ஏழுபேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை என்ன நிலையில் இருக்கிறது என்பதை ஆளுநர் மாளிகையில் கேட்டுச் சொல்கிறோம் என்று ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
1991ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை ஸ்ரீபெரும்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.
சிறையில் இருக்கும் தங்களை விடுதலை செய்யும் படி பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.
இதைதொடர்ந்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி ஏழு பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஏழுபேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காமால் காலதாமதம் செய்துவருகிறார் எனவும், உடனே ஏழுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்திவந்தனர்.
இதனிடையே 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012இல் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூன் 3) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை குறித்துக் கேட்டு தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டுமெனவும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றக்கொண்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரகாலத்திற்கு ஒத்திவைத்தனர்.