பிப்ரவரி 19, கர்நாடகாவில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் கன்னட கவிஞர் சிராஜ் பிசரல்லி என்பவர் ‘உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?’என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்தார். தற்போது அவரின்மீது ’பொது மக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்திலும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கு நோக்கத்திலும் கவிதை பாடியதற்காக பிரிவு 504, 505இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியுள்ள பாஜக ஆதரவாளர்கள், ‘மத்திய அரசின் கொள்கைகளை அவமானப்படுத்தியதாக’ சிராஜ் பிசரல்லிமீது கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

43 வயதுடைய சிராஜ் பிசரல்லி தனது சீரிய கருத்துக்களால் இலக்கிய பத்திரிகை உலகில் மட்டுமல்லாது தொழிலாளர்கள் பிரச்சினை, தொழிலாளர்கள் உரிமை, சாதிய பாகுபாடுகள் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக இயங்கிவருபவர். தற்போதுள்ள சூழலை மையப்படுத்தி மோடியின் பாசிச அரசை கிண்டல் செய்தும் மதவெறியை வளர்க்கும் ஆன்மிக சிந்தனைகள் குறித்தும் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ள சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி குறித்தும் ஒரு கவிதையை எழுதி அது பொது மக்கள் மத்தியில் வாசித்துள்ளார். இந்தக் கவிதைக்காக எந்நேரமும் அவர் கைதுசெய்யப்படலாம் என்றநிலையில் அவர் முன்கூட்டியே ஜாமீனுக்கு முயற்சி செய்தார். எனினும் அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதில் தயக்கம் காட்டிவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தர்வாட் அமர்வு தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது.

அந்த கவிதையின் தோராய தமிழ் வார்த்தைகள் என்னவென்றால்,

உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?

ஆதார் கார்டுகளுக்காக வரிசைகளில் நிற்பவர்கள்
கட்டைவிரல் ஸ்கேன்களுக்கும் குரங்கு தந்திர சர்வர்களுக்குமிடையில்
அவர்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள் – யாரிடம் கேட்கிறீர்கள் ஆவணங்களை
உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?

தூக்கு மேடைகளில்கூட சிரித்த சுதந்திர
தியாகிகளின் வீரப்புகழை மறுத்து
அவர்களது வரலாற்று பக்கங்களை கிழித்துவிட்டீர்கள்
உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?

தாஜ்மஹால் – சார்மினார்
குதுப்மினார் – செங்கோட்டை
இதற்கெல்லாம் ஆவணங்கள் கேட்கிறீர்கள்
உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?

பிரிட்டிஷாரின் காலணி நக்கிகளான நீங்கள்
எங்களது ரத்ததை குடிக்கிறீர்கள்
உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?

எங்கள் மனிதர்கள் பகோடாவையும் டீயையும் விற்று பிழைக்கிறார்கள்
மனிதத்தையும் கண்ணியத்தையும் அவர்கள் இன்னும் விற்கவில்லை
பொய்களை அவர்கள் காய்ச்சி குடிக்கவில்லை
சொல்லுங்கள், உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?

கிழிந்த ஆடைகளுடன் அழுக்காக
டியூப் டையர்களுக்கு பஞ்சர்போடும் மனிதர்கள்
ஒருபோதும் அவர்களது அடையாளத்தை விட்டுக்கொடுத்ததில்லை
ஆனால் நீங்கள் நாட்டை விற்றீர்கள்
சொல்லுங்கள், உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?

உங்களது அற்புதமான ஆவணங்கள் மூலம்
தேசத்தை மோசடி செய்தவர்களே, குறைந்தபட்சம்
அந்த ஆவணங்களால் மனிதகுலத்திற்கு சான்றளிக்க முடியுமா?
உங்களது ஆவணங்களை எப்போது காண்பிப்பீர்கள்?

இப்படி ஒரு அற்புதமான கவிதை வரிகளை எழுதிய சிராஜ் பிசரல்லி, ஒரு நிகழ்ச்சியில் கொப்பல் மக்களின் முன் ஆவேசமாக படித்து காண்பித்ததற்காகத்தான் போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக ஜனநாயகம் தன்மையை சீர்குலைக்கும் முயற்சியைத்தான் ஆளும் பாஜக அரசு மேலும் மேலும் தங்களுடைய பாசிச கரங்களால் மேற்கொண்டுவருகிறது .

மேலும் கர்நாடகாவில் ஒட்டுமொத்தமாக பத்திரிகை அமைப்புகளுமே ஜாதிரீதியிலான ஒடுக்குதலை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சில பத்திரிகைகள் தங்கள் செல்வாக்குகளின்மூலம் ஆளும் பாஜக அரசிற்கு ஆதவராக சில தலையங்களை எழுதிவருகிறது.

எங்கோ ஓர் மூலையில்தான் கவிஞர். சிராஜ் பிசரல்லி கைது குறித்து அவரது விடுதலை செய்ய கோரியும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன என்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயமாகும்.

நன்றி:https://scroll.in/article/955836/when-will-you-show-your-documents-the-poem-for-which-kannada-poet-siraj-bisaralli-was-arrested