சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது’ என கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மே 12ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசுகையில், “இந்த இடம் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்ல விரும்பவில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காந்தி சிலை முன்பு நின்றுகொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்தக் கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார்.
கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து பிரதமர் மோடி , ‘எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பதே இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை ஆகும். ஒருவர் பயங்கரவாதியாக இருந்தால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது’ என பதில் அளித்துள்ளார்.