ஈரோட்டைச் சேர்ந்த ரகுபதி என்பவரது பெயர், வாக்காளர் பட்டியலில் ஒரே பக்கத்தில் வரிசையாக 11 இடங்களில் இருப்பதைக் கண்டு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு துணைத்தலைவர் மாவட்டத் தேர்தல் ஆணையத்தை நடவடிக்கை எடுக்குமாறு தகவல் அனுப்பியுள்ளார்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இதனையடுத்து அரசியல் கட்சியினரின் அனல் பறக்கும் பிரசாரம் ஒருபுறம் நடைபெற்று வருகின்ற நிலையில் வாக்காளர்களை வளைப்பதற்காக வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒட்டுக் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு துணைத்தலைவரான கே.என்.பாட்ஷா என்பவர், அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இடம்பெற்றிருக்கிறதா எனச் சரிபார்த்திருக்கிறார். அப்போது ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முனியப்ப கோயில் வீதியைச் சேர்ந்த ரகுபதி(55) என்பவரது பெயர் ஒரே பக்கத்தில் வரிசையாக 11 இடங்களில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.
இதனையடுத்து, மாநிலத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும் தபால் மூலமாகப் புகார் அனுப்பியிருக்கிறார். அதில், “ஒரே பெயர், புகைப்படம், விலாசத்துடன், வேறுவேறு அடையாள அட்டை எண்களுடன் ரகுபதி என்பவருக்கு 11 அடையாள அட்டைகள் வழங்கி உள்ளனர். இதனை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.