“உங்களை மிசாவில் அரெஸ்ட் பண்ணப் போறாங்கன்னு எப்போ உங்களுக்குத் தெரியும்?”
“நான் அரெஸ்ட் ஆனதற்கு முதல் நாள். அதாவது (1976) ஜனவரி 31, என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள். நான் செங்கல்பட்டு பக்கத்திலிருக்கும் மதுராந்தகத்துக்கு தி.மு.க.பிரச்சார நாடகத்துக்காகப் போயிருந்தேன். அன்னிக்கு ‘முரசே முழங்கு!’ நாடகம் நடக்கப் போகுது. நான் நாடகம் போடத் தயாராகி மதுராந்தகம் தங்கும் விடுதியில் இருந்தப்போ ‘தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது’ங்கற தகவல் எனக்குக் கிடைச்சது.”
“நீங்க அதிர்ச்சி அடையலியா?”
“உண்மையில் அந்தத் தகவல் என்னைப் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கலே. காரணம், அரசியல்ல இதெல்லாம் சகஜம்னு தெரியும்.. எப்படி தேர்தலில் வெற்றி தோல்வி சகஜமோ, அப்படி ஆட்சியில், இது போன்ற கலைப்புகளும் சகஜம்தான். அதிலும் அவசர சட்டத்தை (எமர்ஜென்ஸி) எதிர்த்து தி.மு.க. தீர்மானம் போட்ட நிலையில் ஆட்சிக் கலைப்பு எனக்குப் பெரிய அதிர்ச்சியைத் தரலே. என் கவலை எல்லாம் அடடா.. ‘முரசே முழங்கு’ நாடகத்தை இங்கே நடத்த முடியாமல் போயிடுச்சே! அப்படீங்கறதுதான்
“ஆட்சி கலைத்தது தெரிந்ததும் அப்பாகிட்டே பேசினீங்களா?”
“தலைவர் (அப்பா) கிட்டே பேசலாம்னுதான் கோபாலபுரத்துக்குப் போன் போட்டேன். ஆனா ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால், கோபாலபுரத்தில் போனையும் கட் செய்திருந்தாங்க.. அதனால எதுவும் பேச முடியல. என்னைக் கைது செய்ய தேடிட்டு இருக்காங்க அப்படீங்கற தகவலும் அன்னிக்கு இரவே எனக்குக் கிடைச்சது. என்னைத் தேடிட்டு இருந்த போலீசாரிடம் என்னை ஒப்படைக்கிறதா தலைவர் கலைஞர் வாக்குறுதி தந்திருப்பதும் என் காதுகளுக்கு செய்தியாக வந்தது.
தலைவரின் வாக்குறுதியை நிறைவேற்றித் தரும் கடமையுணர்வுடனும் என்னைத் தேடிக் கொண்டிருக்கும் போலீசாரிடம் என்னை ஒப்படைக்க வேண்டுமென்ற உணர்வுடனும் மறுநாள் நான் அங்கிருந்து கிளம்பி கோபாலபுரம் வந்து சேர்ந்தேன்”.
“வாழ்க்கையில் அதுக்கு முன்னே அரெஸ்ட் ஆகி ஜெயிலுக்குப் போயிருக்கீங்களா?”
“இல்லே… மிசாதான் என் முதல் ஜெயில் அனுபவம். முதன் முதல்ல நான் என் வாழ்க்கையில அரெஸ்ட் ஆனது அப்போதான். முதல் தடவைன்னாலும்கூட எனக்கு அரெஸ்ட் பற்றி எந்த பயமோ கவலையோ இல்லே அப்போ.. சொல்லப் போனா வேற ஒரு கவலைதான் இருந்தது. அதாவது என்னை அரெஸ்ட் பண்ணி வேற மாநிலத்துக்குக் கொண்டு போகப் போறாங்க அப்படீன்னு எல்லாம் பலரும் பரபரப்பா பேசிக்கிறதை வச்சு, ‘அடடா… நான் மட்டும் கட்சியின் மற்ற தலைவர்களை ஜெயில்ல பிரிஞ்சிருக்கணுமே’ன்னு நினைச்சுத்தான் கவலையா இருந்தது.”
“அப்பா உங்களைப் பார்த்ததும் என்ன சொன்னார்..?”
“எனக்கு அப்பத்தான் கல்யாணமாகியிருந்தது அப்டீங்கிறதாலும், நான் சின்னப் பையனா இருந்ததாலும், முக்கியமா இது கடுமையான மிசா சிறைவாசம் அப்டீங்கிறதாலும், ஒரு வேளை நான் ரொம்ப பயந்திருப்பேனோன்னு என்னைத் தலைவர் தன் பேச்சால் தைரியப்படுத்தினார். தலைவர் என்னைத் தட்டிக் கொடுத்து ‘ஜெயிலுக்குப் போறதைப் பத்தி கவலைப்படாதே. நீ பெரிய அரசியல்வாதியா பெரிய தியாகியா வரப்போற. நீ கொலை பண்ணிட்டோ, கொள்ளையடிச்சுட்டோ சிறைக்குப் போகல.. இந்த ஜெயில் வாசம் உன் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு படிக்கட்டா அமையும்’னு தட்டிக் கொடுத்தார். தட்டிக் கொடுத்தது மட்டுமில்லே. என்னை இறுகக் கட்டிப் பிடித்து முத்தமும் கொடுத்து அனுப்பினார். எப்பவோ விவரம் தெரியாத சின்ன வயசில் குழந்தையான என்னைத் தூக்கிக் கொஞ்சியபோது கட்டிப் பிடித்து முத்தம் தந்த பிறகு தலைவர் நான் எதிர்பாராத தருணத்தில் எனக்குத் தந்த ஒரு இன்ப அதிர்ச்சி பரிசு இது! முத்தம் தந்தபோது அவர் கண்களிலும் கண்ணீர், அதைப் பெற்றுக்கொண்ட நெகிழ்ச்சியில் என் கண்களிலும் கண்ணீர்.
ஆனால், எங்க ரெண்டு பேருக்குமே அது சோகத்தில் ஏற்பட்ட கண்ணீர் இல்லை. போருக்கு வீரனை அனுப்புகிற மாதிரியான பெருமித நெகிழ்ச்சியில் ஏற்பட்ட கண்ணீர்!
தலைவரிடமிருந்து நான் விடைபெற்றதுமே, பக்கத்திலேயே இருந்த கட்சியின் முன்னணித் தலைவர்கள் ப.உ.சண்முகம், நாவலர், பேராசிரியர், மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம்னு என்னைத் தலைவர்கள் கட்டிப் பிடித்து வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.
அப்புறம்தான் நான் அம்மா, அண்ணன், அண்ணி, அக்கான்னு வீட்டுப் பெரியவங்களை சந்திச்சு ‘போயிட்டு வர்றேன்’னு சொன்னேன்.
