பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரு நள்ளிரவில் அறிவித்த பிரதமர், ஊரடங்கு உத்தரவினால் அன்றாடக் கூலிகள் உள்ளிட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்வது பற்றி கமிஷன் போட்டு ஆலோசனை கேட்டிருக்கிறார். நாடே ஊரடங்கில் இருக்கும் போது நமக்காக வேலை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாலையில் வீட்டுக்கு வெளியே வந்து கைத்தட்டச் சொல்கிறார்.
டாக்டர்களோ எங்களுக்கு கைத்தட்டல் வேண்டாம், எங்களை நோயிலிருந்து பாதுகாக்க நல்ல முகமூடி கொடுங்கள் என்கிறார்கள். நோய் பரிசோதனையை மேற்கொள்ள போதுமான உபகரணங்கள், வசதிகள் கொடுங்கள் என்கிறார்கள். சுகாதாரப் பணியாளர்களோ கையுறை கேட்க வேண்டும் என்பதை யோசிக்கும் நிலையிலேயே இல்லை. அவர்கள் தங்களது பாதுகாப்பை மறந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. கையால் மலம் அள்ள வைக்கும் சமூகம்தானே இது.
ஊரடங்கும் கைத்தட்டலும் உலகெங்கும் வெற்றி பெற்றிருக்கும் கொரோனா எதிர்ப்பு வழிமுறை என்பதில் சந்தேகமே இல்லை. ஊரடங்கிற்குள் போவதால் யார் சம்பளத்தையும் நிறுத்த அல்லது குறைக்க வேண்டாம் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் மாத சம்பளம் வாங்குகிறவர்களுக்கு அல்லவா. தினமும் வீட்டை விட்டு வெளியேறி, வண்டி ஓட்டி, ஏதாவது விற்று அன்று மாலை சாப்பாட்டுக்கு அரிசி வாங்கி வரும் அன்றாடங் காய்ச்சிகளின் நிலை என்ன?
இந்தியாவின் இன்றைய பிரதமர் ஒன்றும் எந்தத் திட்டமும் இல்லாதவர் அல்ல. டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் சுமார் 30 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதில் எத்தனை பேர் அன்றாட சம்பளம் வாங்கி பிழைக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள்? இந்த கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்படும் அன்றாடங் காய்ச்சிகள் தங்கள் பெயர்களையும் வங்கிக் கணக்கையும் ஆதார் எண்ணையும் வழங்கினால் இந்த அரசாங்கம் அவர்கள் வங்கிக் கணக்கில் ஓரிரு நாளை ஓட்டுவதற்கான பணத் தொகையை அதில் டெபாஸிட் செய்யுமா? அந்தப் பணம் அவர்களுக்கு சரியாகப் போய்ச் சேருமா? அல்லது வேறு எங்காவது குவியுமா?
நாட்டின் பிரதமர் டிவியில் பேசும்போது மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் அறிவுரைகள் கூறுகிறார். அது எதிர்க்கட்சிகளின் வேலை. ஒரு அரசாங்கத்தின் வேலை என்ன? ஒரு பிரதமரின் வேலை என்ன? வேலைகள் செய்வதுதானே அரசாங்கத்தின், பிரதமரின் வேலை? அது பற்றி மக்களுக்கு விளக்கமளிப்பது… நடக்காத வேலைகள், குறைகள், அவை எவ்வாறு சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிப்பது… இவைதான் ஒரு ஆட்சியாளரின் கடமைகள்.
அறிவுரைகள் எளிதானவை யார் வேண்டுமானாலும் வழங்கலாம். மோதியும் பேசலாம் ஹீலர் பாஸ்கரும் பேசலாம். ஆனால் களத்தில் இறங்கி மாற்றத்தைச் சாதிக்கும் சக்தியும் எந்திரமும் அரசாங்கத்திடம்தான் உள்ளது. செய்ய முடியும், செய்ய வேண்டும்.