கொரோனா வைரஸ் கொள்ளை நோயை சிறப்பாகக் கையாண்ட நாடுகள் எதுவும் இதுவரை தேசிய அளவிலான, முழுமையான ஊரடங்கை அமலாக்கவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய செய்தி. சிங்கப்பூர், தாய்வான், ஜெர்மனி, துருக்கி என உதாரணங்கள் ஏராளம். கொரோனா கிளம்பிய சீனாவில்கூட ஹுபெய் மாகாணத்தை மட்டுமே முழு ஊரடங்கில் முடக்கினார்கள்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோதி 130 கோடி பேரை வீட்டில் இருக்க வேண்டும் என்று ஊரடங்கு பிறப்பித்துள்ளார். கொடிய கிருமியின் பரவலை இந்த ஊரடங்கு நிறுத்தி வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 21 நாட்களுக்குப் பிறகு என்னவாகும்? அதன் பிறகு வைரஸ் காணாமல் போகாது. தடுப்பூசி கிடைக்கும் வரை அது நடக்காது. அதற்கு சில மாதங்களாகும். அதுவும்கூட ஒரு நம்பிக்கைதான். சொல்லப் போனால் பல ஆண்டுகளுக்கு இது நம்மை ஒரு வழியாக்கப் போகிறது.

தேசிய ஊரடங்கைப் பிறப்பிக்காமல் பரிசோதனைகள் மூலமாக இந்தப் பிரச்சனையைக் கையாண்டிருக்க முடியும். அந்த வகையில் பார்க்கும் போது இந்த 21 நாள் ஊரடங்கின் போது பரிசோதனைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை நாம் பெருமளவில் அதிகமாக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் மருந்தோ, தடுப்பூசியோ கிடைக்கும் வரை நாம் சமாளிக்க முடியும்.

பார்க்க எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்; போகபோகத்தான் ஆபத்து புரியும்.

பெருமளவில் பரிசோதனைகள் மேற்கொள்வது பற்றி பிரதமரின் உரைகளில் எந்தத்க் தகவலும் இல்லை. வேகமாக, மலிவாக, எளிதாக டெஸ்ட் செய்ய வேண்டும். அடுத்தவர்களுக்கு நோயை தொற்றச் செய்யாமல் தனிமையில் வைத்திருக்க இதுதான் வழி.

கொரோனா நோயாளிகள் குறித்து இந்திய அதிகாரிகள் தரும் புள்ளி விவரங்களை நம்புகிற அளவுக்கு நீங்கள் முட்டாள்கள் இல்லை என நம்புகிறேன். திடீரென நிமோனியா வந்து செத்தவர்களை எல்லாம் பரிசோதனையே செய்யாமல், கொரோனா கணக்கில் சேர்க்காமல் அப்படியே முடித்துவிட்டார்கள்.

பெருமளவில் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இல்லாததும் டாக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தனி நபர்களைக் காக்கும் கவசங்கள் போதுமான அளவு இல்லாததும் மிகப் பெரிய தவறு. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு மோதி அரசுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம்தான் இந்த 21 நாட்கள். இது வேறு யாரையும்விட அவரின் மீதான பொறுப்பு. அதற்காக மாநில அரசுகளுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்று அர்த்தம் அல்ல.

ஆனால் திட்டமிடலிலும் அமலாக்கத்திலும் சிந்தித்து செயலற்றும் சக்தி மோதி அரசிடம் இல்லை என்பது இதுவரை வந்துள்ள சான்றுகளிலிருந்து புரிகிறது. இது இன்னொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை. டிவியில் தோன்றி, நாடகமாடி, அதையெல்லாம் சாதனை என போக்கு காட்டும் மோதியின் வழக்கமான வித்தை போல இது.

நாம் சாதிக்க வேண்டியது என்ன? எவ்வளவு பேர் மோடி சொன்னது போல வீட்டுக்குள் அடைந்து கிடந்தார்கள் என்பதையா? எத்தனை பேருக்கு நோய் பரிசோதனை மேற்கொண்டோம், எத்தனை டாக்டர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் கிடைத்தன, அரசாங்கம் எத்தனை வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்தது அல்லது ஏற்பாடு செய்தது என்பதுதான் நாம் சாதிக்க வேண்டியவை. நோய் வந்தவர்களை தனிப்படுத்தும் இடங்களை உருவாக்குவது மற்றொரு இலக்கு. தற்காலிக மைதானங்களில் தற்காலிக மருத்துவமனைகளையும் க்வாரன்டைன் வசதிகளையும் உருவாக்குவதுதான் நமது தேவை.

இது போன்ற நுணுக்கமான விஷயங்களில் செயலாற்றுவதற்கான பொறுமையோ ஆர்வமோ மோதிக்கு கிடையாது. அடுத்து தேசத்திற்கு கொடுக்க வேண்டிய பிரம்மாண்ட பிரச்சார மெஸேஜுக்கான டிஸைன் தயார் செய்வதில் அவர் பிஸியாக இருக்கலாம். தனது பேச்சாற்றலுக்காக கைத்தட்டல் வாங்குவதற்காக காத்திருக்கலாம். கஷ்டமான காரியங்களை எல்லாம் அவர் மாநில அரசுகளின் பக்கம் தள்ளிவிட்டுவார். இந்தக் கொடிய காலத்தில் தனது அரசியல் பரமபத ஆட்டத்தில் மட்டுமே அவர் கவனமாக இருப்பார்.

