சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கும் பொருந்தும் என்பதால் அவர் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதிமுகவிற்கு எதிராகச் செயல்படுவதாகவும் சபாநாயகர் தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார் அதிமுக கொறடா ராஜேந்திரன். அந்த மனுவில், எம்எல்ஏக்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த புகார் குறித்து 3 எம்எல்ஏக்களும் 7 நாட்களில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, “சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும்.” என்று உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர் நீதிபதிகள்.
இந்நிலையில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு. அந்த மனுவில் உச்ச நீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என நம்புகிறேன். அப்படி இந்த உத்தரவு எனக்கு பொருந்தாது என்று சட்டப்பேரவை கருதினால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உங்களுக்கும் பொருந்தும் எனவே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இது தொடர்பாகப் பதிலளிக்க தேவையில்லை எனச் சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.
“அதிமுகவை உரிமை கோரும் சசிகலா அணியில்தான் இன்னும் நான் உள்ளேன். அமமுக என்பது அதிமுகவின் இன்னொரு அணி என்ற அடிப்படையில்தான் விளக்கமளிக்க இருந்தேன்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு.