கோவா முதல்வர் மனோஹர் பர்ரிகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததையடுத்து, பிஜேபி-யை சேர்ந்த ப்ரமோத் சவாண்ட் என்பவர் கோவாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இன்று(மார்ச்,19) அதிகாலை 2 மணியளவில் கவர்னர் முன்பு பதவியேற்றார்.
40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டமன்றத்தில் பாஜக 12, காங்கிரஸ் 15 உறுப்பினர்கள் இருக்கின்றனர். கோவா ஃபார்வர்டு கட்சியைச் சேர்ந்த 3 பேர், எம்.ஜி.பி-யை சேர்ந்த 3, சுயேட்சைகள் 3 பேர் உள்ளனர். மேற்கூறிய சிறிய கட்சிகளின் 9 உறுப்பினர்கள் உடன் கூட்டணி சேர்ந்து, மொத்தம் 21 உறுப்பினர்கள் உடன் பாஜக ஆட்சி நடத்திவருகிறது. காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற 19 இடங்களில், 2 உறுப்பினர்கள் மறைவால் காலியானது. மேலும் 2 உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தனர்.
கடந்த ஞாயிறு(மார்ச்,17) அன்று கோவா முதல்வர் மனோஹர் பர்ரிகர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து நேற்று(மார்ச்,18) கோவாவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு, மாநில பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது . இதற்கிடையில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனால் கோவா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவியது. புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்திவந்தன.
இந்நிலையில், அமித்ஷா தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவாவின் சபாநாயகராக இருந்த பிஜேபி-யை சேர்ந்த ப்ரமோத் சவாண்ட் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று(மார்ச்,19) அதிகாலை கவர்னர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இவர் இளங்கலை ஆயுர்வேத மருத்துவர் பட்டம் மற்றும் சமூக பணியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.