அவங்களும் நான் சோர்ந்துடக்கூடாது, பயந்துடக் கூடாதுன்னு என்னைத் தைரியப்படுத்தி வழியனுப்பினாங்க. எனக்கு என் மனைவி துர்காவைப் பார்க்கிறப்போதான் ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு. பாவம்…சின்னப் பெண்! பள்ளிக்கூடப் படிப்பு முடித்து விட்டு அப்படியே திருமணமாகி வந்தவள். என்னை நம்பி வந்த அவளை இப்படித் திருமணமான அஞ்சு மாசத்திலேயே விட்டுட்டு சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கிறதே..அவள் எதையெல்லாம் நினைத்துக் கவலைப்படுவாளோ என்று நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். முக்கியமாக ராசி, கீசி என்று பேசும் புரிந்து கொள்ளாத நபர்கள் யாராவ்து ‘கல்யாணமாகி வந்தவுடன் இப்படி புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிச்சுட்டாளே’ என்று ஏதாவது என் மனைவியை வாய்க்கு வந்தபடி பேசி அதனால் என் மனைவி ஏதும் விபரீதமாக நடந்து கொள்ளாமலிருக்க வேண்டுமே என்று எனக்கு மிகக் கவலையாக இருந்தது. என்னை நம்பி வந்த சிறு பெண்ணை என்னால் அருகிலிருந்து காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் இருக்கிறேனே என்ற கவலைதான்.
அதனால் காந்தி அண்ணியிடமும் மல்லிகா அக்காவிடமும் ‘துர்காவைப் பார்த்துக்கங்க’ என்று கேட்டுக் கொண்டேன். காரணம், எனக்கு இந்த மிசாவின் கடுமையான சிறைவாசம் பற்றி முன்பே ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. மிசா என்றால் மற்ற சிறைவாசம் போல் பெயிலில் ஏதும் வெளியே வர முடியாது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம்னு எதுவும் கிடையாது. எப்போது சிறைத் தண்டனை முடியும் என்றும் தெரியாது.
அதனால், துர்காவுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு எனக்குத் தெரியலே. ஆனால்,என் மனைவியை தைரியப்படுத்தி விட்டுப் போகணும் என்று, ‘நான் 10 நாள் ஊருக்குப் போனா பிரிஞ்சிருக்கிற மாதிரி இரு.. நான் வந்துருவேன்’ன்னு ஆறுதல் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அதுக்கு மேலும் துர்காவின் அந்தக் கலங்கிய கண்களை என்னால் பார்க்க முடியவில்லை.
வெளியே எங்கே கிளம்பிப் போனாலும் பாட்டி, தாத்தா, பெரியம்மா (தலைவரின் முதல் மனைவி பத்மாவதி) படங்களை நாங்கள் கடவுளா நினைச்சு வழிபட்டுட்டுதான் போறது வழக்கம். மிசா சிறைக்குப் போறப்போவும் நான் இந்த மூணு பேரையும் வழிபட்டுட்டே கிளம்பினேன்.
வீட்டுக்கு வெளியே கட்சியோட இளைஞர் அணியினர், மகளிர் அணிப் பெண்கள்னு பெருந்திரளாக அன்புக் கூட்டம். எல்லோர்கிட்டேயும் விடைபெற்று போலீஸ் ஜீப்ல வந்து உட்கார்ந்தேன்.
என்னை அங்கே கொண்டு போயிட்டாங்க, இங்கே கொண்டு போயிட்டாங்கன்னு வெளீல வதந்திகள் உலவிட்டிருந்த அந்த நேரத்தில் என்னை ஏத்திட்டு வந்த அந்த போலீஸ் ஜீப், அங்கே இங்கேன்னு போய் போக்கு காட்டிட்டு கடைசியில் எக்மோர் கமிஷனர் ஆபீசுக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கேதான் நள்ளிரவு வரைக்கும் என்னை ரகசியமா வச்சிருந்தாங்க.
பொதுவா மாலை ஆறு மணிக்கு மேல சிறைக்குக் கைதிகளை கொண்டு போக மாட்டாங்க. ஆனா என்னை கமிஷனர் ஆபீஸ்ல இருந்து நள்ளிரவு 12 மனிக்கு மேலதான் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு போனாங்க.
நள்ளிரவு நேரம்.. இப்போ மாதிரி பெரிய வெளிச்சங்கள் கூடக் கிடையாது அப்போ.. சென்னை மத்திய சிறைச்சாலையோட அந்த பிரம்மாண்ட கேட்டின் பக்கவாட்டுக் கதவு வழியா உள்ளே போனப்போ அந்த கருகருக்கும் இருள்ல ஒரு சுடுகாட்டுக்குள்ள போற மாதிரி இருந்தது”.
‘மிசாவில் கைது செய்த உங்களை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்குள் கொண்டு போனதாகச்’ சொல்கிறீர்கள்… அதற்கு அப்புறம் என்ன ஆயிற்று?
‘சிறைவாசம் என் வாழ்க்கையில் அதுதான் முதல் முறை என்று சொல்லியிருந்தேன் இல்லையா? நள்ளிரவின் அந்த அமைதியும், கடுமையான இருளும், உயர்ந்த மதிற்சுவர்களும் எனக்கு வித்தியாசமான இதுவரை இல்லாத ஒரு உணர்வை ஏற்படுத்தின.
பின்னணி இசைபோல எங்கிருந்தோ சோகக்குரல்களில் பாடல் வரிகள் வேறு காற்றில் மிதந்து வந்தன.
அப்புறம்தான் என் சிறைவாழ்க்கையில் தெரிந்து கொண்டேன், அப்படிப் பாடியதெல்லாம் விரக்தியின் விளிம்பில் இருந்த ஆயுள் கைதிகள் என்று.. இரவின் தனிமை, குடும்பத்தை 20 வருடங்கள், 30 வருடங்கள் என்று நீண்ட காலம் பிரிந்திருக்கும் சோகம் என்று அவர்கள் துக்கம் பீறிடும் நேரம் இதுதான். அதனால்தான் அந்த நேரத்தில் தன் சோகங்களை மறக்க தினமுமே இப்படி வாய்விட்டுப் பாடிக் கொண்டிருப்பார்கள்’
‘உங்களை எங்கே கொண்டு போய்விட்டார்கள்?’
‘ஜெயிலுக்குள் நாங்கள் நடந்து போகப் போக போய்க்கொண்டே இருந்தது அந்த நீண்ட பாதை… இருளில் என்னை நடத்திக் கூட்டிக் கொண்டு போய்க் கொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட சிந்தாதிரிப்பேட்டையில் சிறை முடியும் கடைசி பிளாக் வரை அப்படியே கூட்டிப் போனார்கள். அதற்குள் முகம் தெரியாத அந்த இருள், ஓரளவுக்கு என் கண்களுக்குப் பழகிப் போய் விட்டிருந்தது.
அந்தக் கடைசி பிளாக்கின் முதல் அறைக்கதவு அருகில் வந்ததுமே நின்றார்கள். அந்தக் கனமான இரும்புக் கம்பிகள் கொண்ட கதவின் பெரிய பூட்டுகளை சாவிகள் கொண்டு திறந்தார்கள்.
அமைதி நிறைந்த நள்ளிரவில், இரும்புக் கதவு திறக்கப்படும் சத்தம் பிரம்மாண்டமாகக் கேட்டது. பார்வையை சற்றே கூர்ப்பாக்கிப் பார்த்த போது உள்ளே நிறைய தலைகள் தெரிந்தன. பார்வையை இன்னும் உன்னிப்பாக்க,கதவருகில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
‘உள்ள போடா!’ என்று கதவைத் திறந்ததும் என்னைக் கூட்டி வந்தவர்கள் என்னைத் தள்ளிய தள்ளலில் நான் முன்னால் போய் விழுந்தேன்.
