ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்ட மன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் தற்போது நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து, அந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சுந்தர்ராஜனும், புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர். இதில், அதிமுகவைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். இவர் அரசு ஒப்பந்ததாரர் என்பதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்.சுந்தர்ராஜ், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு முகாந்திரம் இல்லை என தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கிடையில் சுந்தராஜ் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில், ஒட்டப்பிடாரம் தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்த தடையில்லை
இந்நிலையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் செல்லாது என தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும், வழக்கை ரத்துசெய்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு அமர்வு முன்பு இன்று (மார்ச் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை ஏற்றுகொண்ட நீதிபதி, கிருஷ்ணசாமி மனு அடிப்படையில் ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை முடித்து வைப்பதாகத் தெரிவித்தார். மேலும், தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி. ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், தற்போது அங்கு தேர்தல் நடத்த தடையில்லை.