ஏழு மாநிலங்களில் இன்று தொடங்கிய ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 51 தொகுதிகளிலும் பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 374 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று (மே 6) ஐந்தாம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது.
7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 14 தொகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலம் 12 தொகுதிகளிலும், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 7 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும், ஜார்கண்டில் 4 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் 674 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியும் அமேதி தொகுதியில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
94 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் காலை முதல் தேர்தல் நடைபெற்றுவந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில், மொத்தம் பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் குறித்த புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடவில்லை.
இன்று மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்:
மத்திய பிரதேசம்-54.39%
ராஜஸ்தான்-51.99%
பீகார்-48.12%
ஜார்கண்ட்-58.07%
உத்தரப் பிரதேசம்-45.87%
ஜம்மு-காஷ்மீர்-15.51%
மேற்கு வங்கம்-65.01%