வந்தது நான்தான் என்று எதிர் வெளிச்சத்தில் தெரியாததால் தன் காலை யார் மிதித்தார்கள்..யாரைக் கைது செய்து தங்களோடு அடைத்திருக்கிறார்கள் என்று புரியாததால் ‘யாருப்பா அது?’… என்று கேட்டார் வீரமணி. ‘அண்ணே!..நான்தான்..’ என்று என் பெயரைச் சொன்னேன் நான்.
‘தம்பி நீயா?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் வீரமணி. ‘வா..தம்பி வா! முதன்முதல்ல சிறைக்கு வந்திருக்கே… தாய்க்கழகம் சார்பில் உன்னை வரவேற்கிறேன் வா!…’என்றார் அவர் எனக்கு வரவேற்பு கொடுக்கும் தொனியில்.
நான் கைதானதை அங்கிருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் அதிர்ச்சியான குரலில் இருந்தே தெரிந்தது.
‘சின்னப் பையன்.. இப்போதுதான் கல்யாணமும் ஆகியிருக்கிறது. கட்சியிலும் பெரிய பொறுப்பு எதுவும் இன்னும் தரப்படவில்லை. இந்த நிலையில் மிசா அவசரச் சட்டத்தில் கைது செய்திருக்கிறர்களே!’என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.
‘தம்பீ! வெளில என்ன நடக்குது? ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே.. உண்மையா?’ என்றுதான் எல்லோருமே என்னிடம் முதல்கேள்வி கேட்டார்கள். காரணம், இவர்கள் அனைவருமே முதல் நாள் மாலையே கைதானவர்கள். அந்த சமயம் சிறையின் உள்ளே இருப்பவர்கள் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் இதுபோல் எதையெதையோ எண்ணித் தவித்துக் கொண்டிருக்க, வெளியே இருந்த எங்கள் குடும்பத்தார், உள்ளே எங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்து திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இருட்டில் எங்களில் ஒருவர் முகத்தை மற்றவர்கள் தெளிவாகப் பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும்கூட ஒருவர் கைத்தொடுதலை மற்றவர்கள் உண்ர்ந்து அறிமுகமாகிக் கொண்டோம்.
கட்சியின் அமைப்புச் செயலாளர் நீல.நாராயணன், வி.எஸ்.கோவிந்தராஜன் உட்பட 8 பேர் அந்த இடத்தில் இருந்தார்கள். இப்போது என்னுடன் சேர்த்து மொத்தம் 9 பேர்..
கால் நீட்டிப் படுக்க முடியாத அளவில் சின்னஞ்சிறிய அறை. வளர்ந்த 9 ஆண்கள். ஆனால் அறையோ 8க்கு 8 அடி இருந்தாலே பெரிசு..
வேறு வழியில்லை. கால்களை முழுசாக நீட்டாதபடி ஒருவரை இடித்துக் கொண்டுதான் இன்னொருவர் படுத்தாக வேண்டும்..அப்படித்தான் படுத்திருந்தோம்.
உண்மையில் ‘செல்’ என்று சொல்லப்படும் அந்த சிறு கொட்டடி ‘ஒரே ஒருவரை’அடைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டது… அப்படித்தான் அடைத்தும் வைக்க வேண்டும். ஆனால், அந்த இடத்தில்தான் 9 பேரை ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல் வைத்திருந்தார்கள்.
ஒருவர் மேல்தான் இன்னொருவர் மூச்சுவிட வேண்டும்.
அறையின் ஓரத்தில் இரண்டு பானைகள் கால்களில் உரசின. இன்னொரு பக்கம் கொஞ்சம் பஞ்சுகள்!
‘எதுக்குண்ணே இரண்டு பானை?’ என்றேன் நான். அந்தப் பானையை எடுத்தால் இன்னும் கொஞ்சம் தாராளமாக யாராவது கால் நீட்டிக் கொள்ளலாமே என்று!
‘இதில ஒண்ணு தண்ணிப்பானை..ராத்திரியில தவிச்சா தண்ணி மோந்து குடிக்க.. இன்னொன்னு யூரின் பானை.. நாம ஒன்பது பேருக்கும் ராத்திரி முழுக்க இதுதான் கழிப்பறை!’ என்று மிகச் சாதாரணமாக விளக்கம் சொல்லப்பட, என்னையும் அறியாமல் விலுக்கென்று உதறி மீண்டது என் உடம்பு.
உள்ளே இருந்த கடுமையான வியர்வை நாற்றம், அறையின் முடை நாற்றம் எல்லாம் தாண்டி அறையில் நிறைந்திருந்த அந்த நாற்றத்திற்கான காரணம் புரிந்தது எனக்கு.
அதைவிடக் கொடுமை, காலையில் எழுந்த பிறகுதான் தெரிந்தது. இரவில் எங்கள் கால்களில் தட்டுப்பட்ட பஞ்சுகள் அனைத்தும் இதற்குமுன் இந்தக் கொட்டடியில் அடைக்கப்பட்ட தொழுநோயாளிகளின் ரத்தம் மற்றும் சீழைத் துடைத்து எறிந்த பஞ்சுகள் என்று…
‘தம்பி!… சிறைச்சாலை உனக்குத்தான் புதுசு.. நாங்க நிறையத்தரம் சிறைக்கு வந்திருக்கோம்.ஆனா, வழக்கமா சிறைன்னா இப்படி இருக்காது..அதிலும் சிறையில் அரசியல் கைதிகளுக்குத் தனி மரியாதை உண்டு..ஆனா மிசா சிறை முழுக்க வேறாக இருக்கிறது!’ என்று நொந்து போய்ச் சொன்னார் கி.வீரமணி.
பொதுவாக சிறைச்சாலையில் ஒரு அரசியல் கைதிக்குப் படுக்கை, கொசுவலை, ஃபேன், தலைக்குத் தேங்காய் எண்ணெய், பேஸ்ட், பிரஷ், லுங்கி, காலையில் டீ, மாலையில் வேர்க்கடலை, வாரத்தில் ரெண்டு நாள் நான்வெஜ் தரணும். அதுதான் சிறை விதி.. ஆனா இந்த மிசா சிறை எல்லா விதிகளையும் உடைப்பில் போட்டு விட்டது. இந்தச் சிறையில் இருந்த பலர் பல நாள் குளித்ததே இல்லை..எப்படி முடியும்?
காலை 6 மணியிலிருந்து அரை மணி நேரம் அத்தனை செல் கதவுகளையும் திறந்து விடுவார்கள். அதுதான் காலைக் கடன்கள் கழிக்கவும், குளிக்கவுமான நேரம்… அந்தக் கடைசி (ஒன்பதாவது)ப்ளாக்கில் இருந்த 10 செல்களில் மொத்தம் 100 பேர் இருந்தோம். இத்தனை பேருக்கும் 3 அல்லது 4 டாய்லெட்டுகள்தான் இருக்கும். அரை மணி நேரத்துக்குள் எத்தனை பேர் இதில் போக முடியும்? அவரவர் காலை நேர அவஸ்தையுடன் கியூவில் நிற்பதைப் பார்க்கவே கொடுமையாக இருக்கும். அந்த அரைமணி நேரத்திலேயேதான் பல் துலக்கி, குளிக்கவும் செய்ய வேண்டும்.
தலைவரின் பையன் என்பதற்காகவோ என்மேல் கொண்ட தனிப்பிரியம் காரணமாகவோ என்னுடன் இருந்த ஒரு சிலர் என்னைத் தனியாக கவனிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எல்லோருக்கும் ஆனது எனக்கும் ஆகட்டும் என்று சொன்னேன்.
