாது” என்று சொல்கிறது அப்படி ஒரு அறிவிப்பு. முஸ்லிம்களுக்கு ஆதரவும் இடமும் கொடுப்பவர்களுக்கு “500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஃபைன் விதிக்கப்படும்” என அங்கனஹல்லி என்ற இந்துக்கள் அதிகம் கொண்ட கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பேசுவதன் வீடியோ கார்டியன் ஊடகத்திடம் உள்ளது.
இந்தியாவில் முஸ்லிம்களை இரண்டாம் தர பிரஜைகளாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் அடுத்த கட்டமாகவே தெரிகிறது இந்த கொரோனா அரசியல். இது பி.ஜே.பியின் இந்துத்துவ தேசியவாத அரசியல் திட்டம் என்பது தெரிந்ததுதான். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் பின்னணியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் சகஜமாக நடந்து வருகின்றன.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை ஆய்வு செய்யும் ஈக்விட்டி லேப்ஸ் என்ற அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஆசிய மனித உரிமை அமைப்பிற்கு கவலை தரும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்தன. “கோவிட்-19-ஐ ஒட்டி மத சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் விஷயத்தில் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்” என்று அந்த அமைப்பு உலக சுகாதார அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“தில்லியில் பல நூறு முஸ்லிம் வீடுகளை, கடைகளை நாசமாக்கிய சில வாரங்களிலேயே இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் இறங்கி வருகிறார்கள். இது வன்முறைக்கும் காரணமாக மாறுகிறது” என்று கூறும் ஈக்விட்டி லேப்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் தேன்மொழி செளந்தர்ரராஜன் இறுதி வாக்கியம் அச்சுறுத்துகிறது: “அடுத்து ஒரு இனப்படுகொலைக்கான (முஸ்லிம்களுக்கு எதிரான) அச்சுறுத்தல் கண் முன்னால் தெரிகிறது.”
நன்றி:
தமிழில்: செந்தில் குமார்