நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது பதான்கோட் சிறப்பு நீதிமன்றம்.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 8 பேரில் சிறுவன் என்று கூறப்படும் நபர் தவிர மற்ற 7 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்ற இந்துத்துவ அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசியக்கொடியுடன் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தியது. அந்தப் பேரணியில் பாஜகவைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் இருவர் கலந்துகொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையில், சிறுமியின் தரப்பு வழக்கறிஞராக இருந்த தீபிகா ரஜவத்துக்கும் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதைதொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் 3ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று (ஜூன் 10) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை நடைபெற்ற விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏழு பேரில் ஆறு பேரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
குற்றச்சதி, கூட்டுப் பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சஞ்சிராமின் மகன் விஷால் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். பிற்பகல் 2 மணிக்குமேல் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர் நீதிபதிகள்.
அதன்படி, ஊர்த் தலைவரும் கோயில் பூசாரியுமான சஞ்சி ராம், தீபக் கஜூரியா, பிரவிஷ் குமார் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக தலைமைக் காவலர் திலக் ராஜ், துணைக் காவல் ஆய்வாளர்கள் ஆனந்த் தத்தா, சுரிந்தர் வர்மா ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் எனச் சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.