அடுத்த நாள் காலை அடித்துப் பிடித்துக் கொண்டு கியூவில் நின்றும் அந்தக் கூட்டத்தில் நானும்கூட குளிக்க முடியவில்லை!
காலை சாப்பாட்டுக்குக் கூழ் தந்தபோது குடிக்கவே முடியவில்லை. வாயில் வைக்கவே முடியாதபடி பயங்கர கசப்பு! பசிக்கு சாப்பிடக்கூடாது என்றே வேப்பெண்ணெய் ஊற்றித் தந்திருக்கிறார்கள்! என்னால் முதலில் வாயில் வைக்கவே முடியவில்லை. அப்புறம்தான் நினைத்துப் பார்த்தேன்.
‘மிசாவில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறோம்… இதுதான் நமக்குத் தரப்படும் உணவு. சரி, பழகிக் கொள்வோம்..’ என்று அந்த கசப்பு உணவை என் நாக்குக்கு நான் பழக்க ஆரம்பித்தேன். கடினமாக இருந்தாலும், பசிக்கும் உடல் வலுவுக்கும் உணவு தேவையாக இருக்கிறதே! நாக்கு ஓரளவு பழகிக்கொண்டது.
அன்று இரவுதான் மிசா கைதிகளைப் பிழிந்தெடுத்த அந்தக் கொடூரங்கள் அரங்கேறின.
***
கொடூரத்தின் உச்சகட்டமே நான் அங்கே போன இரண்டாம் நாள் இரவுதான் அரங்கேறியது. அன்றுதான் கண்மண் தெரியாமல் மிசா கைதிகளை அடித்துத் துவைத்த நாள்.. சத்தங்கள் அற்ற அமைதியான இரவு எட்டரை மணி வாக்கில்தான் ஆரம்பித்தது அந்தக் கொடுமை.. அப்போ பாதிப்பேர் தூங்கிட்டாங்க. மீதிப்பேர் பேசிட்டு இருந்தாங்க..அப்போதான் திடீர்னு ‘ஐயா! ஆ! அம்மா!..’ என்று அடிவயிற்றிலிருந்து பலர் அலறும் சத்தம்! அதைக் கேட்டுத்தான் ஏதோ பெரிய விபரீதம் நடக்கிறது என்று புரிந்தது. எங்களது அந்த ஒன்பதாம் பிளாக்கில் தங்கியிருந்தவர்களை ஒவ்வொரு செல்லாகப் போய் அவர்களை வெளியே வராந்தாவில் இழுத்துப் போட்டு, மற்ற செல்லில் இருப்பவர்களும் பார்க்கும்படி விளாசிக் கொண்டிருந்தார்கள்! சுருண்டு விழுந்தபடி, வயிற்றைப் பிடித்துக் கொண்டபடி ஒவ்வொருவரும் அடிவயிற்றிலிருந்து சத்தமெழுப்பிக் கதற, அந்தக் கதறல் அடித்தவர்களுக்கு இன்னும் வெறியூட்டி இருக்கும் போல.. இன்னும் சத்தத்துடன் அடிகள் விழுந்தன!..
கடைசி செல்லான 10ஆவது செல்லில் ஆரம்பித்து வரிசையாக ஒவ்வொரு செல்லில் இருந்தவர்களையும் இப்படியே இழுத்து வெளி வராந்தாவில் போட்டு மற்றவர்கள் பார்க்க அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார்கள்..
சாதாரணமாக ஒரு விபத்து விஷயத்தில்கூட அந்த விபத்தில் அடிபடுபவரைவிட, அந்த விபத்தை அவர் எப்படி சந்தித்திருப்பார்.. அந்த சமயங்களில் அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கும் மற்றவர்களுக்குத்தான் அந்த விபத்து இன்னும் பயங்கரமாகத் தெரியும்!. மனித மனதின் இந்த பலவீன இயல்பைத் தெரிந்துகொண்டு கொடூரமான அந்த அடிகள் பற்றி ஒரு பெரிய பயத்தை எங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றே அந்த நள்ளிரவில் வரிசையாக ஒவ்வொரு அறையிலும் இருப்பவர்களை வெளியே மற்றவர்கள் பார்க்க இழுத்துப் போட்டு அடித்து மிதித்தார்கள்.
இதோ எட்டாவது செல் வந்தாகி விட்டது. அடுத்து நமக்குத்தான். இதோ அதற்கடுத்து..என்று அனைவரும் முதுகுத்தண்டு சிலீரிட அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லத்தியால் அடித்த அந்த ஒவ்வொரு அடியும் நங்கு நங்கு என்று படு சத்தத்துடன் விழுந்தது. லத்திகள் முழுக்க கைதிகளின் பிய்ந்த சதைகள் ரத்தத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது பார்த்த பலரை இன்னும் நடுங்க வைத்தது!
இந்த இரவில் நான் மூன்றாவது செல்லுக்கு மாற்றப்பட்டிருந்தேன். அங்கே அன்றிரவு நான், ஆற்காட்டார், சிட்டிபாபு, நீல.நாராயணன், வி.எஸ்.கோவிந்தன் என ஐந்து பேர் இருந்தோம். ஐந்தாவது செல்…நாலாவது செல் என ஒவ்வொன்றாக முடிந்து அடுத்து எங்கள் செல்லின் அந்த இரும்புக் கதவு திறந்தது.
“வாங்கடா வெளீல…”என்று பெருங்குரல் வந்தது! அண்ணன் சிட்டி பாபு எதையும் வேகத்துடன் எதிர்த்து நிற்பவர். அவரே முன்னால் சென்றார்.
“வாடா, நீ தான் சிட்டிபாபுவா?” என்று அவர் கன்னத்தில் இறங்கியது அடி! தொடர்ந்து இதே மாதிரி பளீரென்று இறங்கின லத்தி அடிகள்..
ஆற்காட்டாருக்கும் அதே வரவேற்புதான். “நீதாண் வீராசாமியாடா?” என்று அவரை அடித்த அடிகளில் அவர் நெடுமரம்போல அப்படியே சாய்ந்து விட்டார்.
“வாடா வா! நீதான் ஸ்டாலினா? நீதான் கருணாநிதியோட பையனா?” என்று கண்களில் கொலை வெறியுடன் கேட்டபடியே ஒருவன் என் கன்னத்தில் இடி மாதிரி ஒரு அறைவிட, எனக்கு அப்படியே பார்வையே தட்டாமாலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அடுத்தது லத்தியால் முழங்கையில் விழுந்தது முதல் அடி.. அவ்வளவுதான்! ‘ஐயோ..’ என்று நான் சுருண்டு முழங்கையைப் பிடித்தபடியே அப்படியே நினைவு இழந்து விழுந்துவிட்டேன். அப்புறம் எத்தனை அடிகள் விழுந்ததோ தெரியவில்லை. அப்புறம் அறையில் வைத்து எங்களைப் பூட்டின பின் என் செல் தோழர்கள் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிய பின்புதான் நான் விழித்தேன்.
