சமூக வலைத்தளங்களில் காலையிலிருந்து வெறுப்புப் பிரச்சாரத்தின் வெப்பம் தணிந்து சமாதான சக வாழ்வின் காற்று வீச ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமியர்களை நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும், அல்லது சந்தேகத்திற்குரிய குடிமக்களாக முகாம்களில் அடைக்க வேண்டும் என்றெல்லாம் கச்சை கட்டியவர்கள் பாரத விலாஸ் சிவாஜி மாதிரி சமய ஒற்றுமையை நிலைநாட்டி, இஸ்லாமியர்களின் நல்லெண்ணங்களைப் புகழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள். கொரோனோவின் தாக்கம் சிலரது மூளை செல்களில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா என்று யாரும் குழம்பவேண்டாம். வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவில் முன்னெடுக்கப்படும் இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு எதிராக ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மென்ட் தரப்பட்டது. அதன் விளைவுதான் இந்த அன்பு மழை.
மத்திய கிழக்கு வளைகுடா இஸ்லாமிய நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமிய வெறுப்புச் சித்தாந்தத்தை பரப்புகிறவர்கள், கைது செய்யப்படுவார்கள் அல்லது அவர்கள் விஸா ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பது, இந்தியாவில் ஆளும் இந்துத்துவ அதிகாரவர்க்கத்தினரை கவலையடைய வைத்திருக்கிறது. சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெறுப்புப்பிச்சாரம் செய்த பல இந்தியர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலே பிரதமரையே கொரோனோவுக்கு மதம் இல்லை என்று பேச வைத்திருக்கிறது.
பொதுவாக இஸ்லாமிய நாடுகள் பிற நாடுகளில் இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் அளித்த ஆதரவுகளைக்கூட பல இஸ்லாமிய நாடுகள் அளித்ததில்லை என்பதுதான் உண்மை. இஸ்லாமிய நாடுகளின் ஜனநாயகமற்ற, முடியாட்சி அரசுகள் சர்வதேச உறவுகளை வர்த்தகம் சார்ந்த உறவுகளாகவோ அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளை அண்டியிருக்கும் மனநிலை கொண்டவையாகவோதான் இருந்திருக்கின்றன. பிற நாடுகளில் ஒடுக்கப்பட்டும் இஸ்லாமிய சமூகத்தவர்களின் ஜனநாயக உரிமைகள்பால் அவை எந்த அக்கறையும் காட்டியதில்லை. இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்த மதக்கலவரங்கள், குஜராத் கலவரம், மோடி அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த பல செயல்பாடுகள் தொடர்பாகக்கூட சர்வதேச அளவில் குரல்கள் எதுவும் எழவில்லை.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த மசோதோ, முத்தலாக் தடைச் சட்டம், பசுவதைக் குற்றச்சாட்டில் இஸ்லாமியர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாவற்றையுமே அந்த நாடுகள் இந்தியாவில் உள்நாட்டு விவகாரமாகவே பார்த்து வந்திருக்கின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல், வர்த்தக, சமய சமன்பாடுகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.
ஆனால் கொரோனோ கொள்ளை நோய் இந்தியாவில் பரவுவதற்கு முஸ்லீம்கள்தான் காரணம், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்தான் இந்த நோயைப் பரப்பினார்கள் என்று இந்துத்துவாவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம் இஸ்லாமிய நாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்துத்துவா சார்பு இந்தியர்கள் பலரும் இந்த வெறுப்புப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது இப்போது அந்த நாடுகளின் அதிகார வட்டாரத்திலிருந்து கடும் எதிர்வினைகள் வெளிப்பட காரணமாக அமைந்துவிட்டன.
எழுபதுகளில் தொடங்கி வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிக்காக அங்கு சென்றிருக்கின்றனர். இந்தியாவுக்கு வரும் அன்னியச் செலவாணியின் பெரும்பகுதி இவர்களிடமிருந்தே வருகிறது. அதுமட்டுமல்ல பெட்ரோலியம் மற்றும் பல்வேறுவிதமான வர்த்தக உறவுகள் இந்த நாடுகளோடு இந்தியாவிற்கு இருக்கின்றன. இந்துத்துவாவாதிகளின் தொடர் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை இஸ்லாமிய நாடுகள் கடுமையாக அணுகத் தொடங்கிவிட்டன என்பது இந்திய அரசுக்கு இப்போது நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான OIC – (Organization of Islamic Countries} ’’இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக கொரோனோ நோயை முன்வைத்து இந்திய ஊடகங்களில் கடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. வெறுப்புப்பிரச்சாரம் செய்பவர்கள் மேல் இந்திய அரசு சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளன.
