கர்நாடகத்தைச் சேர்ந்த மேடை நாடக இயக்குநர் திரு.ரகுநந்தனா 2018ஆம் ஆண்டிற்காகத் தனக்கு அறிவிக்கப்பட்ட சங்கீத நாடக அகாதெமி விருதினை வாங்க மறுத்துள்ளார்.
சங்கீத நாடக அகாதெமி 1952 முதல் இசை, நாட்டியம், நாடகம் ஆகிய மூன்று துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் 2019ஆம் ஆண்டிற்கான நாடகத்துறை விருதுகளில் கர்நாடக மாநிலத்தின் சிறந்த மேடை நாடக ஆசிரியரும் கவிஞருமான திரு.ரகுநந்தனாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்விருதினை அவர் வாங்க மறுத்துள்ளார். இது குறித்து அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் “நாடெங்கிலும் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்; மக்கள் என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்பது வரையிலும் அவர்கள் தலையிடுகிறார்கள்! இந்தக் கொடூரமான கொலைகளில், நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆளும் அரசே சம்பந்தப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுத்த சமூகச் செயற்பாட்டாளர்களும் அறிஞர்களும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது குரல் நசுக்கப்படுகிறது. அந்தக் கட்சி இந்தக் கட்சி என்றில்லாமல் அதிகாரத்திலுள்ள அத்தனை பேரும் இதனையேதான் செய்கிறார்கள்” என்று திரு.ரகுநந்தனா தெரிவித்துள்ளார்.
மேலும் “நான் சங்கீத நாடக அகாதெமியை மதிக்கிறேன்; அவர்களது விருதினைப் பெற்றோரையும் தற்போது பெறுவோரையும் நான் மதிக்கிறேன். அகாதெமிக்கு எனது நன்றி. ஆனால் ஒரு நாடக ஆசிரியனாக, நாடகக் கலைஞனாக, கவிஞனாக என்னால் இந்த விருதை ஏற்றுக்கொள்ள இயலாது! உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்ற நெறிப்படி அறவழியில் பயணிக்கும் சமூகவாதிகளுக்கு அநீதி இழைக்கப்படும்போது என்னால் இவ்விருதினைப் பெறமுடியாது. என் உள்ளுணர்வு இதனை அனுமதிக்காது!” என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.