இன்று (ஜூன் 28) கூடிய தமிழக சட்டப்பேரவையில், மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 1ஆம் தேதிக்கு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

துறைகள் வாரியான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்காகத் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் அறிவித்தபடியே இன்று கூடியது. இதில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கனகராஜ், ராதாமணி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, கனகராஜ் மேற்கொண்ட பணிகள் குறித்து அதிமுக தரப்பிலும், ராதாமணி மேற்கொண்ட பணிகள் குறித்து திமுக தரப்பிலும் பேசப்பட்டது.

இதைதொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏக்கள் சுப்பிரமணியன், சுந்தரவேல், ராமநாதன் உள்ளிட்ட 8 பேருக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் 23 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனைத்துத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அனைத்து நாட்களும் கேள்வி நேரம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முதல் நாளான வரும் திங்கட்கிழமை (ஜூலை 1), சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, ஸ்டெர்லைட் விவகாரம், ஹைட்ரோகார்பன் திட்டம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தத் திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.