இந்தியப் பிரதமர் இது சர்வதேசரீதியாக தனக்குப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துதான் இந்திய பிரதமர் ’’கொரோனோவுக்கு சாதி, இன, மத. மொழி, தேச எல்லைகள் இல்லை. நாம் சகோதரத்துவத்தோடு இதை எதிர்கொள்ள வேண்டும்‘’ என்று ட்வீட் செய்கிறார். ஆனால் டெல்லி மாநாட்டிற்குப் போய்வந்த தப்லீக் ஜமாத் இஸ்லாமியர்களால்தான் இந்த நோய் பரவுகிறது என்ற விஷமப்பிரச்சாரம் இந்தியாவில் முழு மூச்சாகப் பரப்பப்பட்டபோது பிரதமர் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆளுநர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி உரையாடலில் ‘’ஆனந்த் விஹாரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நிஜாமுதீனில் கூடிய தப்லீக் ஜமாஅத்தின் சபையினரால் கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்ப்பதற்கான முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன’’ என்று குற்றம் சாட்டினார். இதுபோன்ற கருத்துகள்தான் பின்னர் பல்வேறு மட்டங்களில் கடும் இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரமாக மாற்றப்பட்டது.
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் இந்துத்துவாவாதிகளும் இந்த இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது அங்கு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
கடந்த வாரம், ஐக்கிய அரபு எமிரேட் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹென்ட் அல் காசிமி, “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிப்படையாக இனவெறி மற்றும் பாகுபாடு காட்டும் எவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்” என்று எச்சரித்தார்.
முஸ்லிம்களை குறிவைத்து இஸ்லாத்தை கேலி செய்யும் பல ட்வீட்களை வெளியிட்ட துபாயைச் சேர்ந்த இந்திய வெளிநாட்டவர் சவ்ரப் உபாத்யாயையும் அவர் கடுமையாக கண்டித்ததுடன் அவரது ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துகொண்டு அவர் “நீங்கள் இகழ்ந்துரைக்கும் இந்த நாட்டிலிருந்துதான் உங்கள் உணவைப் பெற்றுக்கொள்கிறீர்கள், நீங்கள் இலவசமாக இங்கு வேலை செய்யவில்லை. உங்களது இந்த ஏளன நடவடிக்கை கவனிக்கப்படாமல் போகும் என்று நினைக்க வேண்டாம்’’ என எச்சரித்தார். சிறிது நேரத்தில் உபாத்யாயா தனது ட்வீட்களை நீக்கிவிட்டார்.
சமீபத்தில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் நூரா அல் குரைர், இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா 2015 ஆம் ஆண்டில் ’’ அரபு பெண்கள் 90 சதவிகதத்தினர் ஆர்கஸத்தை அடைந்ததே இல்லை.. அவர்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்கள்’’ என வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டி ’தேஜஸ்வி அரபுப்பெண்களின் அந்தரங்க உணர்வுகளை கொச்சைப்படுத்திவிட்டதகாகக்’ கூறி அவர் அரபு நாடுகளுக்கு எதிர்காலத்தில் பயணம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். பா.ஜ.க எம்.பி பதறியடித்துக்கொண்டு தனது ட்வீட்டை நீக்கிவிட்டார்.
ஷார்ஜாவை தலைமையிடமாகக் கொண்ட Aries குழுமத்தின் நிறுவனத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரபல கேரள தொழிலதிபர் சோஹன் ராய், கொரோனோ வைரஸ் பரவுதற்குக் காரணம் இஸ்லாமியர்களே என்ற பொருள் படும் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டதன் மூலம் இஸ்லாமிய வெறுப்பைத்தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து கடந்த சனிக்கிழமை பேஸ்புக் நேரடி வீடியோவில் மன்னிப்பு கோரினார்.
’’வளைகுடா நாடுகளில் இருந்து ஆண்டுக்கு 55 பில்லியன் டாலர்கள் அன்னியச்செலவாணி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, உலகம் முழுக்க உள்ள முஸ்லீம் நாடுகளில் இருந்து ஆண்டுக்கு இந்தியா பெறும் அன்னியச் செல்வாணி 120 பில்லியன் டாலர். இஸ்லாமிய நாடுகளில் இந்தியர்கள் நல்லவிதமாக நடத்தப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?’’ என்ற கேள்வியை குவைத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் நாசர் என்பவர் எழுப்புகிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கின்னஸ் உலக சாதனையாளர் சுஹைல் அல் ஸரூனி ’’ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த பல சமூகங்களுடன் நல்லுறவைப் பேணி வந்திருக்கிறது, எனவே எந்தவொரு மதத்தின் உணர்வையும் மதிக்காத எந்தவொருவருக்கும் இந்த நாடு ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது’’ என்று கடுமையாகக் கூறியுள்ளார்.
அரபு நாடுகளில் இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பும் இந்தியர்களின் சமூக வலைப்பதிவுகளை அந்நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் சேகரித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்து வருகின்றன.
அபுதாபியின் இந்தியதூதரான பவன் கபூர் ‘’இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பல காரணங்களில் பாகுபாடு காட்டாததன் மதிப்பீடுகளைப் பகிர்ந்துகொள்கின்றன. பாகுபாடு என்பது நமது தார்மீக உணர்வுகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்’’ என எச்சரித்திருக்கிறார்.
இந்துத்துவா அடிப்படைவாதிகள் தாங்கள் எங்கிருந்தாலும் மோடியால் காப்பற்றப்படுவோம் என்ற கனவுலகில் வாழ்ந்து வருகின்றனர். அந்தக் கனவு கலையும் நேரம் வந்துவிட்டது.