கொரோனா வைரஸ் உங்களைக் கொல்லாவிட்டால்…

கொள்ளை நோயிலிருந்து தப்பினால்கூட அதற்கடுத்து வரவிருக்கும் பொருளாதாரச் சரிவிலிருந்து நாம் மீள மாட்டோம். ஆனால் பொருளாதாரம் பற்றியெல்லாம் மோடி ஒரு இம்மியும் யோசிக்கவில்லை. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மையை உருவாக்கிய ஆட்சிக் கால கோலங்களின் மோசமான பொருளாதாரத்தின் மீதுதான் அவர் மீண்டும் ஒரு முறை ஆட்சியைப் பிடித்தார். அவர் ஏன் பொருளாதாரம் பற்றி கவலைப்பட வேண்டும்?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டியும் சந்தையின் தேவையினை சாவடித்தது. இப்போது, தெளிவாகத் திட்டமிடப்படாத தேசிய ஊரடங்கு வினியோகச் சங்கிலியையும் அறுத்துப் போட்டுவிடும். இந்தியாவின் மாபெரும் கண்டுபிடிப்பான பூஜ்ஜியத்தை நாம் இறுக அணைத்துக்கொண்டு படுக்க வேண்டியதுதான்.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு 8 மணிக்கு மோதி தேசிய ஊரடங்கை அறிவித்தார். அந்த நள்ளிரவிலேயே ஊரடங்கு துவங்கியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை போலவே. அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாமே… காலை 8 மணிக்கு அறிவிப்பைச் செய்திருக்க முடியும் அல்லவா? இரவு 8 மணிக்கு அறிவித்தால்தானே சீரியல் பைத்தியங்கள் நிறைந்த ப்ரைம் டைமில் எல்லோரையும் எட்டிப் பிடிக்க முடியும்.

உள்துறை அமைச்சகம் சில விதிவிலக்குகளை அறிவித்தது. ஆனால் தெருவில் பட்டக்ஸில் அடிக்கும் போலீஸிடம் அதைக் கூறிப் பாருங்கள். இந்திய போலீஸ் தான் எப்போதுமே செய்ய விரும்புவதைத் தெருக்களில் செய்கிறது: லத்தியைக் கொண்டு இந்தியர்களை அடிப்பது. இதற்கிடையே மாநில எல்லைகளுக்கிடையில் லட்சக்கணக்கான லாரிகள் மாட்டிக்கொண்டு சாலை ஓரங்களில் நிற்கின்றன. அத்தியாவசிய பொருட்களின் வினியோகச் சங்கிலி அறுந்துக் கிடக்கிறது. மருந்து, பால், காய்கறி, உணவு, செய்தித் தாள் வினியோகம் அடிவாங்கியிருக்கிறது. பயிர் அறுவடை பற்றி ராபி பருவம் பற்றி பிரதமர் அலுவலகத்தில் யாருக்கேனும் தெரியுமா என தெரியவில்லை. ஊரடங்கின் போது எவ்வாறு அறுவடை செய்வது என விவசாயிகள் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். மோதி போல இவ்வளவு புத்திசாலித்தனமான பிரதமர் யாருக்கும் கிடைக்க மாட்டார். ஏனென்றால் இந்த கொள்ளை நோயைத் தடுப்பதற்கான மருத்துவ வினியோகத்தையும் சேர்த்துதான் அவர் ஊரடங்கின் முடக்கிவிட்டார்.

நிதி நிவாரணத்தை அறிவிக்காத ஒரே உலகத் தலைவரும் நமது மோதி மட்டுமே. தனது முதல் உரையில் நிதியமைச்சகத்தின் தலைமையில் ஒரு கமிட்டி கூடும் என்றார். ஆனால் பிரதமரின் உரைக்குப் பிறகுதான் அப்படி ஒரு கமிட்டி பற்றியே தங்களுக்குத் தெரியும் என்று நிதியமைச்சகத்தில் உள்ள பலர் கூறினார்கள். கொரோனாவை சமாளிக்க 15,000 கோடி ரூபாயை அறிவித்தார். ஆனால் அந்தத் தொகை புது தில்லியின் மத்திய பகுதியை மாற்றி அமைக்கும் தனது சுய மோக அரசியல் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டதைவிட 5,000 கோடி ரூபாய் குறைவு.

இந்த விகிதத்தில் போனால் அதிக இந்தியர்கள் கொரோனாவால் அல்லாமல் பட்டினியால் சாவார்கள். நிர்வாகத் திறன்களில் பூஜ்ஜியமாக இருக்கும் மோதி, நுணுக்கங்களில் பூஜ்ஜியமாக இருக்கும் மோதி, அதே சமயத்தில் வாய் அளப்பதில் வல்லவராக இருக்கும் மோதி இந்தப் பிரச்சனையை பேரிடராக மாற்றிவிடுவார். இன்னும் சில வாரங்களில் நமது முகத்தில் அறையும் இரண்டு உண்மைகளை நாம் எதிர்கொள்ளப் போகிறோம்: ஒன்று, அதிகாரபூர்வ கொரோனா பாதிப்பிற்கும் நிஜமான பாதிப்பிற்கும் உள்ள இடைவெளி. இரண்டு, 1980களுக்குத் திரும்பிச் செல்லும் பொருளாதாரம் ஏற்படுத்தும் பாதிப்பு.

 

நன்றி:

Modi’s poorly planned lockdown won’t save us from coronavirus, but will kill economy