தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த திராவிட கலைஞர் மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7). காலத்தால் அழிக்க முடியாத கலைஞராகவும், தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் திகழ்ந்தவர் கருணாநிதி என்றால் மிகையாகாது.

மு.கருணாநிதியின் தொடக்கக்கால அரசியல் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம். டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த ரயில் நிலைய பெயர்ப் பலகை மீது கல்லக்குடி என்று எழுதிய காகிதத்தை ஒட்டிய கருணாநிதி, தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து போராட்டம் நடத்தினார். பின்னர் இந்தி திணிப்பு போராட்டங்களிலும் இவரின் பங்கு மிகமுக்கியமாக இருந்தது.

நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது வயதில் அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அழகிரிசாமியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி, அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.

தந்தை பெரியாரின் தொண்டனாக, அறிஞர் அண்ணாவின் தம்பியாக இருந்த கலைஞர், அண்ணாவின் மறைவிற்குப் பின்பு திராவிட கழகத்தை முன்னின்று வழிநடத்தினார். இதுவரை 13 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை கூட தோல்வியைச் சந்திக்காத ஒரு தலைவர் கருணாநிதி. 60 ஆண்டுகளுக்கு மேலாகச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கலைஞர், 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் தலைவராகவும் பதவியிலிருந்தார்.

கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947இல் வெளியான ராஜகுமாரி. இந்த படத்தால் மிகவும் பிரபலமடைந்தார் கருணாநிதி. 1947இல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011இல் வெளியான பொன்னர் – சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி. இவர், சமூக நீதி கருத்துக்களை தன்னுடைய படங்களில் ஆழமாகக் கூறியிருப்பார். பத்து சமூக நாவல்களையும், ஆறு சரித்திர நாவல்களையும் இயற்றியுள்ளார் கருணாநிதி. இவர் எழுதிய, ‘தூக்குமேடை’ என்ற நாடகத்தைப் பார்த்து ‘கலைஞர்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார் எம்.ஆர்.ராதா.

தன்னுடைய மரணத்தை ஒருவர் இப்படி கூட வர்ணிக்க முடியுமா என்று ஆச்சரியவர் கலைஞர். “மரணம் ஒருநாள் என்னைச் சூழும் அதை நான் ஏற்பேன். ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன். ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு; அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன்.” என்று தெரிவித்திருப்பார்.

தமிழுக்கும், அரசியலுக்கும், திரைத்துறைக்கும் முக்கிய அச்சாணியாக விளங்கிய கலைஞர், உடல்நலக்குறைவு காரணமாக, 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். அன்று தமிழகத்தின் சூரியன் மறைந்தது. இவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆனாலும், காலத்தால் அழியாத எண்ணிலடங்கா விஷயங்களை தந்துவிட்டுச் சென்றுள்ளார். இவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இத்தினத்தையொட்டி, இன்று காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலமாகச் சென்ற திமுகவினர், வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதிப் பேரணியில் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, அவருடைய நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் சாலையில் முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த நிகழ்ச்சிக்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை ஏற்கிறார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி நேற்று மாலையே சென்னை வந்தார். சிலை திறப்பு முடிந்ததும், மாலை 5.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் உரை நிகழ்த்துகிறார்கள்.