வாங்கிய அடியில் ஆளுக்கொரு பக்கம் உடம்பைப் பிடித்து முக்கி முனகியபடி இருந்தார்கள் அனைவரும்! அதிலும் சிட்டிபாபு அண்ணன், சுருண்டு மயக்கமாகி விழுந்து விட்ட என்மேல் அடிகள் எதுவும் விழக்கூடாது என்று என்மேலே குறுக்கே படுத்து அந்த அடிகளை முழுசாகத் தன்மேல் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
என் முகத்தை நசுக்க வந்த பூட்ஸ் காலைத் தன் உடம்பில் ஏந்தியிருக்கிறார். என்னை அடிக்க வந்தவர்கள் பூட்ஸால் நசுக்கி ஆத்திரத்தில் அவர்மேல் ஏறி மிதித்ததில், அவருடைய கல்லீரல் ரொம்ப பாதிப்படைந்து விட்டது (இந்த மரண அடிகளே அவருக்கு வினையாக முடிந்து அவர் இன்னுயிரை சிறையிலேயே பறித்துக் கொண்டது) அப்புறம் அங்கே நினைவற்று விழுந்து கிடந்த சிட்டிபாபு அண்ணனைத் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டோம்! அந்த இடமே சுடுகாட்டின் மௌனத்தைவிட மோசமாக இருந்தது! என்ன பேசுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
எல்லோருக்குமே பிரமை பிடித்தது போல ஆகிவிட்டது. இப்படித்தான் இனி தினமுமே இரவில் அடிகள் தொடருமோ என்று பய சந்தேகம் ஒருபுறம்.. யாருக்கும் எதுவும் புரியவில்லை. சிறைவிதிகளை எல்லாம் தூக்கி குப்பையில் கடாசி விட்டு இப்படி தன்னிச்சையாக நடக்கும் இந்த சிறையில் இனி அடுத்து என்ன நடக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் திகில் நிமிடங்களாகவே அனைவருக்கும் இருந்தது.
அந்த ஒன்பதாம் நம்பர் பிளாக்கில் கைதிகளாக இருந்த எங்களை இப்படிக் கொடூரமாக அடித்ததும்கூட ஒரு கைதிதான்..ஆயுள் கைதி..அவன் பேர் சுருளி.. சிறைக் காவலர்கள் ஆயுள் கைதிகளின் மன வெறுப்பையும் உடல் வலுவையும் பயன்படுத்தி எங்களை இப்படி அடிகளால் துவைத்துக் காயப் போட்டிருக்கிறார்கள்.
காலைக்கடன் முடிக்கக்கூட எழ முடியாமல் அடுத்த நாள் திணறினார்கள் பலர். எல்லோரையுமே சிறைக்குள்ளே இருக்கும் மருத்துவமனைக்கு வரச்சொல்லி எங்கள் காயங்கள் ஆற இங்க் போன்ற வயலெட் கலர் மருந்து போட்டு விட்டார்கள்.
காயங்கள் ஆறும்வரை வெளியே யாரையும் பார்க்கக் கூடாது என்பதாலேயே அதுவரை நாங்கள் எங்களது குடும்பத்தாரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை.
முதன்முதலில் சிறையில் என்னைப் பார்க்க என் மனைவியும் அம்மா உட்பட என் குடும்பத்தாரும் வந்தபோது கூட, அன்றைய தினம் சூபிரின்டெண்ட் வித்யாசாகர் என்னைக் கூப்பிட்டு ‘இங்கே நடந்த எதையும் யாரிடமும் ஒரு சின்ன அளவில்கூட சொல்லக் கூடாது என்று எச்சரித்துதான் அனுப்பினார். என் சோர்வு வெளியே தெரியக்கூடாது என்று ஷேவ் பண்ண வைத்துக் கூட்டிப் போனார். ஆனால் என்னதான் இருந்தாலும் உண்மையை யாரால் மறைக்க முடியும்? இதுபோல் காட்டுமிராண்டித்தனமாகக் கைதிகளை, அதுவும் அரசியல் கைதிகளை அடித்ததுப் பற்றி பலரும் வெளியே பேச ஆரம்பிக்க அது பெரிய பிரச்னையானது அப்போது.. தவிர தி.மு.க.கட்சியும் இது குறித்து ஒரு கேஸ் போட்டது. அப்புறம்தான் சிறையில் என்ன நடக்கிறது என்றி விசாரிக்க டெல்லியிலிருந்து சிறைத்துறை உயரதிகாரிகள் சென்ட்ரல் ஜெயிலுக்கு எங்களை விசாரிக்க வந்திருந்தார்கள்.அப்போதும்கூட அந்த உயரதிகாரிகளிடம் யாரும் எதுவும் பேசக்கூடாது என்று கடுமையாக உத்தரவு போட்டிருந்தார்கள்.
ஆனால் முரசொலி மாறன் அத்தான் எதற்கும் பயப்படாமல் துணிந்து, இங்கு நடந்த அராஜகத்தை எல்லாம் அந்த உயரதிகாரிகளுக்கு விளக்கிச் சொன்னார். அவர் பேச ஆரம்பித்ததுமே மற்றவர்களும் தைரியத்துடன் பேச ஆரம்பித்தார்கள். ‘எங்களுக்கு சிறை விதிகளின்படி எந்த அடிப்படை வசதியும் தருவதில்லை.. குறிப்பாக 24 மணி நேரமும் செல்லில் ஆடுமாடுகளைப் போல அடைத்து வைப்பதால் எங்களில் பலர் டாய்லெட் கூடப் போக முடியவில்லை. பல் தேய்க்க முடியவில்லை.. குளிக்க முடியவில்லை..’ என்று சொன்னோம்.
அந்த உயரதிகாரிகள் அன்றே அந்தக் கட்டுப்பாட்டை நீக்கி விட்டார்கள்.
அன்றிலிருந்து காலை 6 மணிக்குத் திறந்து விட்டால், மாலை 6 மணிக்குத்தான் மறுபடி எங்களை அடைத்து வைப்பது என்று வழக்கம் வந்தது.
மிசாவில் கைதானவர்களில் வேறு ஊர்களில் இருந்த கைதிகளுக்கு நடக்காத கொடுமைகள் சென்னையில் மட்டும் நடக்க ஒரு காரணம் இருந்தது..அது யாரும் எதிர்பாராத காரணம்..
***
“மிசாவின்போது, மற்ற வெளியூர் சிறைகளில் கைதாகி இருந்தவர்களுக்கு நடக்காத ஒரு கொடுமை சென்னையில் கைதானவர்களுக்கு நடக்க, யாரும் எதிர்பாராத ஒரு காரணம் இருப்பதாகச் சொன்னீர்களே?”…
“ஆமாம்.. அவசர சட்டமான மிசாவில் பல மாநிலங்களிலும் எங்களுக்கு முன்பே பலர் கைதாகி இருந்தார்கள். தி.மு.க.அதை எதிர்த்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதால், தி.மு.க.ஆட்சி பறிக்கப்பட்டு கட்சியின் பல பிரமுகர்கள் கைதானார்கள். தமிழகம் முழுக்க இப்படி 500 பேருக்கும் மேல் அரெஸ்ட் செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். இதில் சென்னை சிறையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தோம்.
ஆனால் அந்த சமயம் மற்ற தமிழக சிறைகளில் வேறெங்கும் நடக்காத டார்ச்சர்கள் சென்னை சிறையில் நடந்தன. சிறைச்சாலை விதிகளையெல்லாம் தூக்கி குப்பையில் கடாசிவிட்டு எங்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்து வைத்து ரத்தம் தெறிக்க மிருகத்தனமாக அடித்தார்கள். பசிக்கு சாப்பிட விடாமல் சாப்பாட்டில் மண் அள்ளிப் போடுவது, வேப்பெண்ணெய் விடுவது என்று கொடூரம் செய்தார்கள்.
