”எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துவிட்டு கூட்டணி அமைத்தது அதிர்ச்சியளித்தது. இந்த கூட்டணிக்காக மிகப்பெரிய பேரம் நடந்துள்ளது என்று எங்களுக்கு பின்புதான் தெரியவந்தது” என்று பா.ம.க-வின் மாநில துணைத் தலைவராக இருந்த பொங்கலூர் ரா.மணிகண்டன் கோவையில் இன்று நடந்த செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,”திராவிட அரசியலுக்கு மாற்று என ராமதாஸ் சொன்னதை நம்பி பாமக-வில் இணைந்தேன். திராவிட கட்சிகளை வேரோடும் மண்ணோடும் அகற்ற அன்புமணியால் முடியும் என்று நம்பினேன். ஆனால், அன்புமணி, அ.தி.மு.கவோடு கூட்டணி அமைத்து ஏமாற்றமளித்துள்ளார். அ.தி.மு.கவையும் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, கூட்டணி அமைத்தது அதிர்ச்சியளித்தது. கூட்டணிக்காக மிகப்பெரிய பேரம் நடந்ததுள்ளது என்று எங்களுக்கு பின்புதான் தெரியவந்தது. ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ராமதாஸ் குடும்பம் மட்டும்தான் செழிப்பாக இருக்கும். தர்மபுரியில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையா விமர்சித்துக்கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும், அன்புமணியும் இப்போது ஒன்றாக வாக்கு கேட்பதை எப்படி ஏற்க முடியும். தொண்டர்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி அமைத்ததாகச் சொல்வது முழுக்க முழுக்க பொய்” என குற்றம் சாட்டினார்.
மேலும்,” பா.ம.க-வே குடும்பக் கட்சி, அ.தி.மு.க, தி.மு.க-வை விமர்சிக்க அன்புமணிக்கு தகுதியில்லை. ஜி.கே.மணி, தன்ராஜ் ஆகியோர் பா.ம.க-வைக் கெடுக்கிறார்கள். இந்தக் கூட்டணி நிச்சயம் படுதோல்வியைச் சந்திக்கும். காடுவெட்டி குரு வன்னிய சமூகத்திற்காக வாழ்ந்தவர். பா.ம.கவிற்காக உழைத்து வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டார். கடனில் தவிக்கும் காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கு பா.ம.க எதுவும் செய்யவில்லை. பல கூட்டங்களில் குருவைப் பற்றிப் பேசாதீர்கள், அவரை முன்னிலைப்படுத்தாதீர்கள் என்று சொல்வார்கள். ராமதாஸ் அரசியலுக்கு வந்த பின்பே தமிழகத்தில் பேரம் என்பது உருவானது. வன்னியர்களால் ராமதாஸ் குடும்பம் பயன் பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்.
முதலமைச்சராக்கிய சசிகலாவிற்கே எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். டி.டி.வி தினகரன் சமரசமில்லாமல் செயல்பட்டு துணிச்சலுடன் அவர் 40 தொகுதிகளிலும் துணிச்சலாகப் போட்டியிடுகிறார். தமிழகத்தில் டி.டி.வி தினகரனைத் தவிர வேறுயாரும் உண்மை பேசுவது கிடையாது. அதற்காக அவருடன் நான் இணைவதாக நீங்கள் எண்ண வேண்டாம். அன்புமணி நல்ல நிர்வாகி கிடையாது. அவர் தொண்டர்களை மதிப்பதே கிடையாது.
பெரிய தொகையை வாங்கிக்கொண்டு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வன்னியர் நல வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரே கட்சி பா.ம.க. வருமானம் இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் பா.ம.க நிதி வசூல் செய்கிறது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் கொங்கு மண்டலத்தைக் சேர்ந்தவர்தான் பா.ம.க வேட்பாளர். என்னை திண்டுக்கல் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார்கள். ஆனால், திடீரென்று நீங்கள் திண்டுக்கல்லில் பணியாற்ற வேண்டாம், தர்மபுரியில் அன்புமணிக்கு வேலை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். தன்னுடைய மகன் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கிறார் ராமதாஸ். மற்றவர்கள் ஜெயிப்பதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. பாரிவேந்தரை மிரட்டி பணம் வாங்கியவர்கள் இவர்கள். பா.ம.க-வில் இணைந்ததை வரலாற்றுப் பிழையாகக் கருதி வெளியேறுகிறேன்” என்றார்.