சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த தீர்மானத்தை எடுக்க வலியுறுத்தமாட்டோம் என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் சபாநாயகர் தனபால். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை என்று கூறி, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தது திமுக.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே இன்று (ஜூன் 28) காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மறைந்த எம்எல்ஏக்கள் கனகராஜ் மற்றும் ராதாமணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை அவை மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம். அன்றைய சூழலில் நம்பிக்கையில்லாத தீர்மானம் வேண்டும் என்று கடிதம் கொடுத்தோம். இப்போது அதை வலியுறுத்தவில்லை என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையைப் பொறுத்தவரை, அதற்கு திமுக ஆட்சிக் காலத்தில் எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அதில் ஒரு துளிகூட தற்போது இருக்கும் அதிமுக ஆட்சி கொடுக்கவில்லை. அதனால்தான் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. அதுவும் குறிப்பாகச் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு திமுக தொடர்ந்து குரல் எழுப்பிய பிறகே, அவசர அவசரமாக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளனர்.” என்று குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் சபாநாயகர் உட்பட 123 என்ற நிலையிலும், திமுக கூட்டணியின் பலம் 108 என்ற நிலையிலும் உள்ளது. இந்த சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தாலும்கூட பலனில்லை என்பதால் திமுக இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.