மனோரீதியாக எங்களைப் பயமுறுத்தி தி.மு.க.விலிருந்து வெளியேறச் செய்ய வேண்டும் என்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. அதனாலேயே அங்கிருந்த மிசா சிறைக் கைதிகள் யாராவது தி.மு.க.விலிருந்து ராஜினாமா செய்வதாகக் கடிதம் எழுதித் தந்தால் விட்டு விடுவதாகச் சொல்லப்பட்டது.
எப்படியாவது இந்தக் கொடுமையான கட்டத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்று பயந்து இந்த கண்டிஷன்களுக்கு ஒத்துக் கொண்டு தி.மு.க.விலிருந்தே ராஜினாமா செய்கிறோம் என்று அப்போது எழுதித் தந்தவர்களும் ஒரு சிலர் உண்டு. தற்போது தி.மு.க.வில் இருக்கும் அவர்கள் யார் என்று இப்போது சொல்வது நாகரிகம் அல்ல என்பதால் சொல்ல முடியாது.
முதலில் நாங்கள் இந்த விஷயங்கள் எல்லாம் தமிழகத்தில் மிசாவில் கைதானவர்கள் உள்ள எல்லா சிறைச்சாலைகளிலும் நடக்கிறது என்றே நம்பினோம். எங்கே எது நடக்கிறது, யாரை என்ன செய்யப் போகிறார்கள் என்று எந்த விஷயம் பற்றியும் குழப்பங்கள் நிறைந்த சூழலாக இருந்தது. அதனாலேயே மிசாதான் இந்த வன்முறையான பழிவாங்கலுக்கும், பயமுறுத்தலுக்கும் காரணம் என்று நம்பினோம்.
மிசா நேரத்தில் நிகழ்ந்த இந்த வன்முறை வெறியாட்டங்கள் குறித்து தி.மு.க.கட்சியும் கேஸ் போட்டதால் பிறகு ‘இஸ்மாயில் கமிஷன்’மூலம் இவற்றை விசாரணை செய்தார்கள்.
ஆனால் பிறகு தெரிந்த விஷயம் என்னவென்றால் சென்னை சிறையில் நிகழ்ந்த இத்தனை வெறியாட்டங்களுக்கும் காரணமே சென்ட்ரல் ஜெயிலின் சூபரின்டெண்ட்டெண்ட் வித்யாசாகரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புதான்.
வித்யாசாகரின் அப்பா பச்சையப்பன் டிரஸ்ட் தலைவர் பதவிக்காக எலெக்ஷனில் நின்றிருக்கிறார். அவரை எதிர்த்து தி.மு.க.சார்பில் என்.வி.என்.சோமுவைக் கட்சி அதே பதவிக்கு நிறுத்தியது. அதில் தி.மு.க.ஜெயித்தது. இதை ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பாக எடுத்துக்கொண்டு தன் தந்தையை எதிர்த்த தி.மு.க.காரர்களைப் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் இந்த வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறார் வித்யாசாகர். ஜெயில் சூபரின்டெண்ட்டெண்டாக இருந்த அவர், தன் ஆளுமைக்குக்கீழ் இருந்த சென்னை சென்ட்ரல் சிறையில் மிசா கைதிகளாக வந்து சேர்ந்தவர்களை வன்முறையோடு அடித்து நொறுக்கிப் பழிவாங்கியது இதனால்தான்.
ஒரு தனிப்பட்ட நபர் ஒரு கட்சிமீது கொண்ட பழியைத் தீர்க்க மிசா நேரம் மிகச் சரியாக அவருக்கு வாய்த்தது. தன் படைபலத்தைப் பயன்படுத்திப் பழிவாங்க முயன்றிருக்கிறார். இவரது இந்த வெறியாட்டத்தில் வயதானவர், உடல்நிலை சரியில்லாதவர் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை..எல்லோருக்கும் ஒரே மாதிரியான வன்முறை ட்ரீட்மெண்ட்தான். உதாரணமாக, ‘முரசொலி’யில் எழுதும் அடியார் என்று ஒரு எழுத்தளர். விடுதலை இயக்கத்தை ஆதரித்து நிறையப் பேசுவார். அவர் இருதய பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டபின் இந்த மிசா சிறைவாசம் அனுபவித்தார்.
அவரை ஜெயில் சூபரின்டெண்ட்டெண்ட் வரச் சொன்னதாகச் சொல்லி சிறையில் ‘டவர் பிளாக்’ என்ற இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். சிறை வளாகத்தில் ஒருவரை அடித்துத் துவைப்பதற்கு என்றே ஒரு இடம் வைத்திருக்கிறார்கள். அதுதான் இந்த ‘டவர் பிளாக்.’
இங்கே யாரையாவது கூட்டிக் கொண்டு போகிறார்கள் என்றாலே போட்டு செமையாகப் பின்னியெடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்து விடும். அடியாரும் அப்படியே நடுங்கிக் கொண்டேதான் போனார். அங்கே போனதும் அவரை பைபாஸ் சர்ஜரி பண்ணியவர் என்றுகூடப் பார்க்காமல் மிருகத்தனமாக அடி பின்னியெடுத்து விட்டார்கள். அடியாரால் பேசக்கூட முடியவில்லை. விஷயம் சீரியஸாகி அன்று இரவு மூச்சு விடவே முடியாமல் மிகச் சிரமப்பட்டுப் போனார். அப்புறம் உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடி ட்ரீட்மெண்ட் தந்தார்கள். அண்ணன் சிட்டிபாபுவோ அந்த வன்முறை வெறியாட்டங்களில் உடம்பு புண்ணாகி மீட்கவே முடியாதபடி தன் இன்னுயிரை சிறையிலேயே விட்டார்.
***
‘சின்ன வயசில பள்ளி, கல்லூரி விண்ணப்பங்கள்ல அல்லது மற்ற ஏதாவது விஷயங்களுக்காக ‘உன் அங்க அடையாளம் ஏதாவது சொல்லு’ன்னு யாராவது கேட்டா, என் இடது ஆள் காட்டி விரலின் உள்ளங்கை பகுதியில் இருக்கற ஒரு கறுப்பு மச்சத்தைத்தான் எப்பவும் குறிப்பிடுவேன். மிசாவுக்கு அப்புறம், ஜெயில்ல அவங்க அடி பின்னின பின்னுல என் வலது முழங்கைப் பகுதியில் ஒரு பெரிய தழும்பு நிரந்தர தழும்பா நின்னுருச்சு. அதுக்கப்புறம் இப்போல்லாம் இந்த ரெண்டு தழும்புகளையும்தான் என் அங்க அடையாளமா தந்துட்டு இருக்கேன்.
