கன்னியாகுமரியில் நேற்று (மார்ச் 1) நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட 404பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் மோடி
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நேற்று (மார்ச் 1) நடைபெற்றது. இந்த விழாவில், கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். அவரை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள்
மதுரை -சென்னை இடையே தேஜஸ் விரைவு ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி நேற்றுதொடங்கிவைத்தார். இந்த அதிவிரைவு ரயில் மதுரையில் இருந்து ஆறரை மணி நேரத்தில் சென்னை எழும்பூரை சென்றடையும். தானியங்கி கதவுகள், பயோ கழிவறைகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாட்களிலும் இயங்கும் இந்த ரயில் சேவையின் வழக்கமான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
மேலும், ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே ரூ.208 கோடி செலவில் புதிய ரயில் பாதை, பாம்பனில் 250 கோடி ரூபாய் செலவில், ரயில் சேவைக்காக இந்தியாவின் முதலாவது செங்குத்தாக நகரும் பாலம் கட்டுவதற்கும் மோடி அடிக்கல் நாட்டினார். மதுரை – செட்டிகுளம், செட்டிகுளம் – நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல், மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கி வைத்த மோடி தன்னுடைய உரையை தொடங்கினார்.
இந்திய மக்கள்தான் என் குடும்பம்
“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் கீழ் தொலைநோக்கு பார்வையுடன் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைப்பெற்றுள்ளன. அவரின் மறைவுக்கு பின்னரும் அது தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் கீழ் நடைப்பெற்று வருகின்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப்படை வீரன் அபிநந்தனும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமையளிக்கிறது.” என்று கூறினார் பிரதமர் மோடி.
மேலும் பேசிய அவர், “உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. மக்களுக்கான மிகப்பெரிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்ட்த்தை அரசு செயல்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம், அதே மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தால், கோடிகணக்கான மக்கள் பயனடைவார்கள்.
விவசாய கடன் தள்ளுபடி என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரத்தில் மட்டும் அறிவிப்பு வெளியிடும். அதன்பின்னர் அவர்களை பற்றி கவலைபடாது. ஆனால் எங்கள் ஆட்சியில் மக்களுக்கு விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் ஆட்சி பொறுப்பை எற்றதிலிருந்து செயல்படுத்தி வருகின்றோம். ஐந்து ஏக்கரை விட குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மூன்று தவணைகளாக அளிக்கப்படும். இதுவரை 1 கோடி 10 லட்சம் விவசாயிகளுக்கு பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
”இந்திய மக்கள்தான் என் குடும்பம். அவர்களுக்காக நான் வாழ்வேன். அவர்களுக்காக நான் வீழ்வேன்”. மக்கள் விரும்புவது நேர்மையும் பாதுகாப்பையும்தான். குடும்ப அரசியலை அல்ல. வாக்குவங்கியை அல்ல.” என்றும் அவர் பேசினார்.
மோடி பின்னால் தமிழகம்
“கன்னியாகுமரியில் முக்கடல் மட்டும் அல்ல மூன்று மதங்களும் சங்கமிக்கின்றன. மீனவர்களுக்காகத் தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களைக் கொண்டுவந்துள்ளது. கடலில் காணாமல்போகும் மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கக் கன்னியாகுமரியில் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறேன். இந்திய மக்களுக்குப் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார். தமிழ்நாடும் அவர் பின்னால் இருக்கிறது.” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பேசினார்.
நரசிம்ம அவதாரம்
விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ”பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன்தரக்கூடிய திட்டங்களை வழங்க வந்திருக்கிறார். நாம் விரைவில் பெறவுள்ள இமாலய வெற்றிக்கான துவக்கவிழாதான் இந்த விழா. தீவிரவாதா அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் நரசிம்ம அவதாரம் எடுத்ததுபோல மோடி பயங்கரவாதிகளை வதம் செய்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.
கருப்புகொடி காட்டிய வைகோ
முன்னதாக நேற்று காலையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக, காவல்கிணறு பகுதியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தினார் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.
போராட்டத்தின்போது, கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் கறுப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டார் மதிமுக தொண்டர்கள். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட 404பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.