பாஜக மூத்த தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாக காங்கிரஸ் கட்சி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, அருண் ஜெட்லி ஆகியோருக்கு சுமார் ரூ.1800 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டினார். இதனையடுத்து அரசியல் சலனம் ஏற்பட்டது.
‘தி கேரவன்’ என்ற இதழ் வெளியிட்ட செய்திகளைச் சுட்டிக்காட்டியது மட்டுமில்லாமல்; வருமான வரித்துறை பறிமுதல் செய்த எடியூரப்பா எழுதிய டைரியின் நகலும் வெளியிடப்பட்டது. அதில், கடந்த 2009ஆம் ஆண்டு கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்பதற்காக, அருண் ஜெட்லி மற்றும் நிதின் கட்காரி ஆகியோருக்கு தலா 150 கோடியும், ராஜ்நாத் சிங்கிற்கு 100 கோடியும், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு தலா 50 கோடியும், வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கும், நிதின் கட்காரியின் மகன் திருமணத்துக்கும், பாஜக மத்தியக்குழுவுக்கு ரூ.1000 கோடியும் வழங்கப்பட்டிருப்பதாக எடியூரப்பா தன் கைப்பட எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
இதன் நகலை வெளியிட்டதையடுத்து, “இது வெறும் கர்நாடகாவின் பிரச்சனை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேசத்துக்கான பிரச்சனையும்கூட” என்று ரன்தீப் தெரிவித்தார்.
இதுகுறித்து எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் வாழ்வியல்சார்ந்த பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சி திவாலாகிவிட்டது. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தாங்கள் தோற்கடிக்கப்படுவோம் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே நன்கு உணர்ந்துவிட்டனர். பொதுவெளியில் விவாதிப்பதற்காக அவர்களிடம் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் கிடையாது. பாஜகவிற்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் மக்கள் ஆதரவை பார்த்து, அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சி மிகவும் விரக்தி அடைந்துள்ளது. போட்டி ஆரம்பிக்கும் முன்பாகவே காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர்.
பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக இன்று காங்கிரஸ் கட்சியால் எழுப்பப்பட்ட இந்த புகார் உட்பட, பல்வேறு புகார்கள் ஏற்கனவே தீவிரமாக விசாரிக்கப்பட்டு, அந்த ஆவணங்கள் போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டும்விட்டன. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி, எனது கையெழுத்து உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பதை தெளிவுப்படுத்தியும் விட்டனர். ஊடகம் மூலமாக ஒரு கதையை உற்பத்திசெய்து, தேர்தல் நேரத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைவர்களின் நோக்கமாகும். காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், எந்தவித அடிப்படை ஆதாரமற்றவை முற்றிலும் பொய்யானவை. இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே முடிந்துபோன விஷயங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.