ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று கூறிய உச்ச நீதிமன்றம், எழுவர் விடுதலைக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1991ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை ஸ்ரீபெரும்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 26 வருடங்களாகச் சிறையில் உள்ளனர்.
சுமார் 20 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் தங்களை விடுதலை செய்யும் படி பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் ஏழுபேரையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அனைத்து தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இன்னும் தமிழக அரசு ஏழுபேரை விடுதலை செய்யாமல் காலம் கடத்திவருகிறது.
இந்நிலையில் எழுவரின் விடுதலைக்கு எதிராக, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்களில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (மே 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, ”பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை ஏற்புடையது அல்ல. குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட அவர்களை விடுதலை செய்யக் கூடாது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைகேட்ட நீதிபதிகள், ஏழுவர் விடுதலை குறித்த வழக்கு விசாரணை முடிவடைந்து நிலையில், இந்த மனு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது எனத் தெரிவித்தனர். மேலும், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் எனத் தெரிவித்த நீதிபதிகள், 9 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் எழுவர் விடுதலைக் குறித்து ஆளுநருக்கு பரிந்துரை வழங்கப்பட்டதாகவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று ஆளுநர் கூறியதையும் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எழுவர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்றும் அதற்கு யாரும் தற்போது தடையாக இல்லை. நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டிய தேவை இல்லை என்று கூறினார்கள் நீதிபதிகள்.
”உச்ச நீதிமன்றத்தின் இந்த் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது; ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு 28 ஆண்டுகால வலிக்கும் வேதனைக்கும் முடிவு காண வேண்டும்: அதுவே அவரது பதவிக்கு உண்டான தலைசிறந்த மரியாதை.” என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநரிடம் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.