எங்களை ஜனவரி 31இல் ஜெயில்ல அடைச்சதுக்கு அப்புறம் அடுத்து வந்த மூணு நாலு மாசங்களும் இப்படித்தான் ரொம்பக் கஷ்டப்பட்டோம். படுக்கக் கூட இடமில்லாத அறையில் ஒண்ணா ஆடு மாடுங்க மாதிரி போட்டு அடைச்சு வைக்கிறது, அடிப்படை வசதிகளான படுக்கை, ஃபேன் கூட இல்லாமல் பண்றது, சோப், பேஸ்ட் மாதிரி தினசரி தேவைகூட சரியா தராம இருக்கிறது, சாப்பாட்டில் வேப்பெண்ணெய் ஊத்துறது, கொஞ்சம் மண் அள்ளிப் போடுறது, எது கேட்டாலும் அவங்களை அடி பின்னியெடுக்கிறதுன்னு இருந்த அந்த சூழல் மாற மூணு நாலு மாசம் போல ஆனது. அதுக்குள்ள இந்த விஷயங்கள் எல்லாமே பரபரப்பாக வெளியே பேசப்பட்டது. தி.மு.க.கட்சியும், இதுக்காக ரொம்ப ஆக்டிவ்வா செயல்பட்டதால் ஜெயிலின் மேல் மட்ட அதிகாரிகள் வந்து விசாரணையெல்லாம் நடத்தினாங்க. நாலஞ்சு மாசத்திலேயே சிறையோட சூபரின்டெண்ட்டெண்ட் வித்யாசாகரையும் அந்த சிறையில் இருந்து வேறு இடத்துக்கு மாத்திட்டாங்க.. அவர் மாறிய பின்பு சிறையிலும் நிலைமை சுமுகமாகி விட்டது.
ஜெயில் அனுபவங்கள் பற்றிப் பேசும்போது நாங்கள், அதாவது தி.மு.க.கட்சியினர் எப்படியெல்லாம் கட்சிக்காக கஷ்டப்படத் தயாராக இருந்தோம் என்று பல விஷயங்கள் எனக்கு ஞாபகம் வருகிறது.
உதாரணமாக, முரசொலி மாறன் அத்தான் எம்.பி.யாக டெல்லியில் இருந்ததால் சென்னையில் மிசா கைதுகள் நடந்த அன்று இல்லை.
கட்சியின் சில முக்கியஸ்தர்கள் 31ஆம் தேதியே கைதாகி இருந்தார்கள். நான் 1ஆம் தேதி கைதானேன். மாறன் அத்தான் டெல்லியிலிருந்து திரும்பியதும் அடுத்த 2 நாட்களில் அதாவது 3ஆம்தேதி கைதானார். பிற்பாடு ஒரு வருடம் கழித்து எங்களையெல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்தபோது முரசொலி மாறன் அத்தான், “அதுக்குள்ளே ஏன் என்னை விடறீங்க? நான் லேட்டாதான் வந்தேன். அதனால என்னை இன்னும் சிலநாள் வச்சிருந்து அப்புறம் விடுங்க”ன்னு சொல்லிட்டு நின்னுக்கிட்டார். கட்சிக்காக ஜெயில்ல மத்தவங்க அதிகநாள் இருந்து, தான் மட்டும் குறைவான நாள் இருந்துடக் கூடாதுன்னுதான் அவர் அப்பிடிச் சொன்னார். அப்போ ஒவ்வொருத்தருமே அப்படித்தான் நினைத்தோம்..
வெளியே இருந்து எங்கள் குடும்பத்தினர் வாரா வாரம் எங்களை வந்து பார்க்க ஆரம்பித்த அப்புறம் ஓரளவு எங்களுக்கு பழம், பிஸ்கெட், பிரெட் என்று சாப்பிட நல்ல பொருட்கள் கிடைக்க ஆரம்பித்து விட்டன.
சிறையிலேயே பீடி, சிகரெட் எல்லாம் தர வேண்டும் என்று விதிமுறையில் இருந்ததால் கைதிகளுக்கு இவையும் வழங்கப்பட்டது. சிகரெட் பீடிக்கான நெருப்பு ஒரு கயிற்றில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும்.
எங்களுக்கு அப்புறம் 2 மாசங்கள் கழிச்சு கைதாகி சிறைக்கு வந்த டி.ஆர்.பாலுவுக்கு நாங்கள் சிகரெட் பாக்கெட்டை அசோக மரத்தின் இலைகளில் கோர்த்து ஜாலியாக ஒரு வரவேற்பு தந்தோம். தலைவருக்குக் காரோட்டியதற்காக டி.ஆர்.பாலுவை அரெஸ்ட் செய்திருந்தார்கள். சிறையில் நிலைமை சுமுகமான அப்புறம் நாங்களே சிறையில் அண்ணா பிறந்த நாள், தலைவர் கலைஞர் பிறந்த நாள், முப்பெரும் நாள்னு போட்டிகள் எல்லாம் வச்சு, ஸ்வீட் எல்லாம் செஞ்சு கொண்டாட ஆரம்பிச்சுட்டோம். ஸ்வீட்கூட நாங்களே செய்வோம்..நான் அரிசியில் கல் பொறுக்கித் தருவேன். இன்னொருத்தர் காய்கறி வெட்டுவார். இன்னொருத்தர் திட்டமாக உப்பு, புளி, காரம் எல்லாம் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறுவார். தினமும் ஒருத்தர் என இந்த வேலைகளை மாற்றிக் கொள்வோம். செய்யத் தெரியாமல் நாங்களே செய்த உணவு, ருசியில் குறைவாக இருந்தாலும்கூட எங்களுக்கு அறுசுவை விருந்துபோல் இருந்தது.
நான் புத்தகங்கள் அதிகம் படிக்க ஆரம்பித்ததும் சிறையில் இருந்த அந்த நேரத்தில்தான். காண்டேகரின் பொன்மொழிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தன. நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ நாவலையும்கூட நான் அங்கேதான் படிச்சேன் (பிற்பாடு அதில் நான் நடிக்க டி.வி.சீரியலாவும் கூட எடுத்தோம்).
இதுபோல் நிறையப் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சிறையில் நிலைமை இப்படி சுமுகமானதுக்கு அப்புறம் நாங்கள் அனைவருமே ஆயுள் கைதிகளிடம் ரொம்பவும் நட்புடன் பழக ஆரம்பித்து விட்டோம். இவர்களில் சிலரைத்தான் நாங்கள் சிறைக்கு வந்த புதிதில் எங்களை மிருகத்தனமாக அடித்துத் துவைக்கப் பயன்படுத்தினார்கள்.
நாங்களே நட்பாகப் பேச ஆரம்பித்தபின் சிறையின் சூழலே மாறிப்போனது. அவர்கள் தங்கள் சொந்தக் கதை, சோகக் கதை என எல்லாவற்றையும் சொந்த சகோதரர்களிடம் கொட்டுவது போல கொட்டுவார்கள். பேசப்பேச பல உணமைக் கதைகளும் வெளிவரும். 15 வருடங்கள், 20 வருடங்கள் எனத் தொடர்ந்து சிறையில் இருக்கும் இந்த ஆயுள் கைதிகளில் 99% பேர், பழிவாங்கும் வகையில் திட்டமிட்டு ஏதும் குற்றங்கள் செய்தவர்கள் இல்லை.
அந்த நேரத்தைய உணர்ச்சி வேகத்தில் அதாவது, அண்ணன் – தம்பி தகராறு, பங்காளிச் சண்டை, வரப்புத் தகராறு, மனைவியிடம் சந்தேகம் என்று உணர்ச்சி வசப்பட்டு தவறு செய்துவிட்டு தண்டனை அனுபவிப்பவர்கள்!
இத்தனை வருட சிறை அனுபவம் இவர்களில் பலரை நன்கு பக்குவமாக்கி இருப்பது அவர்களிடம் பேசும்போதே நமக்குப் புரியும். ஆயுள்கைதிகளில் பலர் ரொம்ப பொறுமையா ரொம்ப நல்லவங்களாக இருப்பார்கள்.
நடராஜன்னு ஒரு ஆயுள் கைதி..ராஜபாளையத்துக்காரர்..அவர் வாழ்க்கை பற்றி நிறைய தத்துவங்கள் சொல்வார். இந்த மனுஷருக்கு சிறை எத்தனை பக்குவத்தைத் தந்திருக்கிறது என்று தோன்றும். இவர் மாதிரி இன்னும் பல சுவாரஸ்ய கேரக்டர்கள்.
இதுபோல் அப்புறம் பொழுதுகள் பயனுள்ளதாகவும், கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும், சமயங்களில் சீரியஸாகவும், சுற்றிச் சுற்றி நண்பர்களே இருந்ததால் பல நேரங்களில் ஜாலியாகவும், சில நேரங்களில் நெகிழ்ச்சியுடையதாகவும் போய்க் கொண்டிருந்தது.
ஆனால்…எங்களுடனே எங்கள் அன்புக்குரியவராக இருந்த ஒருவர் சிறையிலேயே உயிர் விட்ட அந்த நாளை நினைக்கும் போதுதான் இப்போதும் உடல் நடுங்குகிறது!
மிசா சிறையில் எங்களுடனே இருந்த எங்கள் அன்புக்குரிய ஒருவர் சிறையில் பட்ட அடிகள் விளைவால் உயிர் துறக்க நேரிட்டதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அவர் சிட்டிபாபு.. நான் அண்ணே என்றுதான் இவரை அழைப்பேன். மிசா கைதிகளில் சிறையிலேயே உயிர் துறந்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான். தி.மு.க.வின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் பிறகு சென்னை மேயராகவும், எம்.பி.யாகவும் பதவி வகித்தவர். சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தவர் அவர். அறிஞர் அண்ணா நடத்தி வந்த ஹோம் ரூல் ஆங்கில வார இதழுக்கு சில காலம் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்த அவர்தான் என்னை ஆரம்பத்தில் கட்சிக் கூட்டங்களுக்கு எல்லாம் கூட்டிப் போவார். நாங்கள் இருவரும் சேர்ந்து என் திருமணத்துக்கு முன் என் அண்ணன் மு.க.முத்துவை வைத்து ஒரு திரைப்படமும் கூட தயாரித்தோம்.
சிறையில் பட்ட கொடூரமான அடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர் சிட்டிபாபு அண்ணன்தான். அதிலும் என்னை மிருகத்தனமாகச் சிறையில் அடித்தபோது ஓடிவந்து குறுக்கே விழுந்து என்மீது விழ வேண்டிய அடிகளை எல்லாம் தன்மேல் தாங்கிக் கொண்டவர் இவர்.
சிறைக் காவலர்கள் மிருகத்தனமாக அடித்த கொடூர அடிகளில் அன்றிரவு அவரது தொப்புளே கிழிந்து வெளியே வந்துவிட்டது. மருத்துவமனையில் அதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்து மேல் காயங்கள் அப்போதைக்கு ஆறியது போல் தோன்றினாலும்கூட உள் காயங்கள் அப்படியே இருந்திருக்கின்றன.
ஏற்கனவே அவர் ஹார்ட் பேஷண்ட் வேறு.. டயபடீஸும் இருந்தது. அதனால் சிறை வாசத்தில் கிடைத்த மிருகத்தனமான அடிகளால் அவர் உடல் ரொம்பவே பாதிக்கப்பட்டுவிட்டது.
அடிக்கடி வயிறு வலி, நெஞ்சு வலி என்று ஜி.ஹெ.சுக்குப் போவார்.
சிறையில் நாங்கள் இருவரும் தங்குமிடத்தையும் சிறைக்காவல் அதிகாரிகள் பிரித்து வைத்துவிட்டதால் என்னால் அவரை அடிக்கடி பார்க்க முடியாமல் போனது.
ஆனால் சிறையில் நான் என் கவலைகளை மறந்து மகிழ்ச்சி£க உற்சாகமாக இருந்தேன் என்றால் அதற்கு மிகப் பெரிய காரணம் இவர்தான்.
சிறையில் கிடைக்காத தாய்ப்பாசம், தந்தைப் பாசம், குடும்பத்தினரின் பாசம் எல்லாவற்றையும் ஈடுகட்டுவதுபோல் அத்தனை அன்பு இவர் மூலம் கிடைத்தது.
அவருக்கு அப்பிடி என்மேல் என்ன பாசமோ தெரியாது.. ஒரு நாளைக்கு 1000 முறையாவது தம்பி தம்பி என்று அப்படியே அன்பைப் பொழிவார்.
அக்டோபர் 31 அன்று இவரது உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்க, உடனடியாக ஜி.ஹெச்.சுக்குக் கொண்டு போனார்கள். இரண்டு ஆபரேஷன்கள் நடந்தன. அவர் குடல் பகுதியையே எடுத்து வெளியே வைத்திருந்தார்கள். ஜனவரி 5 அந்தப் பொது மருத்துவமனையிலேயே அவரது இன்னுயிர் இந்த உலகைவிட்டுப் பிரிந்தது.
என் சிறை வாழ்வில் நான் கண் கலங்கி அழுதது இரண்டே தடவைதான். ஒன்று என் அம்மா சூப் கொண்டு வந்து அதை எனக்குத் தர முடியாமல்போன நிலையில் அம்மா அழுத அழுகையைப் பார்த்தபோது..
இரண்டாவது சிட்டிபாபு அண்ணன் இறந்தபோது..
ஒரு அண்ணன் மாதிரி, தகப்பன் மாதிரி அத்தனை பாசத்தைப் பொழிந்த அவரை அவர் இறந்த பின் அவரது உடலைக்கூட பார்க்கவிடாமல் எங்களைத் தடுத்துவிட்டார்கள் சிறைக் காவல் அதிகாரிகள். அதுதான் எங்களால் தாங்க முடியாத சோகமாகிவிட்டது. 10 நாட்களாக நாங்கள் யாரும் சாப்பிடவில்லை. சரியாகாத் தூங்கவில்லை.
சிட்டிபாபு அண்ணன் தவறின அடுத்த பதினைந்து நாட்களில் மிசா கைதிகளை வாரம் ஒரு பேட்ச்சாக விட ஆரம்பித்தார்கள். ஜனவரி 31 அன்று நான், மாறன் அத்தான் உட்பட ஆறேழு பேர் ரிலீஸானோம். கூட்டம் சேர்ந்துவிடக் கூடாது என்று அதிகாலையிலேயே எங்களை ரிலீஸ் செய்தார்கள்.
சிறையிலிருந்து முதலில் அண்ணா சமாதிக்குப் போய் வணங்கிவிட்டு அதன்பின் நேராக நாங்கள் சென்ற இடம் சிட்டிபாபு அண்ணன் வீடுதான். அந்த அன்பு உருவத்தின் படத்துக்கு மாலை போடும்போதே கண்ணீர் கரகரவென்று பெருகியது.
அதன் பின்பே கோபாலபுரம் சென்றோம். அப்போது நான் சிறு தாடி வைத்திருந்தேன். சிட்டிபாபு அண்ணன் மறைவுக்கு அப்புறம் முடியை அப்படியே வளர விட்டுவிட்டதால் ஏற்பட்ட தாடி அது!
அந்த ஓராண்டு கால சிறை வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்தது. குறிப்பாக பொறுமை, அமைதி, எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கிற தன்மை, நல்லது கெட்டதை யோசிப்பது என்று நிறைய!
நன்றி: அவரும் நானும், உயிர்மை பதிப்பகம் வெளியீடு