2016 மார்ச் 3 அன்று பாகிஸ்தானால் முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்புஷன் ஜாதவ், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால் அதனை மார்ச் 25 அன்று தான் இஸ்லாமாபாதில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்தது பாகிஸ்தான் அரசு. குல்புஷன் ஜாதவை காவலில் வைத்து விசாரித்ததின் அடிப்படையில் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. அவr இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர் என்று ஏற்றுக்கொண்டாலும் உளவு பார்க்க பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டை இந்தியா மறுத்துவிட்டது. இந்நிலையில் அவரை விடுவித்து நாட்டிற்கே திரும்பி அனுப்ப வேண்டும், அவருக்கு எவ்வித சட்ட உதவிகளையும் வழங்காமல் பாகிஸ்தான் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது என்றும் இந்தியா ‘ஹேக்’கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முறையிட்டது.
சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முன்வைத்தவை:
– பாக். ராணுவ நீதிமன்றம் வியன்னா ஒப்பந்ததை மீறியதாக அறிவிக்க வேண்டும்.
– ஜாதவை விடுவித்து பாதுகாப்பாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
– பாக் ராணுவ நீதிமன்ற உத்தரவுகளை இரத்து செய்ய பாகிஸ்தானுக்கு உத்தரவிட வேண்டும்.
– சாதாரண சிவில் நீதிமன்றத்தில் வழக்கினை நடத்த பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறான கோரிக்கைகளை இந்தியா முன்வைத்திருந்தது.
இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வித சட்ட ஆலோசனை உதவிகளையும் அனுமதிக்காமல் பாகிஸ்தான் அரசு, வியன்னா ஒப்பந்தத்தை மீறியுள்ளது. 1963ஆம் ஆண்டு கையெழுத்தான வியன்னா ஒப்பந்தமானது இரு நாடுகளிடையேயான தூதரக உறவுகள் பற்றி விவாதிப்பதாகும். அதன்படி கைதுசெய்யப்பட்ட இந்தியருக்கு பாகிஸ்தான் அரசு சட்ட உதவிகளையும் அடிப்படை உரிமைகளையும் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதனை பாகிஸ்தான் செய்யாதது குறிப்பிடத்தக்கது. குல்புஷனுக்கு பாக் ராணுவ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் முன்னரே நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது இவ்வழக்கின் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியக் குறிப்புகள்:
– குல்புஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டதை இந்திய அரசுக்கு தெரிவிக்காதது.
– வியன்னா ஒப்பந்தப்படி ஜாதவுக்கு உரிமைகள் வழங்காதது.
– இந்திய தூதரக அதிகாரிகள், குல்புஷன் ஜாதவை சந்திக்க அனுமதிக்காதது.
இவற்றுக்கெல்லாம் பாகிஸ்தானின் மீது குற்றம் சுமத்தியுள்ளது சர்வதேச நீதிமன்றம். வியன்னா ஒப்பந்தப்படி அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்கவும் சட்டரீதியான உதவிகள் வழங்கவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு எவ்வித தாமதமும் இல்லாமல் மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை பாகிஸ்தான் ஊடகங்கள் பாகிஸ்தானுக்குக் கிட்டிய வெற்றி என்று செய்திகள் வெளியிடுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. உண்மையில் வென்றிருப்பது இந்திய தரப்புதான் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
ஏனென்றால் இந்திய தரப்பு முன்வைத்தவற்றில் பலவற்றை சர்வதேச நீதிமன்றம் ஆமோதித்துள்ளது. எனவே இந்திய தரப்பிற்கு கிட்டிய வெற்றியாகவே கருதப்படுகிறது. இதுபற்றி இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவேஷ் குமார் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்து அமைச்சகத்தின் சார்பில் ட்வீட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய தரப்பு வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.