கேரள அரசு அவ்வப்போது மக்களுக்குப் பல அதிரடி உத்தரவுகளை அளித்து மற்ற மாநிலங்களைத் திரும்பிப் பார்க்க வைப்பது வழக்கமான ஒன்று. நாடு முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகப்பேறு விடுப்பு சலுகையை அதாவது அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் 6 மாத கால பேறுகால விடுப்பு வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கேரளாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க நெடுநாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை பரிசீலனை செய்த கேரள அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளத்துடன் பேறு கால விடுப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண்களுக்கு 6 மாதம் சம்பளத்துடன் விடுமுறை மற்றும் சிகிச்சைக்காக ரூ.3500 ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். நாட்டில் முதன்முறையாக கேரள அரசு எடுத்திருக்கும் இந்த முடிவை அறிந்து மற்ற மாநில அரசுகளும் பரிசீலிக்க தொடங்கியுள்ளனன.