2018 இல் ‘ஹிஸ்டாரிக்கல் சோசியல் ரிசர்ச்’ பத்திரிக்கை நடத்திய ஆய்வு ஒன்றில், உலகிலுள்ள 10 தலைவர்களில் ஒருவர் குடும்ப அரசியலிலிருந்து வந்தவர் என கண்டறிந்துள்ளது.
அந்த ஆய்வில், 2000 இல் இருந்து 2017 வரை ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பிய, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரதமர்கள், அதிபர்கள் என ஏறத்தாழ 1,029 அரசியல் நிர்வாகிகளின் பின்புலத்தை ஆராய்ந்த பின்னர் அதில் 119 பேர் அதாவது 12% உலக தலைவர்கள் அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
‘அரசியல் குடும்பம்’ என்பது ரத்த சம்பந்தமான அல்லது திருமணத்தின் மூலம் ஏற்கனவே அரசியலில் இருப்போர், நீதிபதிகள், கட்சியில் உயர் பொறுப்பிலிருப்பவர், சட்ட வல்லுநர்கள், அதிகாரத்திலிருப்பவகள், அதிபர்கள் மற்றும் ஆர்வலர்கள் போன்றவர்களின் உறவாக இருப்பது.
அப்படிக் குறிப்பிடத்தக்கத் தலைவர்களாக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடெவ், முன்னாள் ஆர்ஜென்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் ஆகியோர் உள்ளனர்.
முடியாட்சிகள், ஜனநாயக நாடுகள், பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என உலகின் எந்த பகுதியிலுள்ள நாடாயினும் குடும்ப அரசியல் தொடர்புகள் முக்கியமாக கருதப்படுகிறது.
முடியாட்சிகளில் அதிகாரம் என்பது இயல்பாகவே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படுகிறது. மக்கள் தங்கள் விருப்பப்படி தலைவர்களைத் தேர்ந்தெடுக்கலாம் எனும் ஜனநாயக நாடுகளிலும் கூட, அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தால் அது நன்மையாகவே கருதப்படுகிறது. அது அந்த வேட்பாளர்களுக்குப் புகழ், அரசியல் அனுபவம், அதிக தொடர்புகளும், இதர வளங்களும் நிரம்பியவர்களாக அவர்களைத் தோற்றுவிக்கிறது.
உதாரணமாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடெவ் இருவரும் ஜனநாயக முறைப்படியே தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுடைய தந்தைகள் முன்னாள் அதிபர்களாக இருந்தது அவர்களுக்கு பெரும் பலனுள்ளதாக அமைந்தது.
வட அமெரிக்காவில் தான் உலகிலேயே அதிக தலைவர்கள் குடும்ப அரசியலிலிருந்து வருகிறார்கள். 2000 முதல் 2017 வரை நடத்திய ஆய்வில் எட்டு அதிபர் மற்றும் பிரதமரில் இருவருக்கு குடும்ப அரசியல் பின்புலமுள்ளது.
வட அமெரிக்காவுக்கு அடுத்து ஐரோப்பாவில் அரசியல் குடும்பங்களிலிருந்து வந்த தலைவர்கள் அதிகமாக உள்ளனர். வலுவான ஜனநாயகம் கொண்ட இந்த பிராந்தியத்தில், 2000 மற்றும் 2017க்கு இடையில் 13% ஐரோப்பிய ஜனாதிபதிகள் மற்றும் பிரதம மந்திரிகள் அரசியல் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். லத்தீன் அமெரிக்காவிலும் இதே விகிதம் தான். 2000 இருந்து 2017 வரை பதவி வகித்த 88 லத்தீன் அமெரிக்கத் தலைவர்களில் 11 தலைவர்களுக்கு குடும்ப அரசியல் பலம் உள்ளது.
ஆப்ரிக்காவில் 29 தலைவர்களில் 18 பேர், முன்னாள் அதிபர்களுக்கும் பிரதமர்களுக்கும் உறவாக இருக்கிறார்கள்.
ஆசியாவிலுள்ள பிரதமர்களும், அதிபர்களும் இந்த பட்டியலின் மத்தியில் வருகிறார்கள். ஆய்வின்படி 204 தலைவர்களில் 23 பேர் குடும்ப அரசியல் வழி வந்தவர்கள். அதில் 75% பேர் பூட்டான், கஜகஸ்தான், ஸ்ரீலங்காவில் இருப்பவர்கள்.
ஆணாதிக்கம் சூழ்ந்த இந்த அரசியல் களத்தில் பெண்களின் பங்கு பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக உள்ளன. 1029 பேர் கொண்ட இந்த ஆய்வில் வெறும் 66 பேர் மட்டுமே பெண்கள். அதில் ஜெர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கல், மறைந்த பாகிஸ்தானியப் பிரதம மந்திரி பெனாசீர் பூட்டோ, அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற லைபீரியாவின் எலென்னன் ஜான்சன் சிரியாஃப் மற்றும் பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரோசெஃப் போன்றோர் முக்கியமானோர்.
இந்த ஆய்வின்படி, ஆண்களை விட குடும்ப அரசியல் மூலம் உயர்ந்த பதவிகளைப் பெண்களே அதிகம் பிடிக்கின்றனர். 66 பெண்களில் 19 பேர் (29%) குடும்ப அரசியல் மூலம் தலைவர்கள் ஆனோர். மீதமுள்ள 963 ஆண்களில் 10% பேரே குடும்ப பின்னணி கொண்டவர்கள். இந்த முடிவுகள் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு குடும்ப உறவுகள் முக்கியம் என்று கூறுகிறது. அரசியல் குடும்ப உறவுகள் ஆண்களுக்கும் உதவுகின்றன. ஆனால், அவர்களுக்குச் சக்திவாய்ந்த வேறு பாதைகள் உள்ளன.
இந்த ஆய்வானது, ஒருவர் தலைமைப் பதவியை அடைய அரசியலமைப்பு மட்டுமே தகுதியுடையது என்ற கருத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் அதே நேரம் இந்த ஆய்வில் உள்ள அனைத்து பெண் உலக தலைவர்களுள் , 71% பேர் அரசியலில் எந்தவொரு குடும்பத் தொடர்பும் இல்லாமல் உயர் பதவிகளை அடைந்துள்ளனர். அதில், குறிப்பாக குரேசிய அதிபர் கோலிண்டா கி.பி. 879க்கு பிறகு குரேசியாவை ஆளும் பெண் அதிபராக உயர்ந்தார். அவர் ஒரு கசாப்புக் கடை வைத்திருப்பவரின் மகள்.
இந்தியாவில் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் வாக்காளர்களுக்கு இந்த ஆய்வு சுவாரஸ்யமாகவும் அதே நேரம் பழக்கமான ஒன்றாகவும் அமைகிறது.