தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருக்கும் அதிமுக தரப்புக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாக உடைந்த அதிமுக
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அதைதொடர்ந்து, ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு ஒரு அணியாகவும், சசிகலா- தினகரன் தரப்பு ஒரு அணியாகவும் பிரிந்து அதிமுக கட்சி இரண்டாக உடைந்தது. இருதரப்பினரும் இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் என உரிமை கொண்டாடினர்.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்த தேர்தல் ஆணையம், தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு அதே ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய தினகரன் ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சார்பில் டெல்லி உயா் நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இரட்டை இலை யாருக்கு?
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பு கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எழுத்துப்பூா்வமான வாதங்களை ஒரு வாரத்திற்குள் சமா்ப்பிக்க உத்தரவிட்டதுடன், வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமா்வு நேற்று (பிப்ரவரி 28) தீா்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கும், ஓ.பன்னீா் செல்வத்திற்கும் தோ்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லுபடியாகும் என்று கூறி டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா் நீதிபதிகள். உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி.